இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரிவித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல் காதர் பேஸா விசாக்கள் விற்கப்படாது ஏழை பள்ளிவாசல் பணியாளர்கள் போன்றோருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றுக்காலை கொழும்பு நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்வருடம் ஹஜ் கோட்டா ஆகக்கூடியது 50ஆகவும் ஆகக் குறைந்தது 15ஆகவும் ஹஜ் முகவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இது ஓர் சிறந்த முறையாகும். இதனை நான் பாராட்டுகிறேன். அமைச்சர் ஹலீமுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கடந்த வருடங்களில் நான் ஹஜ்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் என்னையும் மீறி தவறுகள் இடம்பெற்றன. இத்தவறுகள் எதிர்காலத்தில் ஹஜ் ஏற்பாடுகளில் நடைபெறக்கூடாது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ முஸ்லிம் விவகார அமைச்சோ ஹஜ் பயணிகளின் பணத்தில் இலவச பயணங்களை அனுமதிக்கக்கூடாது. ஹஜ் பயணிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக டாக்டர்கள் இருவருக்கு மேல் அழைத்துச் செல்லக்கூடாது.
அவர்கள் சம்பளம் பெறாது இலவச சேவை வழங்குவதாக இருக்க வேண்டும். ஹஜ் பயணிகளின் பணத்தை வீணாக செலவழிப்பவர்கள் அல்லாஹ்வின் கோபத்துக்கு உள்ளாவார்கள்.
அக்குறணைத் தொகுதியில் போட்டி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்குறணைத்தொகுதியிலே போட்டியிடத்தீர்மானித்துள்ளேன். கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இருந்து அக்குறணைத் தொகுதிக்கும் கண்டி மாவட்டத்துக்கும் பல சேவைகளை முன்னெடுத்துள்ளேன்.
முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்கள மக்கள் அதிகமானோர் எனக்கு வாக்களித்துள்ளார்கள். வெளிமாவட்ட முஸ்லிம்கள் கண்டி மாவட்டத்துக்கு வந்து போட்டியிடுவதால் கண்டி மக்கள் எதுவித நன்மையும் பெற்றுக்கொள்வதில்லை. எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பு பேருவளை பகுதியிலிருந்து கண்டிக்கு வரும் வேட்பாளர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் யாரால் சேவைகள் நடைபெற்றன என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டி மாவட்டத்தில் பிறந்து அங்கேயே வாழ்பவர்களுக்கே கண்டி மக்கள் மீது அதிகமான பற்றுதல் இருக்கும் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என்றார். m