மானிடரின் நிலையில்லா வாழ்வினை அடிக்கடி நிகழும் எதிர்பாராத மரணங்கள் உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பிரதம பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜுதீனின் மரணச் செய்தி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றித் தெரிவித்த அவர்,
“துன்யாவின் அந்தஸ்துக்களை பொருட்படுத்தாத மானிட நேயன் மர்ஹூம் சிராஜுதீன். பட்டம், பதவிகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பொதுப்பணி செய்த பெருந்தகையாகவே அவரை நான் கண்டேன்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக் குழு உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில், பாடசாலை வளர்ச்சிக்காக பல்முனைப் பார்வைகளில் சிராஜுதீன் குறிவைத்தார். ஒன்பது அடுக்குமாடிக் கட்டடத்தைப் பெறுவதிலும் இவரது பங்கு மிகக் காத்திரமானதே!
அவர் எமது கட்சியுடன் இணைந்து, கடந்த மாநகர சபை தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அவரது நற்பண்பையும் கல்வியறிவையும் கடந்த கால சேவைகளையும் கண்டுகொண்டுதான், கட்சிக்குக் கிடைத்த போனஸ் ஆசனத்தை அவருக்கு வழங்கி, அவரை கௌரவப்படுத்தினோம். அதனை, எமது கட்சிக்கான கௌரவமாகவும் கல்விச் சமூகத்திற்கு கட்சி வழங்குகின்ற அங்கீகாரமாகவுமே நாங்கள் பார்க்கின்றோம். கல்வியியலாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எமது கட்சியின் நிலைப்பாட்டின் அடிப்படையில், அந்த போனஸ் ஆசனத்தை அவருக்கு வழங்கியதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
எல்லோருக்கும் பொதுவான மரணத்தை நிச்சயித்த எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்ந்த சுவன பாக்கியத்தை அருள்வானாக! அவரது குடும்பத்துக்கும் ஆறுதலளிப்பானாக! ஆமீன்!
திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை, குச்சவெளி பகுதிகளுக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
“நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த வெற்றிக்காக வாக்களித்த சகலருக்கும் எனது நன்றிகள். எந்த வெற்றியைப் பெற்றாலும் பல சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடம் மண்டியிடும் அல்லது மன்றாடும் நிலையையும் இந்த தேர்தல் முறை ஏற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரிந்தவரை கற்பிட்டியில் ஒரு உறுப்பினருக்கு 25 இலட்சம் ரூபா தருவதாகவும் விலை பேசப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தை விலை பேசும் இந்த தேர்தல் முறையை மாற்றுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் புத்தளம் – மன்னார் பாதையை இந்த அரசாங்கம் நிரந்தரமாக மூடிவிட்டது. இப்பாதை மூடப்பட்டதை இனவாதமாகவே பார்க்கிறோம். ஏற்கனவே திறக்கப்பட்டிருந்த இந்தப் பாதையை மூடுமாறு, இனவாத அரச சார்பற்ற நிறுவனங்களே வழக்குத் தொடர்ந்தன. ஹம்பாந்தோட்டையில் அல்லது குருநாகலில் இவ்வாறான பாதையை மூடுவார்களா? இந்தப் பாதையைத் திறந்து தருவதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தனர். இவையெல்லாம் காற்றில் பறந்துவிட்டன.
இப்போது நீதித் துறை இப்பாதை விவகாரத்தில் தலையிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை மீள் பரிசீலனை செய்ய ஐந்து நீதியரசர்கள்கொண்ட குழாமை நியமிக்குமாறு கோருகின்றேன். இனவாதிகளுடன் வாழ முடியாதென்பதற்காக ஒரு யுத்தத்தையே எதிர்கொண்ட நாடிது. இதனால், பல சமூகத்தினரும் அழிந்தனர். நானுட்பட எனது முஸ்லிம் சமூகமும் அகதியானது.
மேலும், மக்களின் பிரதிநிதிகளான எமது பாதுகாப்புக்கு இரண்டு பொலிஸாரையாவாது தாருங்கள். ஆங்காங்கே கண்டெடுக்கப்படும் ஆயுதங்கள், யாரைக் குறிவைப்பதற்கு கொண்டுவரப்பட்டவையோ தெரியாது. வீதிகளில் பயணிக்கும்போது குடி வெறியர்களையும் எதிர்கொள்கிறோம். எனவே, எங்களை பாதுகாருங்கள். எதைச் சொன்னாலும் இந்த சபாநாயகர் கேட்பதாக இல்லை. நான் 24 வருடங்கள் கண்டிராத ஒரு பொம்மை சபாநாயகரையே இப்போது காண்கிறேன்.
ஆறு மாதங்களாகியும் எங்களை எந்தவொரு கூட்டங்களுக்கும் அழைக்கவில்லை. பன்முகப்படுத்தப்ட்ட நிதியிலிருந்து ஒரு சதக் காசையாவது மக்களின் அபிவிருத்திகளுக்கு வழங்கவில்லை” என்று கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 09 உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்புக்களில் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!
கடந்த வெள்ளிக்கிழமை (11) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.
அந்தவகையில், ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபையில், புளிச்சாக்குளம் – ஆண்டிமுனை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் ஹில்மி முர்ஷித்தின் கட்சிக் கிளை காரியாலயத் திறப்பு நிகழ்வு புளிச்சாக்குளத்திலும், புத்தளம் பிரதேச சபையில், பொத்துவில்லு வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீதின் கட்சிக் கிளை காரியாலயத் திறப்பு நிகழ்வு நாகவில்லிலும் இடம்பெற்றது.
அத்துடன், கல்பிட்டிய பிரதேச சபையில், கரம்பை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் M.A.M.ஆஸ்கீன் மற்றும் பட்டியல் வேட்பாளர் நஹ்லானை ஆதரித்து கரம்பை – சபா மர்வா (A,B), சிலாவத்துறை ஹைராத், இலந்தமோட்டை, சம்சம் நகர், உளுக்காப்பள்ளம், ஹுசைனியாபுரம், ஹுசைனியாபுரம் மேற்கு, 25 ஏக்கர் ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில்,
“இன்று ஒரு முக்கியமான சட்டமூலத்தை கொண்டுவந்திருக்கிறீர்கள். அதற்கு நாங்களும் ஆதரவளிக்கின்றோம். இது நாட்டுக்குத் தேவையானதொன்று சட்டமூலம். எனவே, அதற்காக நன்றி கூறுகின்றோம்.
ஆனால், ஒரு சில விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றேன். இந்த அரசாங்கம் அதிகமான மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம். சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள், பெரிய எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கிவிட்டு வந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் கூறிய விடயங்களை நிறைவேற்றுகிறீர்களா? என்று மக்கள் உங்களை உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கடந்த காலங்களில் பிமல் ரத்நாயக்க போன்றவர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் பிமல் ரத்நாயக்கதான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
இருந்தபோதிலும், அண்மையில், ருஷ்தி என்ற நபரை கைது செய்தமை ஒரு பெரிய பேசுபொருளாக மாறியது. இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கரை ஒட்டினார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டது தவறல்ல, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதவானுடைய உத்தரவின் பேரில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், அந்த விடயம் தவறாகப் பேசப்பட்டிருக்கமாட்டாது. ஆனால், பயங்கரவாத தடை சட்டத்துக்கு (PTA) கீழ் அவரைக் கைது செய்தமையை, பொலிஸாரின் ஒரு கேவலமான செயலாகவே நான் பார்க்கிறேன். இது இந்த அரசாங்கத்துக்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை, எதிர்காலத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பொலிஸாரும் யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இதனை செய்தார்களோ தெரியவில்லை. எனவே, அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
கடந்த காலங்களில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் PTA வுக்கு எதிராக அதிகமாக பேசிய ஒருவர். இந்த PTA சட்டத்தினூடாக அநியாயமாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இலங்கை வரலாற்றில், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் PTA வுக்கு கீழ் கைது செய்யப்பட்டார் என்றால், அது நானாக மாத்திரம்தான் இருப்பேன். இன்று நான் நிரபராதி. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு எனக்கு சம்பந்தம் இல்லை என்று நீதிமன்றத்தால் சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன்.
அதேபோன்று, ஆசாத் சாலி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜெஸீம், ராசிக் உள்ளிட்ட இன்னும் பல சகோதரர்களை, PTA வினூடாக அநியாயமாக கைது செய்தனர். ஈஸ்டர் தாக்குதலை யாரோ செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக அநியாயமாக PTA சட்டத்தை பயன்படுத்தினர்.
இன்றும் கூட, இதற்கு முன்னர் PTAவுக்கு கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், கல்விமான்கள் ஆகியோர் 4, 5 வருடகாலமாக சிறையில் வாடுகின்றனர். அவர்களது பிள்ளைகள் இன்று பிச்சை எடுக்கின்றனர். நேற்று ஒரு தாய் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நான் பிச்சை எடுத்து என் பிள்ளைகளை வளர்க்கின்றேன்” என்று கூறினார்.
எனவே, இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஈஸ்டர் குண்டு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகையால், தயவுசெய்து நீதி அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, அநியாயமாக சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றவர்களை, அவசரமாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.
மேலும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு; அவர் ஒரு பிரபலமான சட்டத்தரணி. இன்னும் அவரது வழக்கு முடித்துவைக்கப்படவில்லை. அதேபோன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர், நான் புத்தளத்திலிருந்து அகதி மக்களை வாக்களிப்பதற்காக அழைத்துச் சென்றேன் என்ற வழக்கில், என்னை தேடி அலைந்தனர். எனக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிலரை அநியாயமாகக் கைது செய்தனர். என்னை நிரபராதி என்று நீதிமன்றம் விடுவித்த போதும், எனக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களின் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது. ஐந்து வருடங்களாக அவர்கள் நீதிமன்றம் ஏறி இறங்குகின்றனர். அவர்கள் என்னை ஒழித்துவைக்கவும் இல்லை, அவர்கள் அதற்கு சம்பந்தமும் இல்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில், அந்த வழக்கு இன்னும் முடித்துவைக்கப்படாமல் இழுவை நிலையே காணப்படுகின்றது. எனவே, சட்டமா அதிபர் திணைக்களம், இவ்வாறான வழக்குகளை கிடப்பிலே போடாமல், இழுபறி நிலையை மாற்றி, அவசரமாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோன்று, இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை நீங்கள் சாதாரணமாக நினைக்காதீர்கள். இவ்வாறுதான் பாலஸ்தீனத்திற்குள்ளும் இஸ்ரேலியர்கள் புகுந்து, இன்று பாலஸ்தீனம் அழிந்துகொண்டிருக்கின்றது. அந்த மக்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பச்சிளம் குழந்தைகள் பலியாகின்றன. ஐ.நா சபை கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவினதும் நெதன்யாகுவினதும் அடாவடித்தனத்தை கேட்பார்பார்ப்பார் யாருமில்லாத ஒரு துர்பாக்கிய நிலையில், அந்த நாடு இருக்கின்றது.
அவ்வாறு, அந்த மக்கள் துன்பப்படுகின்றபோது, இஸ்ரேலியர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்து, இங்குள்ள பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்றனர். வெளிகமையில் ஒரு மதஸ்தாபனம், கொழும்பில் ஒரு மதஸ்தாபனம் உட்பட சொத்துக்களையும் வாங்குகின்றனர். சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி, இந்த நாட்டை சுடுகாடாக மாற்றி, ஒரு மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
எனவே, தயவுசெய்து இஸ்ரேலியர்களின் வருகையை இலேசாகக் கருதிவிடாதீர்கள். அவர்களுக்காக இங்குள்ள மக்களை தண்டிக்காதீர்கள். இஸ்ரேலியர்களை பாதுகாப்பது என்பது, நமது நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு நீங்கள் இடும் அடித்தளம் என்பதை மனதிற்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொடிகாவத்த – முல்லேரியா பிரதேச சபைகளில் ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (03) கொழும்பில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தெஹிவளை-கல்கிஸ்ஸ மநாகர சபை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
“முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு, முழு முஸ்லிம்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. இவர்களின் கொடூரங்கள் இல்லாதொழிய அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்!
ஈமானின் பலத்திலும் பக்குவத்திலும் இந்நேரத்தில் நாம் அணிதிரள்வதே முஸ்லிம் சமூகத்துக்கு பாதுகாப்பாக அமையும். முஸ்லிம்களின் ஈமானை எந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அழிக்க முடியாது. இதற்கு காஸா மக்கள் சிறந்த அத்தாட்சி. இருப்பைப் பலப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் ஈனச்செயல்களும் இழி செயல்களும் இறுதியில் மண்கவ்வவே செய்யும். “இறுதி வெற்றி எமக்கே!” என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் உள்ளோம்.
அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து நோன்பு நோற்று, நல்லமல்கள் செய்த நாம், ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நெருக்கடிகள், சோதனைகளின்போது பொறுமை மற்றும் தொழுகையுடன் உதவி தேடுவதே சிறந்தது. ரமழானின் பக்குவங்கள் நமது முன்னேற்றப் பாதைகளுக்கு உறுதியாக அமையட்டும்.
எமது நாட்டு அரசியல் போக்குகளும் ஆரோக்கியமாகத் தென்படவில்லை. அரச உயர்மட்டத்தில், திரைமறைவில் அரங்கேற்றப்படும் முஸ்லிம் விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். சமூகங்களை நேசிக்கின்ற மற்றும் மத நம்பிக்கைகளை கௌரவப்படுத்துகின்ற நிலைப்பாட்டுக்கு இந்த அரசாங்கம் வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, புனித ரமலான் மாதத்தில், காசா மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பிலும் எமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம்.
மேலும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"Had a meaningful discussion today with the U.S. Ambassador to Sri Lanka @USAmbSL on our longstanding partnership and its role in stability and prosperity. . 1/2 pic.twitter.com/vwGMAms7Kz
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஏ.கே.அமீர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே.அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக, அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும்” எனவும் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வியாழக்கிழமை (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்தது.
அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாத்தளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, கரைத்துரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை மற்றும் நாத்தாண்டிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் புத்தளம் மாநகர சபை, வனாத்தவில்லு பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, சிலாபம் பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகர சபை, குருநாகல் பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை,, பண்டுவஸ்நுவர பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து தனது மயில் சின்னத்திலும் பொல்கஹவெல பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவபொத்தான பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, கெப்பெட்டிகொல்லாவ பிரதேச சபை, பலாகல பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கண்டி மாவட்டத்தில் உடுநுவர பிரதேச சபை, பூஜாபிட்டிய பிரதேச சபை, பாததும்பர பிரதேச சபை, , பாதஹேவாஹெட்ட பிரதேச சபை, உடபலாத பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை, ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, மொரவெவ பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை பிரதேச சபை மற்றும் பண்டாரகம பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் பேருவளை நகரசபை, பேருவளை பிரதேச சபை, களுத்துறை மா நகரசபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தில் கொலொன்னாவை நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தியில்,
“உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் மூலமே கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கோள்ள முடியும். தேசிய அரசியலில் நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசியல் செய்த போதும், ஜனாபதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாம் ஆதரித்த வேட்பாளர்களுக்கு, எமது கட்சி சார்ந்த உறவுகளும் பொதுமக்களும் நலன்விரும்பிகளும் அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.
எனினும், ஆட்சி முறைமை மாற்றங்களினால் நாம் பின்னடைவை சந்தித்திருந்த போதும், எமது கட்சியின் வாக்குத்தளத்தில் எந்தவிதமான சரிவும் ஏற்படவில்லை.
