Breaking
Thu. Dec 26th, 2024

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்காளர் இடாப்பிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அரச அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும். 1990இல், வடக்கிலிருந்து புலிகள் இதே பாணியில்தான் முஸ்லிம்களை வெளியேற்றினர். இன்னும், இதே சிந்தனையில் அரச அதிகாரிகள் செயற்படுவது வெட்கக்கேடானது.

நான் அமைச்சராக இருந்தவேளை, முப்பதாயிரம் தமிழர்களை மீளக்குடியேற்றினேன். ஆனால், முஸ்லிம்களை குடியேற்ற வடக்கிலுள்ள அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும், அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று பலத்த சவால்களுக்கு மத்தியிலேதான், ஏழாயிரம் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற காணிகளை துப்புரவு செய்தபோது, எங்களது முயற்சிகளுக்கு குறுக்காக நின்ற சிலர், எங்களை கொன்றுவிட்டுத்தான் முஸ்லிம்களை குடியேற்ற வேண்டும் என்றனர். எங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையில், முஸ்லிம்களின் காணிகளை இலஞ்சம் பெற்று வேறு பலருக்கு விற்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனவே, எஞ்சியுள்ள வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முறையான வேலைத்திட்டத்தை கோருகின்றேன். இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போருக்கே எதிர்வரும் தேர்தலில் எமது ஆதரவு.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்கள் மீள்குடியேறும் வரை எதிர்கொள்ளும் தொழில்ரீதியான சவால்களை தீர்ப்பதற்கும் நடவடிக்ககைள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

🔴 Watch Video:

Related Post