Breaking
Fri. Dec 27th, 2024

விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்!

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, இன்றைய தினம் (03) மன்னாரில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“தேசிய மக்கள் சக்தி வென்றுவிட்டது என்பதற்காக, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க விரும்புகின்றீர்ககளா? பாராளுமன்ற அரசியலில், சமூகங்களுக்கென்று தனித்தனி பிரதிநிதித்துவங்கள் அவசியம். தேசிய அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளமைக்காக, சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமற் செய்ய இயலாது. எம்மத்தியில் உள்ள சிலர் இவ்வேலைகளைச் செய்வதற்கு துணிந்துள்ளனர். இந்த சதிகளுக்கு துணைபோயுள்ள நமது சகோதரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உலமாக்களுக்கும் உள்ளது.

பிரதிநிதித்துவங்கள் இல்லாத சமூகங்கள், திசை தவறும் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம். முறையான தலைமைத்துவங்கள் இருந்தபோதும், உணர்ச்சி, எழுச்சிகள் ஏற்பட்டதால், தமிழ் இளைஞர்கள் தவறான வழி சென்ற வரலாறு நமது நாட்டில் உள்ளது. இதனால், ஏற்பட்ட யுத்தம் சகல சமூகங்களையுமே பாதித்திருந்தன. இதுபோன்ற எழுச்சியை, இப்போது ஏற்பட்டுள்ள மாற்றமும் ஏற்படுத்துமோ என நாங்கள் அஞ்சுகின்றோம்.

புத்தளத்தில், ஒரு முஸ்லிம் எம்.பி. வரக்கூடாதென்று முஸ்லிம்களையே சதி செய்யத் தூண்டியுள்ளனர். கொழும்பில் முஜிபுர் ரஹ்மான் வரக்கூடாதா? கண்டியில், ரவூப் ஹக்கீம் வென்றால் இவர்களுக்கென்ன பிரச்சினை. வன்னியில், எனது தலைமைத்துவத்தை வேரறுக்கவும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

தேசிய கட்சிகளின் கைப்பொம்மைகளாக இருக்கப்போகும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தால் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. சமூகத்துக்கு ஏதாவது கெடுதிகள் அல்லது ஆபத்துக்கள் ஏற்பட்டால், எங்களால்தான் பேச முடியும். எனவே, எமக்கான பிரதிநிதித்துவங்களை நாமே வென்றெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post