அந்தவகையில், சமூக நலனை முன்னிறுத்தி வாக்காளர்களாகிய நீங்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாக்களித்தால், நாம் மீண்டும் முன்னரைப் போன்று அநேக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற முடியும் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இன்றைய தினம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன், நம்பிக்கையுடன் பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..!”
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை, வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள போட்டியிடும் சபைகளுக்கான கட்டுப்பணம், கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளினால் செலுத்தப்பட்டது.
அந்தவகையில், அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதற்காக, ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிகா கமகே மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான பாரி, லரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் தனித்துப் போட்டியிடுவதற்காக, பத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர் முன்னாள் கிண்ணியா நகரபிதா Dr.ஹில்மி மஹ்ரூப், கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் விவசாய போதானாசிரியர் அனீஸ் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில்,
“ஒலுவில் துறைமுகம் தொடர்பில் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு விடயங்களும் முன்வைக்கப்படவில்லை. இது சம்பந்தமாக நான் ஏற்கனவே பேசியிருகின்றேன். ஒலுவில் துறைமுகத்தினால் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்தவொரு பயனும் இல்லை. எனவே, இது சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை சபையில் தெளிவுபடுத்துமாறு வேண்டுகின்றேன்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிட்டங்கி பாலம்,மாவடிப்பள்ளி பாலம் ஆகியன மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத ஒன்று. இந்த இரண்டு பாலங்களும் மிகவும் முக்கியமானவை. இதனை அடுத்த வரவுசெலவுத் திட்டத்திலாவது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும், மாவடிப்பள்ளி – கல்முனை பாதைக்கான மாற்றுப்பாதை போடப்பட்டு, ஏதோ சதி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. அந்தப் பாதை உயர்த்தி போடப்படாமையினால், பொலிவேரியன் கிராமம் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதி மக்களும் பாரிய அவலங்களுக்குள்ளாகினர். எனவே, இது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றேன்.
அதேபோன்று, ஒலுவில், அஷ்ரப் நகரை ஊடறுத்துச் செல்கின்ற தீகவாபி பாதையையும் கொங்கிரீட் அல்லது காப்பட் வீதியாக பூரணப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. மன்னார் நகரிலிருந்து புகையிரத நிலையத்திற்கு செல்கின்ற, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) கீழ் உள்ள முக்கியமான பாதை இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது. அதேபோன்று, முருங்கன் – சிலாவத்துறை வீதி ஆகியவற்றையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும், வட்டுவாகள் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ரூபா நீங்கள் ஒதுக்கியிருக்கின்றீர்கள். அதற்கு வன்னி மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றோம். ஆனால், அதன் மதிப்பீடு 2750 மில்லியன் ரூபாவாகும். எனவே, இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோன்று, வவுனியா, பரயனாளங்குளம் பாதை, வெளிக்குளம், மாமடுவ பாதையும் இன்னும் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன. நேரியகுளத்திலிருந்து நெளுக்குளம் செல்கின்ற பாதையில் 12 கிலோமீட்டரில் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. மழை காலங்களில் வெள்ளத்தினால் அப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
புத்தளம் நகரத்தில் உள்ள பாதைகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல், சாதாரண ஆட்டோ ஒன்றுகூட செல்ல முடியாத துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. நான் கடந்த அரசாங்கத்துடன் பேசி, 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. புதிய அரசு வந்ததும் அந்த நிதி சுற்றறிக்கை மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்குமான கப்பல் சேவை இருந்த காலத்தில், மன்னார் ஒரு பொருளாதார கேந்திர தளமாக விளங்கியது. அன்றைய காலகட்டத்தில், அந்த மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்தார்கள். எனவே, இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, மன்னார் – புத்தளம் பாதை, மன்னாரிலிருந்து மறிச்சுக்கட்டி வரை, புத்தளம் முதல் எலுவன்குளம் வரையிலும் காப்பட் பாதையாக போடப்பட்டுள்ளது. சிறிய பகுதியே புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகின்றது. சில அரசு சார்பற்ற நிறுவனங்கள், அவர்களின் சொந்த தேவைகளுக்காக, அந்தப் பாதையை மூடுமாறும் புனரமைக்க வேண்டாம் எனவும் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்கள். ஆனால், நீதிமன்றம் இந்தப் பாதையை மூடுமாறு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, அமைச்சர் பிமல் ரத்னாயக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, சட்டமா அதிபருடன் பேசி, சுற்றாடல் அமைச்சினது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, இந்தப் பாதையை மக்கள் பாவனைக்கு புனரமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். நூறு வருடத்திற்கு மேலாக பழமை வாய்ந்த அந்தப் பாதையினை பபயன்படுத்தப்படுகின்றபோது 100 கிலோமீட்டர் மிச்சப்படுத்தப்படும்.
அதேபோன்று, குருநாகல் – கண்டி அதிவேகப் பாதையினை வடக்கு, கிழக்குடன் இணைப்பதன் மூலம், அந்தப் பிரதேசங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும்.
சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பூரணப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றன. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களின் போது, அந்த வீட்டுத் திட்டங்களில் வசிக்கும் மக்கள் எம்மிடம் வந்து அழுது புலம்புகின்றனர். ஆட்சி மாறியதன் பின்னர் கோட்டா அரசாங்கம் அந்த வீட்டுத் திட்டப் பணிகளை பூர்த்தி செய்யவில்லை. கோட்டாவின் அவ்வாறான இனவாத செயற்பாடுகளினால்தான் அவர் விரட்டியடிக்கப்பட்டார். எனவே, அவ்வாறான செயல்களை நீங்களும் செய்யாதீர்கள். சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது மக்களுக்கான வீட்டுத்திட்டம். எனவே, அந்த வீடுகளை கட்டி முடிக்க உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அத்துடன், சிலாவத்துறையில் ஒரு கலாச்சார மண்டபத்தை கட்டினோம். 20 சதவீத வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் நான்கு வருட காலமாக எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்யாமல் இழுத்தடித்தது. இந்தக் கட்டிடத்தின் பணிகளை நிறைவுசெய்து தாருங்கள். அரசிடம் பணம் இல்லையெனில் வெளிநாடுகளின் உதவியைப் பெற்றாவது இந்தக் கட்டிடத்தின் பணிகளை நிறைவுசெய்ய முன்வாருங்கள். இது தொடர்பில் சில நாடுகளுடன் நான் பேசியுள்ளேன். வெளிநாடுகள் உதவி செய்யத் தயாராக உள்ளன” என்று கூறினார்.
இவற்றுக்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக, “சுற்றாடல் பிரதி அமைச்சர் நாளை மறுதினம் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நீங்கள் குறிப்பிட்ட இடங்களையும் அவர் பார்வையிடுவார். அதன் பிற்பாடு தங்களுடன் கலந்துரையாடுகின்றேன்” என்று கூறினார்.
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இன்றைய தினம் முக்கியமான இரண்டு அமைச்சுக்களுடைய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதில் குறிப்பாக. கிராமிய அபிவிருத்தி சம்பந்தமாக பல நல்ல கருத்துக்கள் இந்த சபையிலே முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கடந்த அரசாங்கங்கள் ஜனசக்தி, ஜனசவிய, சமுர்த்தி இப்பொழுது அஸ்வெசும போன்ற தலைப்பிலே, வறுமையை போக்குவதற்காக பல திட்டங்களை கொண்டுவந்தாலும் வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கின்றவர்கள் அப்படியேதான் இருக்கின்றார்கள். அதிகமான திட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதாக இருந்ததும் இதனுடைய முன்னேற்றமின்மைக்கான காரணமாக நாங்கள் பார்க்கிறோம்.
அஸ்வெசும திட்டத்தை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது. இப்பொழுது இந்த அரசாங்கமும் அதை முன்னெடுத்துச் செல்கின்றது. கடந்த அரசாங்கம் அதை ஆரம்பிக்கும்போது, தகுதியானவர்களை தெரிவுசெய்யும் விடயத்தில் தவறிழைத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சமுர்த்தி அதிகாரிகள் இருந்தபோதும், அஸ்வெசும திட்டத்தை வேறொரு திட்டம் போன்று கொண்டுவந்து, தகுதியான பலர் இருக்க, தகுதி இல்லாத பலர் அதனை பெறுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை எமது மாவட்டங்களில் காணக்கூடியதாக இருந்தது. எனவே, எதிர்காலத்திலாவது அதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கியூ. ஆர் (QR code) முறையிலேயே ஆட்களை தெரிவுசெய்கின்றபோது, அங்கு தவறுகள் இழைக்கப்படுகின்றதா? இல்லையா? என்பதை பார்வையிடுவதற்கான மேலதிகாரிகள் இல்லை. அதை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் பொறுப்புக்கொடுத்து, இறுதியாக அவர்களின் முடிவுக்கு விடும் பட்சத்தில், பாதிக்கப்படுகின்ற மக்கள் சென்று முறையிடுவதற்கும் நியாயம் கேட்பதற்கும் ஒரு பிரதேச செயலாளர் இருப்பார். எனவே, அரசாங்கம் தயவு செய்து இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதேபோன்று, இந்த அஸ்வெசும திட்டத்தை சமுர்த்தி வங்கிகளில் நீங்கள் பயன்படுத்த முடியும். 1083 சமுர்த்தி வங்கிகள் இருக்கின்றன. அந்த வங்கிகளின் ஊடாக இந்தத் திட்டத்தை வழங்கலாம். அந்த வங்கிகளை பயன்படுத்துகின்றபோது, மக்களுக்கும் இலகுவாக இருக்கும். அதனால் அந்த சமுர்த்தி வங்கிகளும் பிரயோசனமடையும். புதிய புதிய வங்கிகளெல்லாம் நவீன மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தாலும், சமுர்த்தி வங்கிகள் நவீன மயப்படுத்தப்படவில்லை. எனவே, அந்த விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, 1994ஆம் ஆண்டு சேவைக்கு வந்த சமுர்த்தி அதிகாரிகளுக்கு, 30 வருடங்களாக இதுவரையில் பதவி உயர்வுகள் கிடையாது. அவர்களுக்குப் பிறகு நியமனம் பெற்ற பல திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு காலத்துக்கு காலம் பதவி உயர்வுகள் கிடைக்கின்ற போதும், இந்த அதிகாரிகளுக்கு எந்தவொரு பதவி உயர்வுகளும் இதுவரையில் இல்லை. அவர்கள் ஓய்வுபெற்று செல்கின்ற வேளையிலும் அதே நிலையிலிருந்துதான் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இது தொடர்பிலும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
மேலும், நடைமுறைப்படுத்தப்படுகின்ற அஸ்வெசும திட்டத்தில், இன்னும் அதிகமானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
வன்னி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊனமுற்றவர்கள், பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்கள் என பலர் இருக்கின்றார்கள். அவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களினால் தொழில் செய்ய முடியாத நிலை மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. எனவே, இந்த அஸ்வெசும போன்ற திட்டங்கள் வழங்கப்படுகின்ற போது, அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களும் பயனடையக்கூடிய விசேட திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோன்று, மீனவ அமைச்சர் யாழ்ப்பாணத்தில்தான் வாழ்ந்து வருகிறார். மீனவச் சமூகம் எவ்வாறான கஷ்டங்களை எதிர்நோக்குகிறார்கள் என்று அவருக்கு தெரியும். குறிப்பாக, இந்திய ரோலர் படகுகளினால் எமது மீனவர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எமது நாட்டில் மீனவர்களுக்கு அத்தனை சட்டங்களும் போடப்பட்டிருக்கின்றன. ஆனால். இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் அனைத்துச் சட்டங்களையும் மீறி, எமது கரை வரை வந்து அத்தனை மீன்களையும் பிடித்துக்கொண்டு செல்லும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
அனைத்து அரசாங்கங்களும் அமைச்சர்களும் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி வருகின்றனரே தவிர, எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக நாங்கள் காணவில்லை. எனவே, கடற்படையினருடன் இணைந்து இதனை தடுப்பதற்கான இறுக்கமான திட்டத்தை வகுக்கின்றபோது மட்டுமே, இதனை தடுத்து நிறுத்த முடியும். இல்லையெனில், எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையைதான் எதிர்கொள்ள நேரிடும்.
அத்துடன், நன்னீர் மீன்பிடியை வலுப்படுத்துவதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நன்னீர் மீன்பிடித் துறைக்காக பல நல்ல திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும். இந்திய அரசு, இலங்கையில் எக்குவா கல்சர் எக்ஸலண்ட் சென்டர் ஒன்றை மன்னாரில் அமைப்பதற்கு 10 மில்லியன் டொலர்களை தருவதாக வாக்குறுதியளித்துள்ளது.. அமைச்சர் அவர்கள் அவசரமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது, மன்னார் மட்டுமல்ல குறிப்பாக, வடக்கு, கிழக்கு மக்கள் அதனால் பயனடைய முடியும்.
இந்தத் திட்டத்தின் ஊடாக எத்தனையோ நாடுகள் இன்று பொருளாதார ரீதியாக வளம் பெற்றிருக்கின்றது. வியட்நாம் போன்ற நாடுகளில் பெரியளவில் பொருளாதாரத்தை பெற்றுக்கொடுக்கின்ற ஒரு துறையாக இந்தத் துறை காணப்படுகின்றது. இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அது முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில அதிகாரிகளின் செல்வாக்கினால், முறையான திட்டமிடல் இல்லாமல் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனால், சாதாரண மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். வெள்ளப் பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஒரு நல்ல திட்டமிடலுடன் அவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக இந்தத் திட்டத்தை வழங்கியுள்ளது. அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றி செலுத்துகின்றோம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் இழுபறிநிலை காணப்படுகிறது. எனவே, அவசரமாக அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்..
அதேபோன்று, “வங்காலை கிராமம்” மன்னாரில் இருக்கக்கூடிய ஒரு பெரிய மீன்பிடி கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தடுப்பதற்கு சுவர் அமைப்பதற்கான நிதியை நாங்கள் கடந்த காலங்களில் ஒதுக்கி கொடுத்த போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள், கல்வி அதிகாரிகள் இருக்கக்கூடிய ஒரு கத்தோலிக்க கிராமமான வங்காலை, அழிந்து போகின்ற ஒரு ஆபத்தான நிலையை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. எனவே, அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மீனவ அமைச்சுக்கு உள்ளது.
மேலும், எமது பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அன்று அமைச்சராக இருந்தபோது கட்டிய ஒலுவில் துறைமுகம், இன்று மக்களுக்கு பயனற்றதாகியிருக்கின்றது. அந்தத் துறைமுகத்தின் தாக்கம் நிந்தவூர், கல்முனை, திருக்கோயில் போன்ற இன்னோரன்ன பல பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் மீனவர்களுக்கும் பாதிப்பாக இருக்கின்றது. ஒலுவில் துறைமுகத்தை கடந்த அரசாங்கத்தில் இருந்த மீன்பிடி அமைச்சு பொறுப்பேற்றது. இருப்பினும், எவ்வித வேலைத்திட்டத்தையும் செய்ததாக நாங்கள் காணவில்லை.
எனவே, ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்பட்டால் IMUL மீன்பிடி படகுகளை செலுத்துகின்றவர்கள் பெரிதும் பயனடைவார்கள். கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று போன்ற பகுதிகளில் IMUL மீன்பிடி படகுகளை செலுத்துகின்றவர்கள், தற்பொழுது வாழைச்சேனையில்தான் தங்களுடைய படகுகளை கட்ட வேண்டிய நிலை, மீன்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மீன்களுக்கான நல்ல பெறுமதி கிடைக்கப் பெறுவதில்லை.
எனவே, ஒலுவில் துறைமுகத்தை மீனவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்கி, அவர்களுடைய படகுகளை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்கின்றபோது, வாழைச்சேனை மற்றும் கல்முனைப் பகுதியை சேர்ந்த இருதரப்பினரும் பயனடைய முடியும். எனவே, அதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும்.
