-ஊடகப்பிரிவு-
அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி கூறப்படும் கதைகள், அப்பட்டமான பொய்யெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று (01) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
அக்கரைப்பற்று மாநகரசபை வேட்புமனு தாக்கல் தொடர்பில் இறுதி நேரம் வரை நாங்கள் பகீரத முயற்சியில் ஈடுபட்ட போதும், இறைவனின் நாட்டம் வேறுவிதமாக இருந்தது, எனினும், எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து, எதிர்வரும் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு பாரிய பொறுப்பும், கடப்பாடும் உண்டு. உங்களுக்குக் கிடைத்த இந்த அமானிதத்தை, நீங்கள் மிகவும் அவனமாக பயன்படுத்த வேண்டும். தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக பொய்களைக் கூறி, வாக்குகளை சேகரிக்க வேண்டும் என எண்ணாதீர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் உண்மையை எடுத்துக்கூறி நேர்மையான பிரசாரங்களை மேற்கொள்ளுங்கள்.
எவரினது மனதையும் புண்படுத்தும் படி நடக்க வேண்டாம். கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, யாரையும் அவாமனப்படுத்த முயற்சிக்காதீர்கள். இறைவனின் நாட்டமின்றி அணுவும் அசையாது என்ற இறை நம்பிக்கை கொண்ட நாம், அதன்படி ஒழுகக் கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளங்களை மாற்றுகின்றவன் இறைவன் மாத்திரமே என்பதை புரிந்துகொண்டு, மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் நமது வழிக்குக் கொண்டுவர இதய சுத்தியோடு முயற்சி செய்யுங்கள்.
ஒருவகையான போதை ஊட்டப்பட்டு, தலைமை, தலைமைத்துவம், தானைத்தலைவர் என்ற போதையில் மிதக்கும் மு.கா போராளிகள் எனக் கூறிக்கொள்பவர்களுக்கு, இங்கிதமாக உங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறுங்கள்.
மக்கள் சேவைக்கென புறப்பட்டிருக்கும் வேட்பாளர்களாகிய நீங்கள், அந்தஸ்து, உயர்வு என பார்த்துக்கொண்டிருக்காமல் பணிவுடன் பிரசாரங்களில் ஈடுபடுங்கள். சமூகத்தின் விடிவுக்காக நாம் ஒருபடி கீழிறங்கிச் செல்வதன் மூலம், நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.