Breaking
Fri. Jan 3rd, 2025

காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களில் பொய்களைக்கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரூமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாவின் மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்தும், ஏறாவூர் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு, ஊரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏறாவூ,ர் மிச்நகரில் (25) இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தை வென்று இரண்டு ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தேர்தலில் ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் போட்டியிடாத நிலையில் எமதூரின் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது.

ஹிஸ்புல்லா அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்ததனால்தான், அவர் இலகுவில் பாராளுமன்றம் செல்லலாமென நினைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸிக்கு தாவினார். அக்கட்சியில் இருந்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதனால் இப்போது ஹிஸ்புல்லாவின் பாராளுமன்ற கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

தோல்வியிலிருந்து மீள்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் ஹிஸ்புல்லா, ஏறாவூர் ஓட்டமாவடி எல்லைக் கிராமங்களுக்குள் ஊடுருவிக்கொண்டு, தான் வெற்றி பெறுவதாகவும் ஏனையவர்கள் தோல்வியடைவதாகவும் சிறுபிள்ளைத்தன கணக்குகளை காட்டுகின்றார்.

அவர் மக்களை ஏமாற்றி வாக்கு தேடுகின்ற இந்த போலிப் பிரச்சாரத்தினால் ஓட்டமாவடி இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டார். ஏறாவூர் மக்கள் ஒன்றுபட்டுள்ள இந்நிலையில், இங்கும் வந்து போலிக் கணக்குகளைக் காட்டி மக்களை ஏமாற்ற முற்பட்டால் ஏறாவூர் மக்களாலும் விரட்டப்படுவார் என நினைக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கும், அக்கட்சியின் தலைவரை கடந்த காலங்களில் மிகக்கேவலமாக விமர்சித்து வந்த ஹிஸ்புல்லா, இன்று அந்தக்கட்சியையும், அதன் தலைவரையும் புகழ்பாடுவது வேடிக்கையாகவுள்ளது.

அவர் அரசியல் அதிகாரத்தில் இருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு பல்வேறு அநியாயங்களைச் செய்தார். இப்போது கட்சியினதும் தலைவரினதும் விசுவாசியாக மாறியிருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் இன்று அந்தக்கட்சியின் தலைவரால் விரட்டப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஹிஸ்புல்லாவினதும் போலி அரசியல் செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்துக்கு ஆபத்தாகும். இது துடைத்தெறியப்பட வேண்டும்.

தரகர்களை வைத்துக்கொண்டு ஏறாவூரை அரசியல் அநாதையாக்க முயலும் ஹிஸ்புல்லாவின் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். பல்லாண்டு காலமாக பாதுக்கப்பட்டு வந்த எமது பிரதிநிதித்துவம் இம்முறையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதற்காக ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள், இளைஞர்கள் முன்னினன்று உழைக்க வேண்டும் என்றார்.

Related Post