அதேபோன்று IMUL மீன்பிடி படகினால் நாட்டுக்கு பெரிய வருவாயை மீனவர்கள் பெற்றுக்கொடுக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான படகுகள் இருக்கின்றது. ஆனால், அவர்களது நலனுக்கான எந்தவொரு கொடுப்பனவுகளையும், திட்டங்களையும் இந்த அரசாங்கத்திலோ அல்லது இதற்கு முன்னரான அரசாங்கத்திலோ, இந்த வரவு செலவுத் திட்டத்திலோ நாங்கள் காணவில்லை. அந்தப் பகுதிகளில் இருக்கின்ற முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள்தான் இந்தத் துறையில் அதிகமாக ஈடுபடுகின்றார்கள். எனவே, தயவுசெய்து நீங்கள் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.
ரமழானின் அருட்கொடைகள் சகலருக்கும் கிடைப்பதுடன், நோன்பு கால அமல்களில் சிறப்பாக ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! அருள்பாலிக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித ரமழானை வரவேற்று, அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அல்லாஹுத்தஆலா ரமழான் மாத அமல்களுக்கு சிறப்புக் கூலி தருவதாக வாக்களித்துள்ளான். நமது முன்னோர்களும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் சிறப்பால் உயர்வடைந்ததாகவும் புனித அல்குர்ஆன் நமக்கு ஞாபகமூட்டுகின்றது.
மறுமை ஈடேற்றத்திற்கான வரப்பிரசாதமாக, இந்த அருள்மிக்க ரமழானைக் கருதி, இயலுமானவரை நல்லமல்களில் ஈடுபடுவோம்.
பாவக்கறைகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான கேடயமாகவும் இந்தப் புனித மாதத்தை பயன்படுத்துவோம்.
சர்வதேச அளவில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிக்கொள்வதற்கு இறைவனை பிரார்த்திக்க இம்மாதம் பயன்படட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
“May this holy month of Ramadan bring you and your loved ones peace, prosperity, and endless blessings. May your Imaan be strengthened, your prayers answered, and your hearts filled with light.
Let us embrace this sacred time with patience, gratitude, and unity.”
2025 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வமுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
S.Subairdeen Secretary General All Ceylon Makkal Congress No.56, 1st Floor, Supun Arcade Residencies, Galle Road, Colombo 06. மின்னஞ்சல் : acmchqcolombo@gmail.com
மட்டக்களப்பு, கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் 18வது விடுகை விழா, கடந்த 12ஆம் திகதி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், குறித்த பாடசாலையின் மாணவர்கள் நலன் கருதி Interactive Flat Panel Display (smart board) ஒன்றினையும் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
தோப்பூர், தாருள் ஹிக்மா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிந்தவூர் பர்சானா பாலர் பாடசாலை விடுகை விழா நிகழ்வில் (18) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இன்றைய தினம் (16) மன்னார், முசலி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்த பாலைக்குளி, முள்ளிக்குளம், மரிச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா, முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பைறூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான சாஹிர், ராபி மௌலவி, நிசார், அஸ்பர், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16) பிரதேச செயலாளர் PTM இர்பானின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது.
இதன்போதே, அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிரினால் அட்டாளைச்சேனை பிரதேச வீதிகள், வடிகான்கள் அபிவிருத்திகள் சம்பந்தமாக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், விஷேட நிதி ஒதுக்கீட்டில் ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்துப்பட்ட ஒலுவில் – 01, அல்- ஹிரா நகர், ஆலிம் நகர் போன்ற பிரதேசங்களின் 16 கிறவல் வீதி அபிவிருத்திகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டிருந்ததுடன், இது தொடர்பிலான தகவல்களையும் விளக்கங்களையும், ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவாவிடம் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
மேற்படி வீதி அபிவிருத்திகள் தொடர்பில், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் எதுவித அனுமதிகளும் பெறப்படவில்லையென தெரியவந்ததுடன், கிரவல் வீதிகளுக்கு மேலால் மீண்டும் கிறவல்களை போட்டு, மக்கள் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கண்டித்து பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வைத்தியசாலைகளுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா மற்றும் Dr. ஒஸ்மன், Dr. கியாஸ், கட்சியின் முக்கியஸ்தர்களானா பைறூஸ், சாஹிர், ஞானராஜ், சந்திரிக்கா, ராபி மௌலவி, ஜௌசி, ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!
சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட ஒரு கல்விமானை எமது சமூகம் இழந்து நிற்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார்.
முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரும் நாடறிந்த கல்விமானுமாகிய எம்.எம்.சியான் அவர்களின் மறைவு தொடர்பில், அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“கல்வியையே தன்னுடைய வாழ்க்கையாகக்கொண்ட மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், மன்னார், தாராபுரத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்.
சியான் அவர்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலமானது ஒரு பொற்காலமாகும். இந்தக் காலத்தில், இவரிடம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று சிறந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இயற்கையாக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடையான, எவ்விடத்திலும் தான் ஒரு கல்விமான் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு துணிந்து, தமது கருத்துக்களை வெளியிடும் ஆற்றலைக் கொண்டிருந்ததுடன், தரவுகளையும் சட்டென சமர்ப்பிக்கும் ஒருவராகவும் மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்களைக் கூறமுடியும்.
குறிப்பாக, இடப்பெயர்வுக்கு பின்னர், இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மிகவும் நெறிப்படுத்தி, அதனை முன்கொண்டு செல்வதிலும், பல நுறு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுப்பதிலும் எம்முடன் இணைந்து, அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் பணியாற்றிய காலத்தை, இத்தருணத்தில் நாம் நினைவுகூர்வது பொருத்தமாகும்.
நான் பிறந்த மண்ணான தாராபுரத்தை சேர்ந்த ஒருவரான மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், எனது நெருங்கிய உறவினருமாவார். கடந்த காலங்களில், எமக்கு ஏற்பட்ட பலவித துன்பங்களின்போது, எமது நலனில் அக்கறையுடன், அடிக்கடி தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய தருணங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
எமது ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் முக்கியமான ஒருவராக மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் திகழ்ந்துள்ளார். அதேபோன்று, சமூகம் மற்றும் கல்வி சார்ந்த விடயங்களை முற்படுத்தி, அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ‘எவ்வாறு இந்த அடைவுகளை அடைந்துகொள்வது’ என்பது பற்றி பல நல்ல ஆலோசனைகளை வழங்கியவராகவும், நோயுற்றபோதும் அந்த எண்ணம் தொடர்ந்தும் அவரிடம் நீடித்தமையானது, இன்றும் பசுமரத்தாணிபோல் என் மனதில் மீட்டி நிற்கின்றது.
‘கற்பவனாக இரு அல்லது கல்விக்கு உதவி புரிபவனாக இரு’ என்கின்ற பழமொழிக்கு ஒப்ப, மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் நீண்ட கல்விப்புலத்தை கொண்டிருந்தமை, கற்கின்ற சமூகத்திற்கு உந்துதலாக இருந்ததை இன்றும் நாம் நினைவில்கொள்கின்றோம்.
தாம் பெற்ற கல்வியின் மூலம், அரசியல் உந்துதல்களின்றி பொறுப்பான பதவிகளை அவர் பெற்றுக்கொண்டார். குறிப்பாக, புத்தளம் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து, உள்ளூர் மாணவச் சமூகத்திற்கும், அதேபோன்று, இடம்பெயர்ந்து வந்த மாணவர்களின் கல்விக்காகவும் வளங்களைப் பெற்று, அதனூடாக தமது கல்வியின் இலக்கை நோக்கிப் பயணத்தை முன்னெடுத்த காலத்தை என்றும் மறக்க முடியாது.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அருள்வானாக! ஆமீன்!!!”
ஏறாவூர், ஐயன்கேணி லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் விடுகை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) ஏறாவூர் மட்/மம/ அல் ஜுப்ரியா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான M.S.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களை வாழ்த்தி பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, ஆயிலியடி சாஹிரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகரசபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியானின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில்,
“காலம் சென்ற கல்விமான் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான் அவர்களின் மறைவு கல்வி உலகிற்கு பேரிழப்பாகும். புத்தளம், மன்னார் கல்வி வலயங்களில் பணியாற்றி பலரது வளர்ச்சிக்கு தூணாகவும் துணையாகவும் இருந்தவர்.
இவரது இழப்பால் துயரும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி பொலிஸ் அத்தியகட்சர் இனோகா லியானகே, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நப்றாஸ் நில்பர், களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளனத் தலைவர் உவைன், செயலாளர் ஹிசாம் சுஹைல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மூத்த உலமாவும் புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு, ஆன்மீகத் துறையில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் உயர் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஆன்மீக சமூகத்தை உருவாக்குவதற்காக அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் முழுமையான பங்களிப்பை செலுத்தியுள்ளார். இலங்கையில் பழைமை வாய்ந்த அரபு மதரஸாக்களில் ஒன்றான காசிமியா அரபுக் கல்லூரியின் அதிபராக நீண்ட காலம் பணியாற்றி, சிறந்த உலமாக்களையும் துறை சார்ந்தவர்களையும் இந்த சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ள ஒருவராக அவரை அடையாளப்படுத்த முடியும்.
ஆன்மீகத் துறையோடு மட்டும் தன்னுடைய பணியை நிறுத்திவிடாது, சமூகம் சார்ந்த எல்லா துறைகளிலும் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள், அவரது பங்களிப்பினை குறையின்றி வழங்கியுள்ளதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.
அரசியல், கல்வி, பொருளாதாரம், இன ஒற்றுமை போன்ற விடயங்களில், மிகவும் ஆரோக்கியமான முறையில் அவரது பங்களிப்பை வழங்கியமை, இந்த புத்தளத்து மக்களுக்கு அவரால் ஆற்றப்பட்ட மிக உயர்ந்த பங்களிப்பாகும்.
அவரது காலப்பகுதியில், காசிமியா அரபுக் கல்லூரியின் நாமத்தை முழு உலகறிய செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அளப்பரியது. அதிலும் குறிப்பாக, காசிமியாவின் ஸ்தாபகரும் அதிபரும் அவரது தந்தையுமான மஹ்மூத் ஹசரத் அவர்களுக்காக, நினைவு முத்திரை ஒன்றை அரசாங்கத்தினால் வெளியிட்டு வைப்பதற்கான அடித்தளத்தையிட்டது மட்டுமல்லாமல், அவற்றை வெளியிடுவதற்கு எம்முடைய பங்களிப்பையும் பெறுவதில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்ட ஒருவர்.
குறிப்பாக, இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் நடுநிலையாக சிந்திக்க கூடியவராகவும் பிரச்சினைகளை மிகவும் சாதுரியமாகத் தீர்த்து, மீண்டும் அனைத்து மக்களும் அன்புடன், பரஸ்பர புரிந்துணர்வுடன் செயலாற்றுவதற்கான இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர். அவரது சமூகப்பற்றை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய இழப்பானது, புத்தள சமூகத்துக்கு மிகவும் நீண்ட இடைவெளியினை தோற்றுவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்பையும் கருணையையும் பொழிய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்!
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச். நந்தசேன மற்றும் டியுடர் குணசேகர ஆகியோர் தொடர்பில், இன்று இந்த விவாதம் மும்மொழியப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்கள்.
குறிப்பாக, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவர்களுடன் நீண்ட காலம் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அவர் ஒரு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, இந்த நாட்டுக்கு நிறைய நல்ல பணிகளை செய்த ஒருவர். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத்து துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை செய்தவர். அவருடைய காலத்திலேதான், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, வடக்கு, தெற்குக்கான ரயில் பாதை, யாழ்ப்பாணம், கொழும்பு ரயில் பாதை மற்றும் மன்னார் ரயில் பாதை ஆகியவற்றின் புனரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று, பல இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார். அவர் நேர்மையான, பண்பான ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். களுத்துறை மாவட்டத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, வெல்லக்கூடிய ஒருவராக இருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷவை அந்தக் கட்சி முன்னிறுத்தியபோது, அந்தக் கட்சியிலேயே இருந்துகொண்டு, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக இருந்தவர் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டும், அவரை எதிர்த்துப் பேசியவர். “கோட்டா இந்த நாட்டுக்கு தகுதியானவர் அல்ல, ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட பணியாற்றாதவரிடத்திலே, ஜனாதிபதி பதவியை எவ்வாறு ஒப்படைக்கப் போகின்றீர்கள்?” என்று, தைரியமாக பேசிய ஒருவர்தான் குமார வெல்கம அவர்கள். அவர் எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுகின்ற, பக்குவமுள்ள ஒரு அரசியல்வாதி.
அதுபோன்று, “அரகல” சமயத்தில், ஒரு சில அநியாயக்காரர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி, கஷ்டமான நிலைக்கு ஆளாக்கினர். எனினும், அவர் யாரையும் கடிந்துகொள்ளாமல், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய பணிகளை முன்னெடுத்து வந்தார்.
குமார வெல்கம அவர்களுடைய இழப்பு, இந்த நாட்டுக்கு குறிப்பாக, களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது கட்சி சார்பாக, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று, எச். நந்தசேன அவர்கள், நான் திருமணம் முடித்துள்ள மதவாச்சிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். வட மத்திய மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, பதில் முதலமைச்சராக இருந்து, அந்த மாகாணத்துக்கு நிறைய சேவைகளைச் செய்தவர்.
பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறைதான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எனினும், அந்தக் காலப்பகுதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக, மதவாச்சிய தொகுதிக்கு பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவருடைய இழப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். இத்தருணத்தில், அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனுராதபுர மாவட்டத்தின் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை, கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், டியுடர் குணசேகர அவர்கள் 1977இல், கம்பஹ மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர், போலாந்து நாட்டின் தூதுவராக இருந்து பணியாற்றியவர். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய காலத்தில், ஒரு அரசியல்வாதியாக இருந்து அந்த மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக, பல தியாகங்களை செய்த ஒருவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் எனது கட்சி சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி” என்று குறிப்பிட்டார்.
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை!
