Breaking
Sun. Nov 17th, 2024

“அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பங்காற்றி இருப்பதாக அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம், தில்லையடியில் இன்று காலை (28) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“வடக்கு அகதிகளை அரவணைத்த புத்தளம் மக்களை கெளரவிக்கும் வகையிலேயே, கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் பதவியை அவர்களுக்கு வழங்கி நன்றிக்கடன் செலுத்தியுள்ளோம். மூன்று தசாப்தங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத புத்தளம் மக்களின் மனக்குறையை உணர்ந்து, அவர்களை விழிப்பூட்டி, அதிகாரத்தின் தேவையை உணர்த்துவதில், மக்கள் காங்கிரஸ் அபரிமிதமான முயற்சிகளை செய்துள்ளது. அந்தவகையில், இம்முறை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில், முக்கியமான சமூகக்கட்சிகள், பொதுச் சின்னமான தராசு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், புத்தளத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லையென்ற நீண்டநாள் கவலைக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மக்கள் காங்கிரஸ் கட்சி, பொதுத்தேர்தலில் அம்பாறையில் தனித்தும், புத்தளத்தில் பொதுச் சின்னத்திலும், வன்னி, குருநாகல், அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதை நீங்கள் அறிவீர்கள். 19 வருடங்கள் அரசியலில் பணியாற்றும் நாம், பல சவால்களுக்கு முகங்கொடுத்து, தடைகளைத் தாண்டி மக்களுக்கு பணியாற்றியிருக்கின்றோம். கரடுமுரடான பாதையில் பயணம் செய்தே, இந்தப் பணிகளை நாம் மேற்கொண்டோம். இவை இலகுவில் மேற்கொள்ளப்பட்டதல்ல. கட்சி ஒன்றை ஆரம்பிப்பதும், அதனை வளர்த்தெடுப்பதும், அதனை செவ்வனே கொண்டுசெல்வதும் இலேசான காரியம் அல்ல. எனினும், எம்மால் முடிந்தவரை மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், இறைவனின் துணையுடன், நாம் இந்த அரசியல் பயணத்தில் தொடர்ந்து இருக்கின்றோம்.

தம்புள்ளை தொடக்கம் கண்டி, குருநாகல் சம்பவங்கள் வரை, முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளையும் தட்டிக்கேட்டோம். களத்தில் நின்று பணியாற்றினோம். நியாயத்துக்காக குரல் கொடுத்தோம். முடிந்தளவு நீதியைப் பெற்றுக்கொடுத்தோம். இதனால்தான் இனவாதிகளும் கடும்போக்குவாதிகளும் எம்மை பழிவாங்குவதற்கும், தண்டிப்பதற்கும் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் எமக்குத் தருகின்ற தொல்லைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. தினமும் கொடுமைப்படுத்துகின்றார்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வடிவங்களில் தினுசுதினுசான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். உள்ளத்தை நோகடிக்கின்றார்கள். வேறொரு அரசியல்வாதியாக இருந்தால் எப்போதோ இந்த அரசியலைவிட்டு ஓடியிருப்பார், ஒளிந்திருப்பார், அல்லது ஓய்வெடுத்திருப்பார். அவ்வாறு எம்மை ஒடுக்குவதற்காகவே இவ்வாறான பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்கள்.

மக்கள் காங்கிரஸின் அரசியல் பயணத்தை நிறுத்த வேண்டும். அக்கட்சியை அழிக்க வேண்டும். அதன் தலைமையை சிறைப்பிடிக்க வேண்டும். கட்சிக்காகவும் தலைமைக்காகவும் பரிந்து பேசுபவர்களை பயமுறுத்த வேண்டும். கட்சிக்குப் பின்னால் இருப்பவர்களை தேடித்தேடி அச்சுறுத்த வேண்டும். இதுதான் இப்போது அவர்கள் செய்யும் இழி காரியம்.

இந்தத் தேர்தலில், இனவாதிகளை தோற்கடிப்பதே நமது பிரதான இலக்கு. நாம் ஒன்றுபடுவதன் மூலமே அதனை சாதிக்க முடியும். மக்கள் காங்கிரஸின் இந்த சமூகத்துக்கான பயணத்தில் நீங்கள் ஒன்றுபட வேண்டும்.

ஜனாஸாக்களை எரிக்கின்ற போது, வாய்பேசாத மந்தைகளாகவும், மடந்தைகளாகவும் இருந்தவர்கள் இப்போது “நாங்கள்தான் அரசாங்கம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாக்கூசாமல் கேட்பதுதான் வேடிக்கையானது.

மக்கள் காங்கிரஸ் தலைமை எந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றதோ, அதேயளவு பிரச்சினைகள் சமூகத்தின் முன்னாலும் வந்து நிற்கின்றன. ஜனாஸா எரிப்பு மட்டுமல்ல நமது மத உரிமை, கலாசார உரிமைகள் மற்றும் முன்னோர்கள் எமக்குப் பெற்றுத்தந்த விஷேட உரிமைகளை எல்லாம் இல்லாமல் ஆக்க வேண்டுமென்று, ஒரு கூட்டம் கூப்பாடு போடுகின்றது. சட்டங்களைக் கொண்டுவர துடிக்கின்றது.

எனவே, எதிர்காலத்தில் எமக்கு ஏற்படவுள்ள இவ்வாறான ஆபத்துக்களை தோற்கடிக்க, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் முயற்சிகளை முறியடிக்க, சமுதாயத்துக்காக பணியாற்றும் எமக்கு ‘மக்கள் ஆணையை’ வழங்குங்கள்” என்றார்.

Related Post