–சுஐப் எம்.காசிம்–
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம் பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும், இக்குறுகிய காலத்தில் வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதையே அக்கட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக் காட்டுகின்றது.
கைப்பற்றிய சபைகள்
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு, மொத்தமாக 166 உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி, அதன் தவிசாளர் பதவியைத் தனதாக்கிக்கொண்டதுடன், 5 உள்ளுராட்சி சபைகளின் பிரதித் தவிசாளர் பதவிகளையும் பெற்று பங்காளிக் கட்சியாகப் பரிணமிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடிப் பிரதேசசபை), மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய மூன்று பிரதேச சபைகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபையுடன் மொத்தமாக 07 உள்ளூராட்சி சபைகளை தம் வசப்படுத்தியுள்ளது.
கட்சிக்குக் கிடைத்த பிரதித் தவிசாளர்கள்
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச சபை, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச சபை, குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பிரதேச சபை, வவுனியா மாவட்டத்தில் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபை அடங்கலான 05 சபைகளின் பிரதித் தவிசாளர் பதவிகளையும் பெற்று முத்திரை பதித்துள்ளது.
யானைச் சின்னத்தில் பெற்ற வெற்றி
வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 20 உறுப்பினர்களையும், மன்னார் மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 34 உறுப்பினர்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 12 உறுப்பினர்களையும், கொழும்பு மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 02 உறுப்பினர்களையும், புத்தளம் மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 12 உறுப்பினர்களையும், மட்டக்களப்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 14 உறுப்பினர்களையும், யாழில் ஒருவரையும், கிளிநொச்சியில் ஒருவரையும், அனுராதபுரத்தில் 04 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.
ஐக்கிய மக்கள் கூட்டணியாக….
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 32 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்டது.
திருமலை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 18 உறுப்பினர்களையும், கம்பஹா மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு ஒருவரையும், களுத்துறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 02 உறுப்பினர்களையும் கட்சி பெற்றுக்கொண்டது.
களத்தில் இறங்கிய மயில்
குருநாகல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 05 உறுப்பினர்களையும், கண்டி மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 08 உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்று, மிகக் குறுகியகால அரசியல் வரலாற்றில் அபார வெற்றியை ஈட்டியுள்ளது.
வளர்ச்சி
அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி உட்பட இன்னும் சில அரசியல் பிரமுகர்களினால், பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி, இன்று நாடு முழுவதும் வியாபித்து அகலக் கால் விரித்து, பெருவிருட்சமாக வளர்ந்து வருவதையே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும், அக்கட்சி பல சபைகளைத் தன்வசப்படுத்தியமையும் எடுத்துக்காட்டுகின்றது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 08 வருடகால தலைமைப் பதவியில், அவரது நெறிப்படுத்தலிலும், வழிகாட்டலிலும் கட்சி பெருவளர்ச்சி கண்டதை, பாராளுமன்றத் தேர்தலில் 05 எம்.பிக்களை பெற்றுக் கொண்டமையும், உள்ளூராட்சித் தேர்தலில் 07 சபைகளைக் கைப்பற்றியமையும் உணர்த்துகின்றது.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் சிங்களப் பேரினவாதத்துக்கும், தமிழ் பெரும்பான்மைவாதத்துக்கும் இடையில் எதிர்நீச்சல் அடித்து, பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே, இந்தக் கட்சியை வழிநடாத்தி வருகின்றமை கண்கூடாகத் தெரிகின்றது.
தேர்தல் காலங்களில் இடம்பெற்ற கழுத்தறுப்புகள், சதி முயற்சிகள், குத்துவெட்டுக்கள், குழிபறிப்புக்கள் போன்று அதற்கு எந்த விதத்திலும் சற்றும் குறைவில்லாத வகையிலேயே, உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியுதீன் பல்வேறு சவால்களுக்கும், தடைகளுக்கும் முகம்கொடுத்தார்.
பல சபைகளில் மக்கள் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த போதும், தற்போதைய நடைமுறைத் தேர்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால், ஏனைய உதிரிக் கட்சிகள் ஆங்காங்கே சேகரித்த வாக்குகளினால் பெற்ற போனஸ் ஆசனங்களைக் கொண்டு, மக்கள் காங்கிரஸை ஆட்சியமைக்க விடாது, அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாரம்பரியத் தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து பல சதி முயற்சிகளை மேற்கொண்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வீழ்த்துதற்கு மேற்கொண்ட சதி முயற்சிகளை எல்லாம் முறியடித்து, இறைவனின் உதவியுடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாரம்பரியக் கட்சிகளுக்கும், உதிரிகளுக்கும் தகுந்த பாடம்புகட்டி சபைகளைத் தம்வசப்படுத்தினார்.
தவிடுபொடியான சூழ்ச்சிகள்
அந்த வகையில், முசலிப் பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸை ஆட்சியமைக்க விடாது அக்கட்சியை வீழ்த்துவதன் மூலம், அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை கறுவறுக்க முடியுமென மேற்கொண்ட திட்டங்கள் தவிடுபொடியாக்கப்பட்டன.
அத்துடன், தமிழரசுக் கட்சியின் பாரம்பரியக் கோட்டைகளானன மன்னார் பிரதேச சபை, மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை, முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஆகியவற்றை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமையும், சகோதர தமிழர்கள் இருவரை தவிசாளராக்கியமையும், அமைச்சரது கடந்தகால சேவைகளுக்கு கட்டியங்கூறி நிற்கின்றன. அமைச்சரை ஓர் இனவாதியாகச் சித்தரித்தோர் இன்று வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றனர்.
அதேபோன்று, முஸ்லிம் காங்கிரஸின் பாரம்பரியக் கோட்டைகளான நிந்தவூர் பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றைக் கைப்பற்றியமையும், இறக்காமம் பிரதேச சபையின் ஆட்சியில் பங்காளியானமையும் மக்கள் காங்கிரஸை, அம்பாறை மக்கள் அங்கீகரித்து வருவதையே வெளிப்படுத்துகின்றன.