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில், மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. எனவே, ஏனையவர்களைப் போன்று, நீங்களும் பொடுபோக்குத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதில், மக்கள் உன்னிப்பாக இருக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றது. இன்னும் நாட்டில் சாதகமான சூழல் ஏற்படவில்லை. அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியமான சில பொருட்களின் விலைகளையாவது, குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி விலையில் கூட மக்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. அன்றாட வயிற்றுப் பசிக்கான உணவைக் கூட சாதாரண விலைக்கு வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உப்புப் பிரச்சினை உட்பட சில துரிதமாக தீர்க்கக் கூடிய விடயங்கள் இருப்பினும், அவற்றை ஏன் காலதாமதப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
அதேபோன்று, தலைமன்னார் பங்குத் தந்தை டெனி கலிஸ்ரஸ் எமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். பிரதமருக்கு முகவரியிட்ட கடிதத்தின் பிரதியே அது. அதாவது, மன்னாரில் 18990 ஹெக்டெயர் நிலப்பரப்பானது, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனவிலங்கு திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல்யமான மன்னார் தீவில் இவ்வாறான வர்த்தமானி பிரகடனங்கள் மூலம், சுற்றுலாத்துறை மற்றும் இன்னோரன்னை துறைகளை கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகின்றேன்
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், 2009-2010 ஆண்டு பயிற்சிகளை நிறைவு செய்த 237 ஆசிரியர்களுக்கு, இதுவரையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. கல்வி அமைச்சர் ஹரினி அவர்கள், இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, அவசரமாக அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
அதேபோன்று, இலங்கையிலே 400க்கு மேற்பட்ட நூலக உதவியாளர்கள் பணியாற்றுகின்றார்கள். அந்தவகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக உதவியாளர்கள் உட்பட பலர் சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 20212ஆம் ஆண்டுக்கு பிற்பாடு, பல்கலைக்கழக நூலக உதவியாளர்களை, சிற்றூழியர்களின் தரத்துக்கு பதவி இறக்கம் செய்ததன் மூலம், நூலக உதவியாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர் எனவே, 2012க்கு முன்னர் இருந்த அதே பதவி நிலையில், அவர்களது நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், மன்னார் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள பாதைகளை சீரமைப்பதுடன், முறையான வடிகான் அமைப்பு உள்ளிட்ட இன்னோரன்ன உள்கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் எந்தவொரு நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்த விடயத்தையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, வவுனியா, சாளம்பைக்குளத்தில் குப்பைகூளங்களைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள். அந்தப் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியில், வைத்தியசாலை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது அருகில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத் அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்தவரே. கடந்த கால கோட்டாவின் அரசாங்கம், இவற்றையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே, இந்த அரசாங்கத்திலாவது மேற்படி பிரச்சினைக்கு, மாற்றுவழி ஒன்றை கண்டறிந்து, விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேலும், அண்மையில் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவில் கரையொதுங்கி, திருமலையில் வைக்கப்பட்டிருந்தபோது, நான் அவர்களை பார்வையிட சென்றிருந்தேன். அவர்களுடன் கலந்துரையாடுவதை பொலிஸார் தடுத்து, எமக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது. 3 இலட்ச அகதிகளுக்கு, அரசாங்கத்தின் உதவியுடன், பல மாதங்கள் மூன்றுவேளை உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டேன். எனவே, ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை மன வருத்தத்தை தோற்றுவித்தது. படுப்பதற்கு பாய், தலையணை கூட அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நான் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்தேன்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எங்களுடன் இரண்டு தசாப்தகாலமாக இந்த பாராளுமன்றில் இருந்தவர் என்ற வகையில், அவரது நற்பண்புகளை கண்டிருக்கின்றோம். அவரது பேச்சு மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கைகொண்டுதான், மூவின மக்களும் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு எமது நாட்டுக்கு அகதிகள் வருகின்றபோது, சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அந்தவகையில், இந்த மியன்மார் அகதிகள் விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுங்கள்.
மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெறுகின்றன. இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். அதுபோலவே, எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.
எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர். எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.
முள்ளிப்பொத்தானை, புஹாரி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம ஆசிரியை சவ்ஜானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விழாவினை சிறப்பித்திருந்தார்.
பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில், ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் புதன்கிழமை (08) பாராளுமன்றில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“உள்ளூராட்சி மன்றங்களானது வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், களியாட்ட இடங்கள், மைதானங்கள், மயானங்கள், நூலகங்கள், திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறு சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகின்றது.
அதற்கு மேலதிகமாக, அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றில், உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவில் 40 வீதத்தினை சபையின் நிதியிலிருந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
இவ்வாறான நிலையில் முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணங்கள், சொத்துக்களுக்கான வரிகள் போன்றவற்றைக்கொண்டே உள்ளூராட்சி மன்றங்கள் வருமானமீட்டிக்கொள்கின்றன.
அதே போல, கடந்த காலங்களில் வீதிகளில் பயன்பாட்டில் இருந்த மாட்டு வண்டிக்கான வரி, துவிச்சக்கர வண்டிக்கான வரிகள் போன்றவை அறவீடு செய்யப்பட்டு வந்திருந்தாலும் தற்காலத்தில், அவற்றின் பாவனை குறைவடைந்துள்ளமையால் அவ்வரி அறவீடு நடைமுறையிலில்லை.
ஆகையால், பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வருகின்ற வாகன வருமான வரி கட்டணங்களை பங்கீட்டு வரி பட்டியலில் இணைத்து, அதில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கினால், அதனுடைய சேவைகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டுசெல்ல முடியும்.
மேலும், கடந்த 13 வருடங்கள் உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவராக செயற்பட்டு வந்த அனுபவத்தில், உள்ளூராட்சி நிறுவனங்களை நிர்வகிக்கும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் பல நிர்வாக அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வேலைத்தொழிலாளிகள், சுகாதார தொழிலாளிகள் போன்ற ஆளனி தட்டுப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனத்திலெடுக்குமாறு உள்ளூராட்சி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால், முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு, பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற, வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தனது கன்னி உரையை ஆற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பில், நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி செலுத்துகின்றோம். ஆனால், மார்ச் மாத காலப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த காலத்திலேயே, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், புனித ரமழான் நோன்பும் இந்த காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்படும். அதனால், நோன்பு காலத்தில் பரீட்சை இடம்பெறும்போது, முஸ்லிம் மாணவர்களுக்கு அது பாதிப்பாக அமையும். எனவே, இந்த விடயத்தை கருத்திற்கெண்டு அரசாங்கம் பரீட்சை நேர அட்டவணையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்களாகும். இந்த மாவட்டங்களில், மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த காரணமாக, வனவள திணைக்களம் அந்த மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு, அந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருக்கிறது. இதனால், அங்கு விவசாயம் செய்துவந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, வுவுனியா மாவட்டத்தில் பம்பமடு பிரதேசம், குப்பை கூளங்களை சேகரிக்கும் பிரதேசமாக இருக்கிறது. அதன் மேற்குப்பக்கம் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கிம்ன்றார்கள். அதேபோன்று, வீதிக்கு மறுபக்கத்தில் வவுனியா பல்கலைக்கழகம் அமையப்பட்டுள்ளது. இந்தக் குப்பைமேட்டினால் ஏற்படுகின்ற துர்வாடை காரணமாக, அந்த மக்களும் மாணவர்களும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, அந்தப் பிரதேசத்தில் இருக்கும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளின் கழிவுகளும் அங்கு கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.
எந்தவொரு பாதுகாப்பு வேலியும் இல்லாத காரணத்தினால், கால்நடைகள் அங்கு கொட்டப்படும் எச்சங்களை எடுத்துச்சென்று, கிராமங்களுக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் போடுகின்றன. இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைவர்ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, (கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)
கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு,
இலங்கையில் புகலிடம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் தீர்மானம் குறித்து மிகுந்த கவலையுடன் உங்களுக்கு அறியத் தருகின்றேன். தங்கள் நாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இந்த மக்களின் நல்வாழ்வைக் கருத்திற்கொண்டு, சர்வதேச மனிதாபிமான கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
மியான்மரில் நிலவும் கடுமையான வன்முறை மற்றும் அடக்குமுறை காரணமாக, ரோஹிங்கியா மக்கள் நம் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இலங்கைக்கு வந்திருப்பது, உண்மையாகவே உயிர் அச்சுறுத்தலுக்காவே அன்றி, பொருளாதார புலம்பெயர்ந்தோராக அல்ல. ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் இந்த நபர்களின் அவலநிலையை அங்கீகரிக்கிறது, மேலும் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு நாடாக, அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நேரத்தில், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவது நம்மீது கடமையாகும்.
அகதிகள் மீதான சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுடன் எங்கள் நடவடிக்கைகள் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும், principle of non-refoulement – தனிநபர்கள் தங்கள் உயிருக்கு அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இடங்களுக்கு திருப்பி அனுப்புவதைத் தடை செய்தல், இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதன் மூலம், பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி, சர்வதேச மனிதாபிமான தரங்களுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை நிரூபிக்கவும் இது உதவும்.
வரலாற்று ரீதியாக, இலங்கை துன்புறுத்தலுக்கு ஆளாகியவர்களுக்கு புகலிடமளிக்கும் ஒரு நாடாக இருந்து வருகிறது. பல இலங்கையர்கள் யுத்த காலங்களில் வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துள்ளனர். ரோஹிங்கியா அகதிகளின் தற்போதைய நிலைமை, கடந்த காலத்தில் ஒரு தேசமாக நாம் எதிர்கொண்ட போராட்டங்களை பிரதிபலிக்கிறது என்பதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியமானது. மியன்மாரில் இந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் இன்னும் ஆபத்தில் உள்ள நிலையில், அவர்களை வலுக்கட்டாயமாக மியான்மருக்கு திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, இந்த அகதிகள் இலங்கையில் தங்கியிருக்கும் வரை, அவர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் கைதிகளாகக் கருதப்படாமல், நமது அன்பும் ஆதரவும் தேவைப்படும் மக்களாகக் கருதப்பட வேண்டும்.
மேலும், இந்த அகதிகள் தங்களுக்கு மீள்குடியேறக்கூடிய பொருத்தமான, பாதுகாப்பானதாகக் கருதப்படும் மூன்றாவது நாட்டை அடையாளம் காண்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
நன்றி.
இப்படிக்கு,
ரிஷாட் பதியுதீன்,
பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது.
இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S. அமீர் அலி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான M.S. சுபைர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அனுராதபுர மாவட்டத் தலைவருமான A.R.M.தாரிக் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (05), அவரது இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் எவ்வாறு கட்சியின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பவை தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வவுனியா, புதிய சாளம்பைக்குளம் றவ்ழத்துல் ஜன்னா முன்பள்ளி மற்றும் சாளம்பைக்குளம் அல் அக்ஸா முன்பள்ளி ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றன.
மழலைகளின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இவ் விழாக்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.டீ.எம்.முஸம்மில் அவர்களுக்கு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (04) கல்கமுவ, வல்பாலுவ பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.டீ.எம்.முஸம்மில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான இர்பான், அஷார்டீன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஷாட் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா, பெரியாற்றுமுனை அல் முனவ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை மிகச் சிறப்பாக (04) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.
இதன்போது, கிண்ணியா பிரதேச செயளாலர் ஜனாப் கனி மற்றும் முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட அமைப்பாளர் N.T.M.தாஹிர் பங்கேற்பு!
புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (04) முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் மற்றும் கட்சியின் கரைத்தீவு உறுப்பினர் ஷிபான் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் அல் – ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, பாடசாலை வளாகத்தில் (04) இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும், விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
இதன்போது, உரையாற்றிய அஷ்ரப் தாஹிர் எம்.பி,
“ஆரம்ப கல்வியை இலவசமாகக் கற்பிக்கின்ற, நவீனமயப்படுத்தப்பட்ட இப்பாடசாலையை, நாம் தவிசாளராக இருந்த காலத்தில் ,அனைத்து சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் அறிமுகப்படுத்தியிருந்தோம்.
குறித்த பாடசாலை, இன்று வளர்ச்சி கண்டிருப்பதை நினைத்து அகமகிழ்வதுடன், இப்பாடசாலையின் தலைமை ஆசிரியை ரெளபா உட்பட சுஹ்தா மற்றும் பெளஸானா ஆகியோரின் தியாகங்கள் மற்றும் அவர்களுடைய உழைப்புக்களை பாராட்டி வாழ்த்துகின்றேன். மேலும், இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நிகழ்வில், கட்சியின் முக்கியஸ்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட குருநாகல், வாரியப்பொல நகர பள்ளிவாசல் நிர்மாணிப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, வெள்ளிக்கிழமை (03) பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் விஷேட அதிதியாகப் பங்கேற்றிருந்ததுடன், ACJU உப தலைவர் உமர்தீன் மௌலவி, ஹிதாயத்துல்லாஹ் மௌலவி உட்பட உலமாக்கள், வாரியப்பொல ஜமாஅத்தினர், தனவந்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர்.
பல வருடங்களாக, இப் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு அனுமதி கிடைக்காமல், இழுபறியில் இருந்த நிலையில், பள்ளி நிர்வாக சபையினால் அஷார்தீனின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து, அவரின் முயற்சியினாலும் அல்லாஹ்வின் பேருதவியினாலும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாமலிருந்த அனுமதி விவகாரம் தீர்க்கப்பட்டு, உரிய முறையில் அனுமதி பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், இன்று (02) மாவட்ட செயலகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் இஸ்வா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியோருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிருக்குமிடையிலான சந்திப்பொன்று, புதன்கிழமை (01) குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் இடம்பெற்றது.
மேற்படி சந்திப்புகளின் போது, நிந்தவூரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பின் முக்கியத்துவம், மார்க்க ரீதியான எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் ஊரின் அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்புக்களில், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி A.L.றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான A.அஸ்பர் JP, நிந்தவூர் மத்திய குழுவின் செயலாளர் A.J.ஹாரிஸ் (LLB), மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான A.H.சபீர் ஹமீட் மௌலவி, M.I.M.றபீக் (நெளபல்), K.M.ஜெலீல் மௌலவி உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாருக்கு இறைவன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன வாழ்வை நல்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“புத்தள வரலாற்றில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியானது மிகவும் முக்கியமானது. வடபுல மக்கள் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வந்தபோது, அவர்களின் நலன் தொடர்பில், புத்தளம் சமூகம் எடுத்துக்கொண்ட அக்கறையின் பின்னணியில் மர்ஹூம் ஜனாப் அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாததொன்று. குறிப்பாக, கிராம அதிகாரியாக மட்டுமல்லாமல், பள்ளிவாசல் நிர்வாகியாகவும் இருந்து பல அளப்பறிய சேவைகளை ஆற்றியுள்ளார்.
அதேபோன்று, அரச சார்பற்ற நிறுவனங்களில் அவருக்கிருந்த தொடர்பின் மூலம், இலவச கண் சிகிச்சை முகாம்களை ஏற்பாடு செய்து, அதனூடாக சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதில், மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு, அவரது மறுமை வாழ்வின் விமோசனத்திற்கு நிரந்தர நன்மைகளை பெற்றுக்கொடுக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் நற்பணிகளை பொருந்திக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பதுடன், அன்னாரது இழப்பால் துயுறுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி M.S.S.அமீர் அலியின் வேண்டுகோளை ஏற்று, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸியினால், மட்டக்களப்பு, மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சமீமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேசத்தின் பயனாளிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாளம்பைக்குளம் பிரதேசக் கிளைக்கும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில், பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் S.M.அப்துல் மஜீத் (காஸிமி), பொருளாளர் அஷ்ஷெய்க் K.றபியுதீன் (பக்ரி) மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள், பிரதேசக் கிளையின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, கிராமத்தின் நலன்சார்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் புத்தளம், நாகவில்லு பிரதேசத்தின், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில், சுமார் 07 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும், 3 மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை தலைவர் ரிஷாட் ஞாயிற்றுக்கிழமை (29) நேரில் சென்று பார்வையிட்டார்.
மேற்படி விஜயத்தின் போது, வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கிய அவர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், பாடசாலைக்குத் தேவையான இலத்திரனியல் உபகரணங்களையும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.ரீ.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ரிஜாஜ் மற்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் நாசர், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் நாகாவில்லு கிளை முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலை நிர்வாகக் குழுவின் தலைவரும் கிராம சேவை உத்தியோகத்தருமான A.R.முஹம்மட் வஸீம் தலைமையில், சனிக்கிழமை (28) நிந்தவூர், வெளவாலோடை மைதானத்தில் இடம்பெற்ற முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், விசேட அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் U.L.M.சாஜித், கௌரவ அதிதிகளாக பதில் நீதிபதி A.M.நஸீல், சட்டத்தரணி A.L.றியாஸ் ஆதம், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் M.I.M.A.ஹுசைன், ஓய்வுநிலை அதிபர் A.L.நிசாமுதீன், Dress line நிறுவன உரிமையாளர் S.அப்துல்லா மற்றும் ரிமோ ஐஸ்கிரீம் நிறுவன உரிமையாளர் L.M.கிஸ்றத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27) நடைபெற்றது.
