-ஊடகப்பிரிவு-
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் நேற்று 10.02.2018 வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்திருந்த வேட்புமனு, அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே, அக்கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்புமனு பட்டியலின் முதன்மை வேட்பாளர் அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சின்னலெப்பை முகமது ஹனீபா ஆகியோரின் சார்பில் இந்த வழக்கை சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
எதிர் மனுதாரர்களாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடவுள்ள கட்சிகள், சுயேட்சை குழுவின் செயலாளர்கள் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உட்பட்ட 12 வட்டாரங்களில் வாழும் சுமார் 1700 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தமக்கு அடிப்படை உரிமையை அனுபவிக்க சந்தர்ப்பம் தருமாறு கையெழுத்திட்ட ஆவணமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.