Breaking
Mon. Dec 23rd, 2024

இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரமாக படகில் பரிதவித்த 44 இலங்கைத் தமிழர்கள் தரையிறங்க அந்த நாட்டு அரசு நேற்று(18) அனுமதி அளித்தது.

கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இன்ஜின் கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளிப்பதை அந்த நாட்டு மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்தோனேசிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். படகில் 9 சிறுவர்கள், பெண்கள் உட்பட 44 பேர் இருந்தனர்.

அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தோனேசியாவில் தரையிறங்க கடற்படை வீரர்கள் அனுமதிக்கவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்பிறகும் படகில் இருந்து யாரும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மட்டும் படகுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டன. சில பெண்கள் தரையிறங்கிய போது இந்தோனேசிய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர். ஐ.நா. மனித உரிமை ஆணையம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக்குதலால் நேற்று தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தோனேசிய துணை அதிபர் ஜுசப் கல்லா ஜகார்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 11 ஆம் திகதி ஆசே பெஹர் கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 44 தமிழ் அகதிகள் ஒரு படகில் தத்தளிப்பது தெரிய வந்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அகதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பழுதடைந்த படகை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. தமிழ் அகதிகளின் இலக்கு இந்தோனேசியா அல்ல. அவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்தியாவில் இருந்து சுமார் 20 நாட்கள் கடல் பயணத்துக்குப் பிறகு இந்தோனேசிய கடல் எல்லைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் விரும்பும்போது இந்தோனேசியாவை விட்டு புறப்படலாம். இந்தோனேசிய கடல் எல்லை வரைக்கும் எங்களது கடற்படை பாதுகாப்பு அளிக்கும். அதன்பிறகு சர்வதேச எல்லைக்குச் சென்ற பிறகு அகதிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் விருப்பப்படி செயல் படலாம் என அவர் தெரிவித்தார்.

By

Related Post