மேற்படி கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மூளையாக பிரகாசித்த கலாநிதி மன்மோகன் சிங், இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு கைகொடுத்த ஒருவர், அவரது இழப்பு கவலைக்குரியது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவு தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“கலாநிதி மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரையான காலப்பகுதியில் 13ஆவது இந்தியப் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
1991இல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படுகின்றார். அவர் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவற்றை அமுலாக்கினார்.
2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற போது, கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்ததால், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில், இந்தியா நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்களை கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இலங்கையின் பொருளாதாரம், சமூக, கலாச்சார மேம்பாடுகள் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார். மேலும், இலங்கை வாழ் மக்களுக்கு 50,000 வீட்டுத்திட்டத்தை, தமது காலத்தில் வழங்கிய பெருந்தகை ஆவார்.
அவரது இழப்பு தொடர்பில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the passing of former PM of India, Dr. #ManmohanSingh. His leadership, wisdom, and commitment to India’s growth have left an indelible mark on the world. My heartfelt condolences to his family and loved ones during this profound loss.May his soul rest in peace. pic.twitter.com/Vi7RsKYDRJ
நிந்தவூர் பிரதேச அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபையினருக்கும், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் எம்.பிக்குமிடைடையிலான சந்திப்பொன்று, (26) மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, உலமா சபையினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தஃவா பணியினை பாராட்டி பேசியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், ஊரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது மற்றும் போதை மருந்து பாவனையை தடுப்பது குறித்தும் உலமாக்களுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்ததுடன், எதிர்காலத்தில் உலமாக்களின் ஒத்துழைப்புக்களையும் வேண்டியிருந்தார்.
இந்நிகழ்வில், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி A.L.றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான A.அஸ்பர் JP, நிந்தவூர் மத்திய குழு செயலாளர் A.J.ஹாரிஸ், நிந்தவூர் பிரதேச முக்கியஸ்தர்களான சபீர் ஹமீட், M.I.M றபீக்(நெளபல்), K.M.ஜெலீல் மற்றும் அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபை நிந்தவூர் கிளையின் உப தலைவர் மௌலவி A.அமீர் அலியார் (ஹாமி), செயலாளர் மௌலவி M.U.ஆஷிக் அலி (காஷிபி), பொருளாளர் மௌலவி I.சாஜுத்தீன் (ஸஹ்வி) உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில் நன்கு அறிந்திருந்தவராகவும் மர்ஹூம் இஸ்ஹாக் அவர்கள் இருந்துள்ளார்.
பல்வேறு சர்வதேச கற்கைகளையும் அதேபோன்று, இலங்கைக்குள்ளும் பல்துறை செயற்பாடுகளுடன் பயணித்த ஒரு நல்லுள்ளம்கொண்டவராகவும் இவரை அடையாளப்படுத்த முடியும்.
சவூதி அரேபியாவில் நீண்டகாலம் பணிபுரிந்த நிலையில், கிழக்கில் வீடமைப்புத் திட்டத்தினை வறிய மக்களுக்காக சவூதி அரேபியாவின் உதவியுடன் நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.
இதேபோன்று, கிழக்கிலங்கையில் அரபு பல்கலைக்கழத்தின் தேவை உணர்ந்து, அதனது இயக்கத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்.
மிகவும் அன்பாகப் பழகும் சிறந்த பண்புகளைக் கொண்டவர். புனித உம்ராக் கடமையை நிறைவு செய்ய மக்கா சென்றிருந்த வேளை, இந்த மரணம் சம்பவித்துள்ளமை ஆழ்ந்த கவலை தருகின்றது.
அன்னாரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது இழப்பால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் (26) இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர்.
அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை என்பதை உணர்ந்த அவர், குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பின்னர், உடனடித்தீர்வாக குழாய் கிணறு திருத்தி, பொருத்துவதற்கு தேவையான சகல விடயங்களையும் முன்னெடுத்து, பிரதேச மக்களுக்கு குடிநீரும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பிரச்சினையை தீர்க்க உதவிய மயோன் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபாவுக்கு, பிரதேச மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) இடம்பெற்றது.
செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிப் பிரச்சினைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகை தந்த கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அனுதாபம் தெரிவித்துள்ளார்
அவர் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
“இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் இஸ்ஹாக் (இஸ்ஹாக் ஹாஜியார்) அவர்கள், புனித மக்கா நகரில் வபாத்தானார் என்ற கவலை மிக்க செய்தியோடு இந்த நாள் நகர்கின்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து, நிந்தவூருக்கும் தென்கிழக்கு அழகிற்கும் தனித்துவ அடையாளமாக மிளிர்ந்தவர்.
பல்வேறு உயர்பதவிகளை உலகின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் வகித்து வந்த போதிலும், சமூகம் சார்ந்த பரந்த கவலையும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் நிறைந்தவராக இறுதிவரை வாழ்ந்து முடித்து, நிறைவான முறையில் தனது இறுதிப் பயணத்தை எய்துள்ளார்.
நிந்தவூர் ஸகாத் சபையினை ஸ்தாபித்து, ஸகாத் என்னும் சமூகப் பொறுப்பை முறையாக நிறைவேற்ற வழிகாட்டிய முன்னோடி.
மார்க்கக் கடமைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட நம் சமூகத்தின் மிகச் சிறந்த முன்னுதாரணம்.
அன்னாரின் நல்லமல்களை பன்மடங்காக ஏற்று, பாவங்களை மன்னித்து உயரிய சுவர்க்கத்தில் நிரந்தர வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு பரிசளிப்பானாக” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நிகழ்வு, இன்று (26) காலை வவுனியா, பூந்தோட்டம், சுனாமி நினைவுத் தூபி முற்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளருமான முத்து முஹம்மட் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட சர்வமத பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோர்களுக்கு உதவும் திருநாள் தினமான இன்று அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
சமாதானம், புரிந்துணர்வு என்பனவற்றைத் தோற்றுவிக்கும் தினமாக, இன்றைய கிறிஸ்மஸ் பண்டிகை அமைய வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மானிட சமூகமானது ஒவ்வொருவர் மீதும் அன்புடனும் இரக்க குணத்துடனும் வாழ்தல் என்ற பிரதான கட்டமைப்பினைக்கொண்டதாகும். இதனை, அனைத்து மதங்களும் வலியுறுத்தி நிற்கும் வேளையில், கிறிஸ்தவ சகோதர சமூகமும் இந்த இலக்கினை மையமாகக்கொண்டு, இன்றைய தினத்தை நினைவுகூறுவதானது காலத்தின் தேவையாகும்.
இலங்கை திருநாட்டில், அனைத்து சமூகமும் தத்தமது அடையாளங்களைப் பாதுகாத்து, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வுடன் வாழும் சூழல் ஏற்பட நாம் அணைவரும் பயணிப்பதை இன்றைய தினத்தில் சுட்டிக்காட்டியுள்ள தலைவர் ரிஷாட் பதியுதீன், தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட (24) பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கரை சந்தித்துக் கலந்துரையாடினார்
இதன்போது, சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றின் தேவை குறித்து கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார்.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச முன்னாள் தவிசாளரும் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (24) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றினை நிறுவுதல், கல்முனை பஸ் டிப்போவுடன் சம்மாந்துறை பஸ் டிப்போவினை மீண்டும் சம்மாந்துறையில் நிறுவுதல் போன்ற விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழியப்பட்டு கலந்துரையாடப்பட்டிருந்தது.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், ஜமாலியா பாடசாலை மாற்று காணி விடயம், மாவடிப்பள்ளியில் உடனடியாக பாலம் அமைப்பது சம்பந்தமான தீர்மானம், விவசாய காணி சம்பந்தமான பிரச்சினைகள், நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கான தீர்வுகள், போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், ஏ.எம்.மஞ்சுல ரத்னாயக்க, எம்.எஸ்உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.நிசாம் காரியப்பர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மாவட்ட செயலகப் பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம்.சாஹீர், பிரதம கணக்காளர், ஏ.எல்.மஹ்ரூப், உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலகத்தின், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அனுராதபுரம், நாச்சியாதீவு அல் – ஹிகம் அரபுக் கல்லூரியின் 02வது (அல் ஹாபிழ், அல் ஆலிம்) பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அனுராதபுர மாவட்ட அமைப்பாளருமான A.R.M.தாரிக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, திங்கட்கிழமை (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, அம்பாறை மாவட்டத்தில், கடந்த வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் தாஹிர் எம்.பி கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றதும், முறையாக பகிர்ந்தளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பில், தாஹிர் எம்.பியின் பிரத்தியேக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா மற்றும் இணைப்பாளர்கள் உடனிருந்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம், அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவுக்கு, சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர் பூங்காவின் விளையாட்டு செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் சேதமடைந்திருந்த நிலையில், அவற்றை சீர்செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில், கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் எத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைவரின் விசேட பணிப்புரையின் கீழ், மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக, புத்தளம் மாவட்ட செயற்குழுவின் சார்பாக, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத், AO அலிகான் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் அஸ்கீன், அமைப்பாளர் M.M.M.முர்ஷித், ரசீன் ஆசிரியர், ஆதரவாளர் இல்ஹாம் ஆகியோர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முன்னாள் நகரசபை பிரதித் தலைவரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AO அலிகானின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் GAZZELES விளையாட்டுக் கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் (20) வழங்கி வைக்கப்பட்டது.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத் மற்றும் AO அலிகான் ஆகியோரினால், கழக உறுப்பினர்களிடம் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர்.ஹில்மி மஹ்ரூபுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (21) கிண்ணியாவில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில், மியன்மாரில் இருந்து சுமார் 115 ற்கு மேற்பட்ட அகதிகள், கடந்த வாரம் கரையொதுங்கியதையடுத்து, அவர்கள் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த, மியன்மார், ரோஹிங்யா அகதிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர், சனிக்கிழமை (21) திருகோணமலை, ஜமாலியா பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாமலுள்ள மியன்மார், ரோஹிங்யா அகதி மக்களை சந்தித்து, அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்ட தலைவர் ரிஷாட் பதியுதீன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கிவைத்தார்.
மேலும், அரசாங்கத்தின் ஊடாக இவர்களுக்கு முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்து, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஐ.நா சபையின் ஊடாக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இவ் விஜயத்தின் போது, திருகோணமலை மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான வைத்தியர்.ஹில்மி முகைடீன் மற்றும் வைத்தியர். ஹில்மி மஹ்ரூப் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் அல் மதரஸதுல் நபவியாவுக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், ஸ்மார்ட் TV (LED) மற்றும் சவுண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே மேற்படி உபகரணங்கள், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வின், விசேட அதிதியாக வைத்தியர் திருமதி.திபாயா பங்கேற்றிருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத், AO அலிக்கான் மற்றும் அமைப்பாளர் M.M.M.முர்ஷித் உட்பட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
“சிறந்த மேடைப் பேச்சாளரும் சமூகப்பற்றுள்ளவருமான அப்துல் மஜீத், மக்களுடன் அன்பாகக் பழகக்கூடிய மனிதநேயம் கொண்டவர்.
இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அவர், மக்களின் தேவையறிந்து துணிச்சலுடன் கருமமாற்றியவர்.
கட்சி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதித்து, மக்கள் பணியாற்றியவர்.
அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அருள வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது. எமது நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள், பல தசாப்தங்களாக தேங்கிக் கிடக்கிறது. அவற்றுக்கு ஒரு தீர்வுப் பொறி முன்வைக்கப்பட வேண்டுமென்றால், அரசாங்கத்துடன் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒரே மேசையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு (17) கருத்து வெளியிட்ட அவர்,
“ஒரு தீர்வு பொறி முன்வைக்கப்பட வேண்டியது சில நாடுகளின் அழுத்தத்தினாலோ அல்லது சில குழுக்களின் தேவைகளுக்காகவோ தீர்மானிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளின்போது, கட்டாயம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், அந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இருக்க வேண்டும். அதனூடாகத்தான், யாருக்கும் பாதகமில்லாத தீர்வைப் பெற முடியும்.
யாருக்காவது நியாயமான தீர்வுகள் கிடைக்காத போது, அது இன்னொரு போராட்டத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
பாசிஸ புலிகளின் கொள்கையிலிருந்து மாறாதவர்கள், “வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும், தமக்கு மட்டும் சமஷ்டி தீர்வு கிட்ட வேண்டும், இணைந்த வட, கிழக்கில் சமஷ்டி” என்றெல்லாம் பேசுகிறார்கள்.
இன்று உலகம் நவீனத்துவமடைந்து எவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டது. இலங்கையை பொறுத்தமட்டில் ஒற்றையாட்சி போதுமானது. இங்கு காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வை இல்லாமலாக்கி, சகல குழந்தைகளும் ஒரே மொழியில் கல்வி கற்றால், எல்லோரையும் சமனாக நடத்தும் திருத்தம் அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்டால், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மூன்று தசாப்த போராட்டத்திற்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றால், அங்கு ஒரே மேசையில் பேசித் தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் சம்மேளனத்தினூடாக நாங்கள் அதை வலியுறுத்தினோம். பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது, அரசாங்கமும் தமிழர்களும் முஸ்லிம்களும் சமமாக இருந்து பேச வேண்டும்” என்றார்.
கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் கூறியதாவது,
“எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். இதை விடுத்து, எம்.பிக்களின் கல்வித்தகைமைகளை பரீட்சித்தல், விவாதித்தல் செயற்பாடுகளே அண்மைக்காலமாக இந்த பத்தாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இந்நிலை நீடித்தால், அரசாங்கம் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடலாம். எனவே, ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுங்கள்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கும் நல்ல பண்புகள், தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களிடமும் இருக்க வேண்டும். 159 எம்.பிக்களை வைத்திருக்கும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால், கோட்டாபயவுக்கு ஏற்பட்ட இழி நிலையே ஏற்படும். 147 எம்.பிக்களுடன் ஆட்சிக்கு வந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் துரத்தியடிக்கப்பட்டது ஏன்? அகம்பாவம் மற்றும் ஆணவத்துடன் நடந்ததால், இன்று மூன்று எம்.பிக்கள் தெரிவாகுமளவுக்கு அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர்.
கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும். இது தொடர்பில், சுகாதார அமைச்சர் நேற்று வழங்கிய பதிலில் எமக்குத் திருப்தி இல்லை. மக்களால் தெரிவானவர்கள் என்ற உரிமையுடனேயே இவ்விடயத்தைக் கோருகின்றோம். எமது மதத்தை நிந்தித்த கோட்டாவுக்கு இறைவன் வழங்கிய தண்டனையாகவே அவரது ஆட்சிக் கவிழ்ப்பை நோக்குகின்றோம்.
இதுவே எமது நம்பிக்கை. எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. எனவே, சிறுபான்மைச் சமூகங்களை சிறுமைப்படுத்தும் இழி செயலைச் செய்ய வேண்டாம்.
அல் ஆலிம் பரீட்சையை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் விரைவாக நடத்தி, சிறந்த மௌலவிமார்களை ஆசிரியர்களாக நியமியுங்கள்.
அஸ்வெசும சிறந்த திட்டம்தான். ஆனால், இவற்றை வழங்கும் முறைகள் ஒழுங்காக இல்லை. விதவைகள், ஏழைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு இந்தக் கொடுப்பனவுகள் சென்றடையவில்லை. சமுர்த்தி உத்தியோகத்தர்களைப் புறந்தள்ளி இப்பணிகள் முன்னெடுக்கப்படுவதனாலே, இதில் குறைபாடுகள் நிலவுகின்றன.
