மியன்மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமல்ல. இலங்கைக்குள் குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இல்லையென தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெளஹித் ஜமாஅத் அமைப்பிற்கு இலங்கை வர அனுமதி உண்டெனின் விராது தேரர் ஏன் வரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.
மியன்மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்று வினவிய போதே பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மியன்மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரோ அல்லது அவ் அமைப்போ தீவிரவாத அமைப்பல்ல. அதேபோல் 969 என்பது பௌத்த சிந்தனைகளையும் பௌத்த கொள்கைகளையும் அடையாளமாகக் கொண்ட அமைப்பாகும். எனவே இவர்களின் வருகை இலங்கையின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் அல்லது சிறுபான்மை மக்கள் மீதான அச்சத்தினை ஏற்படுத்தக் கூடியதொன்றல்ல. அத்தோடு அஹிம்சை வழியிலேயே அவரின் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான பௌத்த தலைவர்களை இலங்கைக்கு அழைத்திருப்பது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையாது.
மேற்கத்தேய ஊடகங்கள் இதுவரையும் இவ் 969 அமைப்பினையும் தீவிரவாத அமைப்பாக சித்திரிக்கின்றனர். ஆயினும் மேற்குலக ஊடகங்களின் பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்பதையும் இவர்களின் நோக்கம் எது என்பதனையும் நாம் அறிந்துள்ளதே. எனவே இவ்விமர்சனங்களை கருத்திற் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மியன்மாரில் பௌத்த மதத்திற்கு எதிரான வகையில் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் செயற்பட்ட போது அதனை தடுக்கும் வகையில் செயற்பட்ட அமைப்பே தவிர சாதாரண முஸ்லிம்களை இவர்கள் எதிர்க்கவில்லை என்பதே உண்மை.
மேலும், தென் இந்தியாவின் அமைப்பாக செயற்படும் தௌஹித் ஜமா அத் அமைப்பின் பிரதிநிதி கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். அதேபோல் தௌஹித் ஜமா அத் அமைப்பினர் பள்ளி வாசல்களிலும் ஏனைய பகுதிகளிலும் மத பிரசாரங்களை செய்கின்றனர். எனவே, இவை அனைத்து செயற்பாடுகளுக்கும் இலங்கை அரசு இடமளித்திருக்கின்றது. தௌஹித் ஜமா அத் அமைப்பு என்பது பிரிவினைவாத அமைப்பென்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்கள் இலங்கை வரமுடியுமெனின் ஏன் மியன்மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரர் இங்கு வரக்கூடாது. அசின் விராது தேரர் இங்கு வர கூடிய உரிமைகளும் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்