Breaking
Fri. Nov 15th, 2024

-சுஐப் எம்.காசிம்   –

முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை அடிநாதமாகக்கொண்டு பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் “அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்” செயற்பாடுகளுக்கு தாம் உறுதுணை அளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்வி மாநாட்டின் முக்கியஸ்தர்களான அதன் தலைவர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில், செயலாளர் சட்டத்தரணி ரஷீட்எம்.இம்தியாஸ், உபதலைவரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான என்.எம்.அமீன் உட்பட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் காங்கிரசின் செயலாளர் எஸ்.சுபைர்டீனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

முஸ்லிம் கல்வி மாநாடு அண்மைய காலங்களில் கல்வியை மேம்படுத்தும் வகையில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை தூதுக்குழுவினர் விபரித்தனர். கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பத்து தலைப்புக்களில் தாங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய கலாநிதி இஸ்மாயில், இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில், முஸ்லிம் கல்வி மாநாடு மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைச்சரின் காத்திரமான பங்களிப்பை கோரினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பில் தமது கட்சி ஏற்கனவே, பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், தேவைகள், வளப்பற்றாக்குறை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளையும், புள்ளி விபரங்களையும் சேகரித்து உள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் நாம் உதவி வருகின்றோம். அதேபோன்று  முஸ்லிம் கல்வி மாநாட்டின் இந்த நன்முயற்சிக்குத் தாம் முழுமனதுடன் ஒத்துழைப்பு வழங்கி, தேவைப்படின் நிதிஉதவியையும் வழங்குவதாகக்  குறிப்பிட்டார்.

கல்விமான் எம்.எல்.எம்.ஷாபி மரிக்காரினால் உருவாக்கப்பட்டு, அவரினால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் கல்வி முயற்சியில் உயிரோட்டமாக செயற்படுவது, தமக்கு பெருமையளிக்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் கல்வி விடயத்தில் பல்வேறு அமைப்புக்களும், பரோபகாரிகளும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வரை உதவி வருகின்றனர். எனினும், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கல்வி நலன்கருதி, பேதமைகளை மறந்து, ஒருமித்து செயற்படுவதே ஆரோக்கியமானது. சமூக ஆர்வலர்கள் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் உரிய இலக்கை விரைவில் அடையலாம் என அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலமே முஸ்லிம்களின் கல்வி வீழ்ச்சியைத் தட்டிநிமிர்த்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

13694994_618668564965859_1576140028_n 13706249_618670398299009_16302938_n 13706111_618670164965699_1789168070_n

By

Related Post