சமூகங்களப் புறந்தள்ளும் அல்லது ஒரு சமூகத்தை மாத்திரம் குறிவைக்கும் செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு ஒருபோதும் தயங்கமாட்டோம். மனோ கணேசன், முன்னாள் எம்.பி. சுமந்திரன் ஆகியோருடன் முன்னெடுத்த பணிகளை மீண்டும் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து, அம்பாறை, நிந்தவூரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மாகாண சபையானது, மக்களுக்கான பணிகளை செய்வதற்கும், மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த மாகாண சபை முறைமையினால், கடந்த காலங்களில், இரு மாகாணங்களை தவிர ஏனைய ஏழு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள்தான் பயனடைந்தார்கள் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.
இதில், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என இரண்டு மாகாணங்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், தமிழ், சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு உரிய அதிகாரம் வழங்கப்படாமையினால்தான், இம் மாகாணத்தில் ,எமது சமூகம் முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவேதான், இந்த மாகாண முறை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு, தற்போதுள்ள அரசாங்கத்தில் உள்ளவர்களால் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக உள்ளது. அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில், இன்னும் மூன்று வருடங்களுக்குப் பின்னர்தான், இவ்விடயம் குறித்துப் பேச முடியும் என்ற மற்றும் ஒரு கருத்தும் இன்னொரு சாராரினால் வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துக்களாகும்.
ஆனால், மக்களுக்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற அத்துடன், அபிவிருத்திசார் பணிகள் மக்களுக்காக சென்றடைய வேண்டும் என்பதுடன், வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில், நாங்கள் பல தடைகளைச் சந்தித்திருக்கின்றோம். அதில், அதிகார ரீதியாகவும் அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குவது ரீதியாகவும் இங்கு முழுமையாக மறுக்கப்பட்டிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இவ்விரு மாகாணங்களிலும் மறுக்கப்பட்டிருந்தாலும் கூட, ஏனைய ஏழு மாகாணங்களிலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கைகளில்தான் அந்த அதிகாரங்கள் இருந்தது. இதனால்,இம் மாகாண மக்கள் நன்மை அடைந்தார்கள். அங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றாகப் பயணித்து, ஒரு சமூகத்திற்கு பணிகளை செய்கின்ற முறைமையை நாங்கள் காண்கின்றோம் .
குறிப்பாக, வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் காணி, பொலிஸ் அதிகாரங்கள், சிறுபான்மை மக்களின் கைகளுக்குச் சென்றால், பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் இரண்டையும் தங்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, அச்சட்டங்களை அமுல்படுத்துவதற்கு, மத்திய அரசு மிக நீண்டகாலமாக தடைகளை அல்லது அதிகாரத்தை வழங்காமல் இருந்து வருகின்றது.
எனவே, மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாக இருந்தால், மக்கள் பிரயோசனம் அடைவார்கள். அரசியல்வாதிகளும் மக்களுக்கு பணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த அதிகாரங்களைக் கோருகின்றார்கள். அரசியல்வாதிகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற ஒரு இடைத்தரகர்கள் போன்று, அங்கு இருக்கின்ற வேலைத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கின்ற மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
எனவே, தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி, இந்நாட்டின் பணிகளை துரிதமாகச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக, தற்போதைய தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள், செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.
ஆகவே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு, இந்த அரசாங்கத்தில் இருக்கின்றது என்பதை, அவர்களது செயற்பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.
அந்தவகையில், எதிர்காலத் தேர்தலின் ஊடாக, மாகாண சபையின் முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெறுமாக இருந்தால், அது இப் பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாகவே நாங்கள் பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னை அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான முஸம்மிலின் வழிக்காட்டலின் கீழ், அல்ஹாஜ் மொய்னுதீனின் வேண்டுகோளின் பேரில், இப்/கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான அஷார்தீன் மொய்னுதீனினால், போட்டோகொப்பி இயந்திரம், பிரின்டர் இயந்திரம் மற்றும் Amp, Mic உள்ளிட்ட குறித்த இலத்திரனியல் உபகரணங்கள், பாடசாலை பிரதி அதிபர் மஹேஷியிடம் கையளிக்கப்பட்டது.
10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (17) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது,
“புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்; அதேபோன்று, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தின் சபாநாயகராக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். ஒரு குறுகிய காலத்துக்குள் இரண்டாவது சபாநாயகராக பாராளுமன்றத்தில் தெரிவாகியுள்ள நீங்கள், ஒரு வைத்தியராகவும் இருக்கின்றீர்கள்.
எனவே, சகல கட்சிகளையும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாத்து, நேர்மையாகச் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினராக இஸ்மாயில் முஹம்மட் முத்து முஹம்மட் அவர்கள், பிரதி சபாநயகர் முன்னிலையில், இன்று காலை (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முஹம்மட் அவர்கள், இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் பிரதித் தவிசாளர் M.I.முத்து முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், தனக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க காரணமாக இருந்த, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் 5ஆம் வட்டார அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு ஸ்மார்ட் TV (HD) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தினால், பாடசாலை அதிபர் S.R.M.M.முஹ்ஸி அவர்களிடம் ஸ்மார்ட் TV கையளிக்கப்பட்டது. இதன்போது, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் இஹ்திஸாம் மற்றும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக்கொண்டு, மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்றது.
மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்டீன் அமைப்பின் கடந்தகால, எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா, இளைஞர்கள் தொடர்பான கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதன்போது, கருத்து தெரிவித்த தலைவர் ரிஷாட், அமைப்பின் செயற்பாடுகளுக்கு தன்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மயோன் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் பிரதித் தவிசாளர் மொஹமட் இஸ்மாயில் முத்து முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாக காணப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பதவிக்கு இன்று (12) நால்வரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்களின் பெயர்களும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம், திங்கட்கிழமை (09) தில்லையடியில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான N.T.M.தாஹிர், M.H.முஹம்மத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 05ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு, 430,000 ரூபாய் பெறுமதியில், Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் திங்கட்கிழமை (09) கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.எச்.முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் அஜ்மல், செயலாளர் பொரியியலாளர் மரைக்கார், பொருளாளர் சட்டத்தரணி பாரிஸ், நிர்வாக சபை உறுப்பினர் ஹாபி உட்பட நிர்வாக உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்த நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்றைய தினம் (09) பிரதேச சபைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, பிரதேச சபையின் செயலாளர், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி,
“நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இங்கு வந்து நிற்பதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது இந்த பிரதேச சபையாகும். குறிப்பாக, அதனுடைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பின்றி, இந்த சபையை உச்சத்திற்கு கொண்டுசெல்ல என்னால் முடியாமல் போயிருக்கும்.
ஆனால், இங்கு கடமையாற்றிய அனைவரும், சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தீர்கள். அதனால்தான், இந்த சபையை முழு இலங்கையும் பேசுமளவிற்கு கொண்டுசெல்ல முடிந்தது.
மேலும், கடந்த காலங்களில் இந்த சபையினூடான பிரேரணைகள், செயற்திட்டங்களுக்கான முன்மொழிவுகளின் போது, எதுவித எதிர்ப்புக்களுமின்றி ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் கெளரவ உறுப்பினர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, இன்று (09) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, அனர்த்த நிவாரணம், அஸ்வெசும கொடுப்பணவு, பள்ளி நிர்வாக சர்ச்சை மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட இன்னோரான்ன விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, எந்தவொரு அரசியல் தலையீடுகளுமின்றி நிந்தவூர் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத் தெரிவுகளை நடாத்துமாறு, பிரதேச செயலாளர் மற்றும் கலாச்சார உத்தியோகத்தரிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கேட்டுக்கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (08) உப்புவெளி, சர்வோதயபுர மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை (08) நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகி வரும் வீதிகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அனுராதபுரத்தில் போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) இடம்பெற்றது.
அனுராதபுரம், நாச்சியாதுவவில் உள்ள ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
புத்தளத்தில் வாக்களித்த மக்களை சந்தித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல் செய்தவர்கள் 5 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய கட்சிகள் போட்டியிட்டமை ,நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கேட்டு வந்த போதும்,அவர்களுக்கு மக்கள் வாக்களித்தமையே இப்பிரதிநிதித்துவம் பறிபோனமைக்கு காரணம் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இந்த வாக்குகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டதாகிவிட்டது என்றும் கூறினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களான NT.தாஹீர் மற்றும் சட்டத்தரணி MH.முஹம்மட் ஆகியோரின் இல்லத்தில் இன்று (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இங்கு அவர் பேசுகையில் –
கூட்டணி தொடர்பில் பேசப்பட்ட போதும்.இந்த கூட்டணியின் வேட்பாளர்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை ஏற்படவில்லை.இதற்கான காரணமாக கடந்த கால அவர்களின் செயற்பாடாகும்.இதனால தான் தான் இம்முறை தேசிய கட்சியொன்றில் போட்டியிடுவதன் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் பற்றி நீண்ட கலந்துரையாடலின் பின்னர் முடிவு எட்டப்பட்டது.
புத்தளம் மாவட்டத்தில் 3 தசாப்தங்களாக பாராளுமன்ற அதிகாரம் இல்லாமல் இருந்த போது முதன் முதலாக சிரேஷ்ட புத்தளத்தின் அரசியல்வாதியான அல்-ஹாஜ்.எம்.எச்.எம்.நவவி அவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்கி,அதன் பிற்பாடு அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு அமைத்து பல அரசியல் கட்சிகளை ஒன்றுசேர்த்து பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொடுப்பதிலும்,இந்த தேர்தலில் வியூகம் அமைத்து ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதாக இருந்தால் 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளதால் அதில் 30 ஆயிரம் வாக்குகளை ஜக்கிய மக்கள் கூட்டணிக்கு அளிப்பதன் அவசியம் தொடர்பில் நாம் பேசிவந்தோம்.
ஆனால் மக்கள் இது தொடர்பில் கரிசனை செலுத்தாது வாக்களித்தன் பலன் நாம் எதிர்பார்த்த எமது பாராளுமன்ற பிரதி நிதியினை இழந்துள்ளோம்
இன்று இந்த மக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்துள்ளமையே,சில பகுதிகளில் வாழும் எமது மக்களின் பஞ்சமும்,வறுமையும் சில கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.எமது புத்தளம் மக்களுக்கு ஏதும் அனர்த்தம் ஏற்பட்டால் தேர்தல் காலத்தில் உங்களுக்கு காசு கொடுத்தவர்கள் வருவார்களா என கேட்கவிரும்புகின்றேன்.
தேர்தல் முடிந்ததும் நான் இன்று உங்களது மாவட்டத்திற்கு வருகைத்தந்துள்ளேன்.ஏனெனில் நாம் இந்த மக்களை நேசிப்பவன் என்பதினால்,நாங்கள் இன்று உங்களுடன் கலந்துள்ளோம்.இது என்றும் நாமும்,எமது கட்சியும் உங்கள் மீது கொண்டுள்ள அன்பாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மிகவும் குறைந்த வாக்குகளின் வித்தியாசத்தில் தாஹிர் அவர்கள் தோல்வியை தழுவியமை பெறும் கவலைத்தருகின்றது.அவர் வெற்றி பெறுவார் என்ற திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மேடை மேடையாக நாம் சொன்னோம்.சிலர் அதனை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டமையினை பார்க்கமுடிந்தது.
புத்தளம் மக்களின் அரசியல் என்பது எம்முடன் பின்னிப் பிணைந்தது.கடந்த கால அரசியல் அதிகாரங்களின் போது நாம் பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளோம்.பாடசாலை,மதத்தளங்கள்,வைத்திய சாலைகளுக்கான தேவைப்பாடுகள்,மின்சார வசதிகள்,மீனவ சமூகத்திற்கான உதவிகள்,பாதைகள்,வாழ்வாதார திட்டங்கள் என சிலவாகும்.
எனவே நீங்கள் மனம் தளராது எமது கட்சியுடன் இணைந்து பயணியுங்கள் அடுத்துவருகின்ற உள்ளுராட்சி,மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நாம் சிந்தித்து,யதார்த்தத்தை புரிந்து கொண்டு புத்திசாதுரியமாக செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என்ற வேண்டுகோளை முன் வைப்பதுடன்,கௌரவமான முறையில் இதனை அடைந்து கொள்ள புத்தளம் மக்கள் ஒன்றுபடுவதன் அவசியத்தையும்,அதே போன்று எமது கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் இதன்போது தெரிவித்தார்.
விசாரணைகளை வலியுறுத்தி மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்!
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவை கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
குறித்த தாய் மூச்சுத்திணறல் உட்பட்ட சில உபாதைக்குள்ளாமை தொடர்பில் அவரது உறவினர்கள அங்கு கடமையிலிருந்தவர்களுக்குச் சுட்டிக்காட்டியும் அவற்றைப் புறந்தள்ளி சாதாரண மகப்பேற்றுப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது அந்த தாய் மிகவும் கஷ்டமான நிலையிலேயே காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் மீண்டும் அவரது உறவினர்கள் வைத்தியர்கள், தாதியர்களிடம் சுட்டிக்காட்டியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே தாயின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் அனைத்து வசதிகள் இருந்தும் அசட்டைப்போக்குக் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் சிசுவும் உயிரிழந்தமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இந்த நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதி பகுதியில் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான நிலையும் ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற மன்னார் நீதிவான் இருவரது சடலங்களையும் பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இருவரது மரணங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மன்னார் பொது வைத்தியசாலை மீதான நம்பிக்கையையும் மக்கள் இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இதற்கு முன்னரும் இதே வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணமடைந்தமை தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.
எனவே, தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் ஏன் இடம்பெறுகின்றன என்பதனை மத்திய சுகாதார அமைச்சு மட்டத்திலும் விசாரணை செய்து குற்றவாளிகளாகக் காணப்படுவோரை தண்டிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு செய்வதால் மட்டும் எதிகாலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க முடியுமென தான் நம்புவதாகவும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாத் பதியுதீன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்தார்.
மன்னார், தாராபுரம், அல் மினா மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில், அவர் தனது குடும்பத்தினர் சகிதம் வாக்குச் செலுத்தினார்.
இதன்போது, தாராபுரம் பிரதேச இளைஞர்களினால் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன் பிற்பாடு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தலைவர் ரிஷாட் பதியுதீன்,
“வன்னி மாவட்ட மக்களுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம். அந்தவகையில், மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும், மக்கள் நலனுக்காகவும் நாம் ஆற்றிய பணிக்கு, மக்கள் இந்தத் தேர்தலிலே எமக்கு அதிகமான வாக்குகளை வழங்கி, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெற்றுத்தருவார்கள் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்”- ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவிப்பு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் மீது, கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் மீது இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (13) கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) இரவு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை முடித்துவிட்டு, வவுனியாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வந்துகொண்டிருந்த போது, அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் வைத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் தலைவர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனத்தை வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, வாகனத்தில் அவர் இருப்பதைக் கண்டு, மஸ்தானின் ஆதரவாளர்கள் “ரிஷாட் பதியுதீன் உள்ளே இருக்கின்றார், அவரை தாக்குங்கள்” என்று கூச்சலிட்டுள்ளனர். அதன்பின்னர், வாகனங்கள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கில், மிகவும் திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களே அவரைக் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவரது ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி சம்பவம் இடம்பெற்றபோது, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். காதர் மஸ்தானின் அடியாட்களை கட்டுப்படுத்த அவர்கள் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களில் ஒருவருக்கு, வைத்தியசாலையில் வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்பில், ரிஷாட் பதியுதீன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறித்த தாக்குதல் சம்பவம் தொலைக்காட்சி செய்திகள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினமான விடயம் அல்ல.
மேலும், ரிஷாட் பதியுதீனோ அல்லது அவரது ஆதரவாளர்களினாலோ எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாத பட்சத்தில், அமைதியாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்தக் குண்டர்கள் செயற்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சி செய்திகளிலும் ஒளிபரப்பாகின. அந்தக் காணொளிகளில் இருந்து தேவையான விபரங்களைப் பெற்று, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட அடாவடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பதை பொலிஸார் எளிதாகக் கண்டறிய முடியும்.
மேலும், நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் ரிஷாட் பதியுதீன் செய்த முறைப்பாட்டில், குறித்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட சில நபர்களின் பெயர் விபரங்களை, குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் பொலிஸார் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களை அந்த குண்டர் குழுவினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்களை பாதுகாப்பது காவல்துறையின் கடமை. என்றாலும், அந்தக் கடமையை காவல்துறை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் நிராதரவாகிவிடுகின்றார்கள். இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் தவறியமையினாலும் ரிஷாட் பதியுதீன், மேற்படி சம்பவம் தொடர்பில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
எனவே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்கள் தொடர்பில் உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறும், ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பை துரிதமாக வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, சனிக்கிழமை (09) கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடந்த எல்பிட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள், தேசிய மக்கள் சக்தியின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பொதுத் தேர்தலில், ஜனாதிபதியின் கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்கும் பலம் கிடைக்குமா? என்ற சந்தேகத்தையே, இந்த தேர்தல் முடிவு தோற்றுவித்துள்ளது.
எமது கட்சி வேட்பாளரான வைத்தியர் ஹில்மி மஹ்ரூப், நகர சபைத் தலைவராகச் செயற்பட்டதால், பல அனுபவங்களைப் பெற்றுள்ளார். திறமையாளர்களையே எமது கட்சி இத்தேர்தலில் நிறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில், நீங்கள் எங்களுக்குத் தந்த அமானிதங்களை முறையாகப் பயன்படுத்தினோம். மக்களை மீள்குடியேற்றுவது என்பது இலகுவான காரியமல்ல. இனவாதிகளின் எத்தனையோ இடையூறுகளை எதிர்கொண்டே எமது மக்களை குடியமர்த்தினோம்.
எமக்கெதிராக வழக்குத் தொடுத்தனர். எம்மைச் சிறையில் அடைத்தனர். எமக்குப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தினர். இவற்றுக்கெல்லாம், எதிர்நீச்சலடித்தே நமது சமூகப் பணிகளைச் செய்தோம்.
எனவே, எங்கிருந்தோ வந்தவர்களை எம்.பி.யாக்காமல், சமூகத்துக்கு நெருக்கமானவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஹிஸ்புல்லாஹ், தான் எம்.பி.யாக வேண்டும் என்பதற்காக, எதையும் செய்யக் கூடிய ஒருவர்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“ஹிஸ்புல்லாஹ் நொந்து நூலாகிப்போன நேரத்தில், அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தோம். வெற்றி பெற்றதன் பின்னர், எங்களுக்குத் தெரியாமலே மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று அமைச்சைப் பெற்றுக்கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் கேட்டபோது, சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் சமூகத்தால் அளிக்கப்படவிருந்த வாக்குகளை குறைப்பதற்காக, பசில் ராஜபக்ஷவின் கொந்தராத்து மூலம், ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று தேர்தலில் போட்டியிட்டு சதி செய்தார்.
அவர், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை பிழையாக வழி நடத்துகின்ற, பொய்த் தகவல் சொல்லுகின்ற ஒரு மகா பொய்யன். இதை நான் சொல்லவில்லை. அவரது தலைவரே சொல்லி இருக்கிறார். “அவர் ஒரு மகா நடிகன், அண்டப்புளுகன்” என்றெல்லாம் அவரது தலைவர் சொல்லி இருக்கின்றார். தேர்தலில் 42,000 எடுப்போம், 52,000 எடுப்போம் என்று ஹிஸ்புல்லாஹ் கூறித் திரிகிறார். அவரால் இந்தத் தேர்தலில் 22,000 கூட தாண்ட முடியாது.
அவர் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடங்கள் கல்குடாவுக்கு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியவர். இந்த விடயத்தில் காத்தான்குடி மக்களும் ஹிஸ்புல்லாஹ் அநியாயம் செய்துவிட்டார் என்று, அன்று முதல் இன்று வரை குற்றம் சுமத்துகின்றனர்.
இனியும் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி சமூகம் உங்களது வார்த்தைகளை நம்பிக்கைகொள்ளும் என்றா நீங்கள் எதிர்பார்கின்றீர்கள்?” என்று ஹிஸ்புல்லாஹ்விடம் தவிசாளர் அமீர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை, சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன்? எனக் கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இவ்வாறு கரிசனை என்ற போர்வையில் சமூகத்தின் காலைவாரிவிட சதி நடப்பதாகவும் தெரிவித்தார்.
மன்னார், முசலி – கொண்டச்சி பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது,
“எதுவானாலும் எமக்கான குரல், எமக்கான உரிமை என்று இருக்க வேண்டும். சமூகங்கள் ஆபத்தில் மாட்டிவிடும்போது, அவசரமாகக் குரல்கொடுப்பது நமக்கான தலைமைகளே! அபிவிருத்திகளிலும் அக்கறையுடன் செயற்படுவதற்கு நமக்கென தலைமைகள் இருப்பது அவசியம்.
பாடசாலைகள் இல்லாமல், மாலை நேரங்களிலும் காலை நேரங்களிலும் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன. வைத்தியசாலைகள் இல்லாது மக்கள் கஷ்டப்பட்டனர். மீளக்குடியமர்வதற்கு காணிகள் இல்லாது மக்கள் தவித்தனர். இந்த நிலைமைகளைப் போக்கியது யார்? எமக்கான தலைமைகளே. முத்தலிப்பாவா, ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், எம்.எச்.எம்.அஷ்ரஃப் மற்றும் நானுட்பட, சமூகத்துக்கு பல சேவைகள் செய்வதற்கு இதுவே காரணமாகியது.
இதனால், எமது பிள்ளைகள் இன்று வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக, உலமாக்களாக, சிறந்த வியாபாரிகளாக மற்றும் சமூகத்தில் நல்ல பல துறைகளில் மிளிர்கின்றனர். இந்த உயர்ச்சிக்கு காரணகர்த்தாக்களாக அமைந்தது நமக்கான தலைமைகளே!
இன்று இவ்வாறான தலைமைகளை அழிப்பதற்கே திட்டம் தீட்டப்படுகிறது. இந்த சதிகள் பற்றி மக்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும். அற்ப, சொற்ப சலுகைகளுக்காக சோரம்போனால், நமது எதிர்காலத்தை நாமே தொலைத்தது போல ஆகிவிடும்.
இத்தேர்தலில், எந்த சலுகைகளுக்கும் நீங்கள் விலைபோகக் கூடாது. சொந்தக் காலில் நிற்பதற்காக, நமக்கான தலைமைகளை வென்றெடுக்க வாக்களிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்!
முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, இன்றைய தினம் (03) மன்னாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“தேசிய மக்கள் சக்தி வென்றுவிட்டது என்பதற்காக, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க விரும்புகின்றீர்ககளா? பாராளுமன்ற அரசியலில், சமூகங்களுக்கென்று தனித்தனி பிரதிநிதித்துவங்கள் அவசியம். தேசிய அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளமைக்காக, சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமற் செய்ய இயலாது. எம்மத்தியில் உள்ள சிலர் இவ்வேலைகளைச் செய்வதற்கு துணிந்துள்ளனர். இந்த சதிகளுக்கு துணைபோயுள்ள நமது சகோதரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உலமாக்களுக்கும் உள்ளது.
பிரதிநிதித்துவங்கள் இல்லாத சமூகங்கள், திசை தவறும் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம். முறையான தலைமைத்துவங்கள் இருந்தபோதும், உணர்ச்சி, எழுச்சிகள் ஏற்பட்டதால், தமிழ் இளைஞர்கள் தவறான வழி சென்ற வரலாறு நமது நாட்டில் உள்ளது. இதனால், ஏற்பட்ட யுத்தம் சகல சமூகங்களையுமே பாதித்திருந்தன. இதுபோன்ற எழுச்சியை, இப்போது ஏற்பட்டுள்ள மாற்றமும் ஏற்படுத்துமோ என நாங்கள் அஞ்சுகின்றோம்.
புத்தளத்தில், ஒரு முஸ்லிம் எம்.பி. வரக்கூடாதென்று முஸ்லிம்களையே சதி செய்யத் தூண்டியுள்ளனர். கொழும்பில் முஜிபுர் ரஹ்மான் வரக்கூடாதா? கண்டியில், ரவூப் ஹக்கீம் வென்றால் இவர்களுக்கென்ன பிரச்சினை. வன்னியில், எனது தலைமைத்துவத்தை வேரறுக்கவும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
தேசிய கட்சிகளின் கைப்பொம்மைகளாக இருக்கப்போகும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தால் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. சமூகத்துக்கு ஏதாவது கெடுதிகள் அல்லது ஆபத்துக்கள் ஏற்பட்டால், எங்களால்தான் பேச முடியும். எனவே, எமக்கான பிரதிநிதித்துவங்களை நாமே வென்றெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இன்று தீபாவளியைக் கொண்டாடும் சகல தமிழ் சகோதரர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நரகாசுரன் ஒழிக்கப்பட்ட இத்தினம், கெட்ட எண்ணங்கள் நிலைப்பதை எதிர்க்கிறது. மானிடப்பிறவிகள் மத்தியில், தீய எண்ணங்களை உருவாக்கும் எந்த சக்திகளும் நிலைக்காது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் இத்தினம் அமைந்துள்ளது.
ஆலயங்கள் தோறும் இன்று தமிழ்ச் சகோதரர்கள் நன்மை நிலைக்கப் பிரார்த்திக்கின்றனர். அதேபோன்று, எமது நாட்டிலும் தீமைகள் விலகி, நன்மைகள் நிலைக்க, இந்நாளின் மகத்துவம் வழிகோலட்டும். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இத்துன்பங்கள் நிரந்தரமாக நீங்கி அமைதி நிலைக்கட்டும்.
பொதுத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், நமக்கான அமைதித் தீர்வுகளுக்கு நாமே வழிசமைக்க வேண்டும்.
நல்லதொரு அரசியல் கலாசாரம் பிறக்கவும் தமிழ் மக்கள் இந்நாளில் பிரார்த்திப்பது அவசியம். சகல இனங்களும் ஐக்கியப்படும் அரசியல் சித்தாந்தம் நிலைத்தாலே, இந்நாட்டில் அதர்மங்கள் அழியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை”- தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!
அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (29) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் 80 பேர் போட்டியிடவில்லை. வெல்ல முடியாது எனக் கருதியே இவர்கள் ஒதுங்கியுள்ளனர். அதேபோன்று, போட்டியிடும் இன்னும் சிலரை மக்கள் இம்முறை தோற்கடிக்கவும் தீர்மானித்துள்ளனர்.
அரசியலில் நிலைப்பதற்காக வக்கிரபுத்தியுடன் செயற்படும் மஸ்தான் போன்றவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். தாராபுரம் மண்ணின் பெருமைக்கே இழுக்கு ஏற்படும் வகையில், இவரது செயற்பாடுகள் இருந்தன. எனது சசோதரர் ரியாஜ் பதியுதீனை சிறையிலடைப்பதற்கு, கோட்டாவின் இனவாத எம்.பி.க்களுடன் சேர்ந்து மஸ்தானும் ஒப்பமிட்டார். நான், சிறையிலிருந்தபோது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என அடிக்கடி சோதனையிட்டனர். இறைவனின் நாட்டத்தால் என்னை கொரோனா தொற்றவில்லை. இல்லாவிட்டால், என்னை எங்கோ இழுத்துக்கொண்டு தொலைத்துவிடவே ராஜபக்ஷக்களுடன் சேர்ந்து இனவாதிகள் முயற்சித்தனர். இதற்கு உடந்தையாகச் செயற்பட்டவர்தான் இந்த மஸ்தான்.
நமது பிள்ளைகள் படிப்பதற்காக பாடசாலைகளுக்கு பல கட்டடங்களை கொண்டுவந்த வேளை, ரணிலின் செயலாளரிடம் சென்று, அந்தக் கட்டடங்களைக் கட்டவிடாமல் தடை விதித்தார். இந்த அபிவிருத்திகள் இங்கு நடந்தால், ரிஷாட்டின் அரசியல் பலமடையும் எனப் பயந்தவர்தான் இவர். அரசியலுக்காக பிள்ளைகளுக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துவிடாதீர்கள். இயலுமானால், நீங்களும் பாடசாலைகளுக்கான அபிவிருத்தியைக் கொண்டுவாருங்கள் என ரணிலின் செயலாளர், அவருக்கு அறிவுறுத்தியிருந்தார். இவற்றையெல்லாம் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதனாலேயே கூறுகின்றேன்.
வன்னி மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாத்தவாறே நான் செயற்படுகின்றேன். இறைவனின் உதவியால், நமது கட்சி இந்த வன்னி மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கான களநிலவரங்கள் கனிந்து வருகின்றன. அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் ஆசனங்களை வெல்லும் நிலைமைகளே ஏற்பட்டுள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால், சிறுபான்மைக் கட்சிகளுக்குள் அதிக பலமுள்ள கட்சியாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும்” என்று அவர் கூறியுள்ளார்.
காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களில் பொய்களைக்கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரூமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவின் மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்தும், ஏறாவூர் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு, ஊரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏறாவூ,ர் மிச்நகரில் (25) இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தை வென்று இரண்டு ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தேர்தலில் ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் போட்டியிடாத நிலையில் எமதூரின் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது.
ஹிஸ்புல்லா அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்ததனால்தான், அவர் இலகுவில் பாராளுமன்றம் செல்லலாமென நினைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸிக்கு தாவினார். அக்கட்சியில் இருந்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதனால் இப்போது ஹிஸ்புல்லாவின் பாராளுமன்ற கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
தோல்வியிலிருந்து மீள்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் ஹிஸ்புல்லா, ஏறாவூர் ஓட்டமாவடி எல்லைக் கிராமங்களுக்குள் ஊடுருவிக்கொண்டு, தான் வெற்றி பெறுவதாகவும் ஏனையவர்கள் தோல்வியடைவதாகவும் சிறுபிள்ளைத்தன கணக்குகளை காட்டுகின்றார்.
அவர் மக்களை ஏமாற்றி வாக்கு தேடுகின்ற இந்த போலிப் பிரச்சாரத்தினால் ஓட்டமாவடி இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டார். ஏறாவூர் மக்கள் ஒன்றுபட்டுள்ள இந்நிலையில், இங்கும் வந்து போலிக் கணக்குகளைக் காட்டி மக்களை ஏமாற்ற முற்பட்டால் ஏறாவூர் மக்களாலும் விரட்டப்படுவார் என நினைக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கும், அக்கட்சியின் தலைவரை கடந்த காலங்களில் மிகக்கேவலமாக விமர்சித்து வந்த ஹிஸ்புல்லா, இன்று அந்தக்கட்சியையும், அதன் தலைவரையும் புகழ்பாடுவது வேடிக்கையாகவுள்ளது.
அவர் அரசியல் அதிகாரத்தில் இருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு பல்வேறு அநியாயங்களைச் செய்தார். இப்போது கட்சியினதும் தலைவரினதும் விசுவாசியாக மாறியிருக்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் இன்று அந்தக்கட்சியின் தலைவரால் விரட்டப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஹிஸ்புல்லாவினதும் போலி அரசியல் செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்துக்கு ஆபத்தாகும். இது துடைத்தெறியப்பட வேண்டும்.
தரகர்களை வைத்துக்கொண்டு ஏறாவூரை அரசியல் அநாதையாக்க முயலும் ஹிஸ்புல்லாவின் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். பல்லாண்டு காலமாக பாதுக்கப்பட்டு வந்த எமது பிரதிநிதித்துவம் இம்முறையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்காக ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள், இளைஞர்கள் முன்னினன்று உழைக்க வேண்டும் என்றார்.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,
“எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள், பல படிப்பினைகளைச் சொல்கின்றன. அரசாங்கத்தின் எழுச்சி எதிர்பார்த்த அளவு அதிகாரிக்காது என்பது முதலாவது. சாத்தியமாகாதவற்றை கூறிவிட்டு, செய்ய முடியாமல் திணறுவதால் ஏற்பட்ட பின்னடைவு இரண்டாவது. பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாதது என்பது மூன்றாவது. இவை போன்ற பல விடயங்களை இத்தேர்தல் முடிவுகள் எதிர்வுகூறுகின்றன.
எனவே, அமையவுள்ள அரசாங்கம் கூட்டரசாங்கமாகவே அமையப்போகிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு நம்பிக்கையுடன் வாக்களியுங்கள். சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரானவர்கள் என விமர்சிக்கப்பட்ட சம்பிக்க ரணவக்க எங்களுடன் இல்லை. சன்ன ஜயசுமனவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை.
எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தால், அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பம் எமக்கே கிடைக்கும். வன்னியில் போட்டியிடும் சகோதரர் ரமணனுக்கு வாக்களித்தால், எமது கட்சி நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை வெல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்” என்றார்.
வடபுல மக்களுக்கு அடைக்கலமளித்த புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான என்.டி.எம்.தாஹிர் மற்றும் எம்.எச்.முஹம்மத் ஆகியோரை ஆதரித்து, வெள்ளிக்கிழமை (25) அல்-காசிம் சிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில், எமது கட்சி அயராது உழைக்கிறது. இதற்காகப் பல அர்ப்பணிப்புக்களையும் செய்து வருகிறது. நெய்னா மரிக்காருக்குப் பின்னர், புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை எமது கட்சியே காப்பாற்றியது. நவவிக்குத் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை வழங்கினோம். இதையடுத்து, கடந்த பொதுத் தேர்தலில் அலிசப்ரி ரஹீமை வெல்லச் செய்தோம்.
வடபுலத்திலிருந்து வந்தோர்களை எம்.பியாக்கும் வேலையை நாங்கள் செய்யவில்லை. புத்தளம் மண்ணைச் சேர்ந்தவர்களையே இத்தேர்தலில் நிறுத்தியுள்ளோம். இந்த ஊரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதற்காக எமது கட்சி முயற்சிகளை எடுத்தபோது, சிலர் பிரதேசவாதம் பேசினர். இவர்களை நாம் மறந்துவிட முடியாது. இன்று இவர்களே நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
சுமார், ஒன்றரை இலட்சம் சிறுபான்மை வாக்குகளை வைத்துக்கொண்டு, ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கே இவ்வூர் தடுமாறியது. இவ்விடயத்தில், உங்களுக்கு அரசியலில் வழிகாட்டியது, இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸே!
வடபுலத்து மக்களுக்காக, புத்தளம் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களை என்றுமே எமது கட்சி மதிக்கிறது. கடந்த காலத்தில், இம்மண்ணின் பிரதிநிதித்துவத்தை மலின சலுகைகளுக்காகக் காட்டிக்கொடுத்தவரை தண்டிக்க முற்பட்டபோது, முட்டுக்கட்டை போட்டவர்கள், இன்று ஊருக்காகப் பேசுவதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பொத்துவிலில் புதன்கிழமை (23) நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளர் என்.எச்.முனாஸை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“பொத்துவில் பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவம் அவசியம். இதற்காகவே, பல தடவைகள் எமது கட்சி இங்கு வேட்பளார்களை நிறுத்தியது. 2015 பொதுத் தேர்தலில், எஸ்.எஸ்.பி.மஜீதை வேட்பாளராக்கினோம். இந்த ஊரில் மாத்திரம் அவருக்கு 45000 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து வந்த பொதுத் தேர்தலில் முஷர்ரபை வேட்பாளராக்கினோம். பொத்துவில் மக்கள் வழங்கிய 95000 வாக்குகளுடன் வேறு பிரதேச வாக்குகளும் கிடைத்ததால், முஷர்ரப் எம்.பி.யாகத் தெரிவானார். இவரின் வெற்றிக்காக ஊரே உழைத்தது. பலரும் நிதியுதிவி செய்தனர். ஓட்டோ ஓடுபவர்கள், நாளாந்தத் தொழிலாளிகள் மற்றும் வெளிநாடுகளில் உழைப்போர் எனப் பலரும் நிதியுதவி வழங்கி முஷர்ரபை வெல்ல வைத்தனர். ஏன்? ஊரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கே. ஆனால், அவர் செய்த வேலைகளால், பொத்துவில் நற்பெயருக்கே களங்கம் ஏற்பட்டது.
எமது மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட சாராயக் கடையைத் திறந்து, தனது பொக்கற்றை பலப்படுத்தினார். கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக மக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்தார். இவ்வாறானவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை. இம்முறை மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர்.
டொக்டர் இஸ்ஸடீன் போட்டியிட முன்வந்தபோதும், சில சிக்கல்களால் அவர் விட்டுக்கொடுத்தார். இதனால், சகோதரர் முனாஸை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். பொத்துவில் பிரதேச சபை உறுப்பினராக இருந்த இவரிடம் நல்ல அனுபவங்கள் உள்ளன. மக்களும் இவரை மதிக்கின்றனர்.
எமது வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு எம்.பி.க்களை வெல்ல முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் இன ஒற்றுமை அவசியம் பேணப்படல் வேண்டும். விஷேடமாக தமிழ் மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புங்கள். மூவினத்தவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். இங்குதான் அரசியல் ஆளுமைகள் வளர்க்கப்படுகின்றன. மக்களின் அமானிதமே எங்களுக்கு முக்கியம். இதனால், இம்முறை போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் உறுதியான சத்தியக்கடதாசி வாங்கியுள்ளோம். சமூகத்துக்கு துரோகமிழைப்போர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை” என்று கூறினார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் அரச நிருவாக சேவை உத்தியோகத்தரும், வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில், அவரது கட்சி காரியாலயத்தை திறந்து வைத்து (21) மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தனது உரையில் திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கியிருப்பதால் போட்டித் தன்மையை காணப்படுகிறது. மக்கள் புது முகங்களை விரும்புவதால் இவர்களுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
எமது கட்சி நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்றன அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் அதற்குரிய மக்கள் செல்வாக்கும் ஆதரவும் காணப்படுகிறது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் பொதுவாக பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற குறை நிறைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
இதற்காக மாவட்ட மக்கள் பூரண ஆதரவைத் தந்து எமது கட்சிக்கு வாக்களிப்பதோடு எனது இலக்கம் மூன்றுக்கும் வாக்களித்து என்னையும் புதிய ஆட்சியில் அமையப் போகின்ற பாராளுமன்றத்துக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குயுண்டு என மேலும் தெரிவித்தார்.
பலஸ்தீன மக்களின் தலைமைகளை அழித்து, காஸாவை அடக்கியாளும் ஸியோனிஸவாதிகளின் வெறியாட்டம் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஓராண்டு ஓடியும் காஸா மக்களின் மன வலிமைகள் உறுதியுடனே உள்ளன. அதிபயங்கரக் குண்டுகளை வீசி, அப்பாவிச் சிவிலியன்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. மனு தர்மங்களை மீறி, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை சர்வதேசம் தடுத்து நிறுத்தவும் இல்லை. இருந்தபோதும், போரின் கொடுமைகளால் காஸா மக்கள் துவண்டுபோகவும் இல்லை. இம்மக்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவமே இதற்குக் காரணமாகும். இதற்காகவே, தலைமைகளை அழிப்பதென்று வரிந்துகட்டி நிற்கிறது இஸ்ரேல்.
இலத்திரனியல் தொழில்நுட்ப உதவியுடன் இஸ்மாயில் ஹானியா கொல்லப்பட்ட கொடூரத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சத்தின் உச்சியிலும் ஆபத்தின் விளிம்பிலும் இருப்பதை உணர்ந்தும் ஹமாஸுக்கு தலைமை வழங்குவதற்கு யஹ்யா சின்வார் முன்வந்தார். பாரமேற்றுப் பணியாற்ற முன்னரேயே இவரையும் இஸ்ரேல் குறிவைத்துக் கொன்றுள்ளது. காஸா தலைமைத்துவத்தில், இஸ்ரேலுக்குள்ள படபடப்பையே இது காட்டுகிறது.
என்னவானாலும் காஸா மக்களுக்கு விடிவு கிடைப்பதை இறைவனைத் தவிர எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த நம்பிக்கையுடன்தான் காஸாக் குழந்தைகளும் பிறக்கின்றன.
இழப்புக்களில் எழும் தேசமாக வெகு விரைவில் காஸா தலையெடுக்கும். இதற்கான தலைமைகளே அம்மண்ணில் பிறப்பதாகவும்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பிரதேச விளையாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களை போதையிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்பதற்காகவும் அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரத்தை இழந்த போதும் நிதியுதவியளித்து வந்துள்ளோம்.
கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் எனவுன் எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமென்றும் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாழைச்சேனை, இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் (18) அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரதேச இளைஞர்களை வலுவூட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான வேலைத்திட்டங்களைச் செய்துள்ளோம்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்கள், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைந்து அப்பணியினை முன்னெடுக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் எவ்வாறு விலைப்பட்டுப்போனது என்பது உங்களுக்கு தெரியும். இனியும் அப்படி விலைப்பட்டு போகின்ற சமூகமாக இருந்து விடாமல், எல்லோரும் ஒற்றுமைப்பட்டு பிரதிநிதித்துவத்தைப்பெறும் வல்லமையுடன் அதனை வெளிப்பிரதேச அரசியல்வாதிகளுக்கு முகவர்களாக இல்லாமல் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் காப்பற்றிக்கொள்கின்ற அமைப்புக்குள் நாங்கள் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கடந்த காலத்தில் கல்குடாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தோற்கடித்து வெளியூர் பிரதிநிதியை வெல்ல வைத்தும் இம்மைதானத்திற்கு ஒரு லோட் கிறவலைக்கூட போட முடியவில்லை என்பது தான் வாஸ்தவம். இது உங்கள் கண்ணுக்கு முன்னாள் தெரிகின்ற சாட்சியம்.
இந்த கட்டுமானத்தைக்கூட பாவிக்கக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கே கடந்த காலங்களில் சரிவர நெறிப்படுத்தி, திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு வரவிருக்கின்ற தேர்தலின் பின்னர் இப்பிரதேசத்திலிருக்கின்ற இளைஞர்களுக்கு வழி விடுகின்ற வேலைத்திட்டத்தையும் அவர்களையும் உள்வாங்கி ஒவ்வொரு தேர்தல்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சந்தர்ப்பத்தையும் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க காத்திருக்கின்றோம்.
ஆனால், எக்காரணத்துக்காகவும் வெளியூர் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குகின்ற வேலையை செய்கின்ற இப்பிரதேசத்திலுள்ள தலைவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.
இவ்விடயத்திலே நீங்கள் விழிப்பற்றவர்களாக இருப்பீர்களாக இருந்தால் என்றோ ஒரு நாள் உங்கள் பிள்ளைகள் அல்லது இம்மைதானத்திலே இருக்கும் உங்களில் ஒருவர் பாராளுமன்றத்தையோ மாகாண சபையையோ அலங்கரிக்கவே முடியாது போய் விடும் என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்தியாக வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும். அத்துடன், இச்சுற்றுத்தொடரில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வாழைச்சேனை அல் அக்ஷா அணியினருக்கும் இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்ட ஜெயந்தியாய லெஜண்ட் அணியினருக்கும் பங்கு பற்றிய ஏனைய அணிகளுக்கும் சுற்றுத்தொடரை சிறப்பாக வெற்றிகரமாக நடாத்தி முடித்த இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் மற்றும் கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதுடன், என்னையும் அதிதியாக அழைத்து கெளரவித்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப். எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, நேற்று செவ்வாய்க்கிழமை (15) கிண்ணியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
“ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்தோம். அந்தத் தேர்தலில் சுமார் 95,000 வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், எமது தீர்மானத்துக்கு உடன்பட முடியாது எனக் கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைதியாக இருக்கப்போவதாகத் தெரிவித்தார். பின்னர், ரணிலின் தந்திரத்துக்குப் பலியாகி எமது கட்சியிலிருந்து தூரமாகிவிட்டார். அப்துல்லாஹ் மஹ்ரூப் கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் செய்த பணிகளுக்கு நன்றி கூறுகிறோம். 2010 மற்றும் 2015 தேர்தல்களில், அவரை வேட்பாளராக நிறுத்தி வெல்ல வைத்ததும் எமது கட்சியே. இதற்காக இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் உழைத்தனர். இப்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எங்களுடன் இல்லை. எவர் வெளியேறினாலும் பறவாயில்லை. திறமையானவர்களை களத்துக்கு கொண்டுவந்து, கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்காக இருக்கும்.
அந்தவகையில், டொக்டர் ஹில்மி மஹ்ரூபை பாராளுமன்றத் தேர்தலில் நிறுத்தியுள்ளோம். நகர சபை தவிசாளராக இருந்த இவரிடம் நிறைய அனுபவங்கள் உள்ளன. சிறந்த கல்விமானாகவும் ஒழுக்கசீலராகவும் இவரை நாம் பார்க்கிறோம். இறைவன் நாடினால் அவரது வெற்றி உறுதியாகும்.
புல்மோட்டை முதல் தோப்பூர் வரை அவருக்கு ஆதரவு இருக்கிறது. இம்மாவட்டத்தின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி உழைப்பதற்கு, டொக்டர் ஹில்மி மஹ்ரூபை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவோம் என தலைவர் ரிஷாட் உறுதி!
மக்கள் ஆணையின் நம்பிக்கையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை பொதுத் தேர்தலில் இருமுனை வியூகங்களில் களமிறங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்புமனுக்களை இக்கட்சி தாக்கல் செய்துள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகம் இம்முறை தேர்தலில் வெல்லப்படும் என்பதே மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த பொதுத்தேர்தலிலும் இதே யுக்தியுடன் களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நான்கு ஆசனங்களை வென்றிருந்தது. இவ்வாறு பெறப்பட்ட மக்களின் அமானித ஆணையை மீறிச் செயற்பட்ட மூன்று எம்.பி.க்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சி, அதிகாரங்களுக்கான கூட்டாக இல்லாமல், ஆசனங்களை வெல்வதற்கான விடயங்களுக்கே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்யப்பட்ட தேர்தல் உடன்பாடுகளில், பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இன்று (11) வவுனியா மாவட்டச் செயலகத்தில் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
“ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஒரு பெண் வேட்பாளர் உட்பட, அனைத்து மதங்களைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, ஒற்றுமையாக மாவட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் களம் இறங்கியுள்ளோம்.
அனுபவமுள்ளவர்கள், கல்விமான்கள் மற்றும் ஆற்றலுள்ள புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். எனவே, வன்னி மக்கள் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அதிகபட்ச உறுப்பினர்களை தெரிவுசெய்ய வெண்டும். அதன்மூலம், இந்த மாவட்டத்திற்கு தொடர்ந்தும் நல்ல பணிகளை செய்வதற்கு நாம் எண்ணியுள்ளோம்.
கடந்த நான்கு வருட காலமாக கோட்டா அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள எமது அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்கவும், மாவட்டத்தின் முன்னேற்றத்துக்காகவும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.