Breaking
Wed. Dec 4th, 2024
அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா  இல்லையா என்பது அரசின் கைகளிலேயே  தங்கியுள்ளது. என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொதுபல சேனா அமைப்பினர் மறைந்த தலைவர் அஷ்ரப் ஆயுதங்கள் கொண்டுவந்ததாக கற்பனைக்குள் அடங்காத பொய்களைக் கூறியதை வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் வை.எல்.எஸ். ஹமீட் மேலும் குறிப்பிடும்போது;
‘அஷ்ரப் இரகசியமாகக் கொண்டுவந்த இரண்டு கொள்கலன் ஆயுதங்கள் எங்கே?’ என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பாணந்துறையில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார். 21ம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாளரான குறித்த தேரருக்கு அக்கொள்கலன்கள் எங்கே இருக்கின்றது என்பதையும் சேர்த்து ஏன் கற்பனை செய்ய முடியவில்லை என்று கேட்க விரும்புகின்றோம்.
சிலவேளை  குறித்த தேரரே அவற்றை மறைத்து வைத்துவிட்டு முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில்இ தலைவர் மரணித்து இந்த 12 ஆண்டுகளில் புலனாய்வு பிரிவினருக்கோ பொலிசாருக்கோ படையினருக்கோ அல்லது சுங்க அதிகாரிகளுக்கோ அல்லது இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்குமோ தெரியாமல் குறித்த தேரருக்கு மட்டும் தெரியத்தக்கதாக அந்த கொள்கலன்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த 12 ஆண்டுகள் குறித்த தேரர் இக்கொள்கலன்கள் தொடர்பாக  ஏன் மௌனியாக இருந்தார் என்று  கூற வேண்டும். கொள்கலன்கள் வந்ததை அறிந்தவர் அவை  இருக்கின்ற இடத்தினை மாத்திரம் எவ்வாறு அறியாமல் விட்டார். என்று கூறுவாரா?
பொதுபல சேனா இந்த நாட்டின் புலனாய்வுத் துறையின் திறமையை விட அல்லது இந்தியாவின் புலனாய்வுத் துறையின் புலமையை விட திறமை வாய்ந்த ஒரு புலனாய்வுத்துறையை வைத்திருக்கின்றது போலும். அதனால்தான் தமிழ் நாட்டில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டபொழுது கைது செய்யப்பட்டவர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையில் முஸ்லிம் அமைப்புக்கள்தான் அத்தாக்குதலுக்கு காரணம் என்று கூறினார். சர்வதேச பின்னணியில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தோற்றுவித்து நாட்டிற்கு எதிராக ஜெனீவா தீர்மானத்தில் முஸ்லிம் நாடுகளை வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு அதில் தோல்வி கண்ட நிலையில் எதிர்காலத்திலாவது முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக திருப்ப வேண்டும் என்பதற்காக ஸியோனிச சக்திகள் வரைந்து கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் கற்பனைக் கற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் சுமத்திக் கொண்டு செல்கின்றார்.
30 வருட கால யுத்தத்தில் 26 முஸ்லிம்களே கொல்லப்பட்டிருப்பதாக ஒரு கட்டத்தில் இந்த தேரர் கூறினார். அவ்வாறெனில் காரைதீவில் வைத்து கொல்லப்பட்ட நுாற்றுக்கணக்கான முஸ்லிம் பொலிஸார், காத்தான்குடி பள்ளிவாயலில் கொல்லப்பட்ட நுாற்றுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் இன்னும் கொல்லப்பட்ட எத்தனையோ முஸ்லிம்களின் கணக்குகள் அவருக்குத் தெரியவில்லை. இராணுவத்தில் இணைந்து முஸ்லிம்கள் போராடவில்லை என்றும் கூறியிருக்கிறார். பிரிகேடியர் ஸக்கி, புலிகளுடன் சண்டையில் கொல்லப்பட்ட கேணல் முத்தலிப், கெப்டன் முனாஸ் போன்று இராணுவத்தில் போராடிய எத்தனையோ முஸ்லிம் வீரர்கள் தொடர்பாக அவருக்குத் தெரியவில்லை.
ஏனெனில் உண்மைகள் அவருக்குத் தெரியாது. மதகுரு என்று கூறிக்கொண்டு பொய்யையும் கற்பனைகளையும்  முதலீடாக வைத்து அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக செயற்படுபவர்களுக்கு உண்மை எவ்வாறு புரியும்.
துாங்குகின்றவர்களை எழுப்பலாம். பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. குறித்த தேரர் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக ஒரு காலகட்டத்தில் பேசினார். அதன்பின்னர் அவரது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி சமாதானத்திற்கு ஆதரவாக பேசவைக்கப்பட்டார். எந்த நாடு அவரை அவ்வாறு மாற்றியது என்று ஆசாத் சாலி பகிரங்கமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். ஆனால் இன்றுவரை அதனை குறித்த தேரர் மறுக்கவில்லை. அதேபோன்று இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யை மூலதனமாக்கி காழ்ப்புனர்வை கக்கிக்கொண்டு செல்கின்றார். இதன் பின்னால் இருக்கின்ற சக்தி எது என்ற உண்மை விரைவில் வெளிவரத்தான் போகின்றது. உண்மைகள் தற்காலிகமாக உறங்கலாம். ஆனால் நிரந்தரமாக உறங்கிய வரலாறு இல்லை.
பௌத்த துறவி என்று தன்னை அடையாளம் காட்டுகின்ற குறித்த தேரர் பௌத்தத்தில் எந்த இடத்தில் அடுத்த சமயத்தவர் மீது வெறுப்பையும்இ காழ்ப்புனர்வையும் கக்கச்சொல்லி இருக்கின்றது என்று  கூறுவாரா? கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் உண்மையான பௌத்தர்கள் எப்படி இருப்பார்கள் போலிகள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை விபரித்து சமூகங்கள் மத்தியில் இவ்வாறு  பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும் ஒரு சிங்கள் பௌத்தர் எழுதியிருந்தார். அவ்வாறு எத்தனையோ நடுநிலையாக சிந்திக்கின்ற பௌத்த சகோதரர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றை இவர்கள் பார்க்கவில்லையா ?
இவர்கள் செயற்படுத்திக்கொண்டு இருக்கின்ற திட்டம் ஒரு பலமான சக்தியினால் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. என்பது தெளிவாகப் புரிகின்றது. ஏனெனில் தங்களது செயல்கள் எவ்வாறான தாக்கத்தை கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ அதற்கு ஏற்ற விதத்தில் முன் கூட்டியே குற்றச்சாட்டுக்களை சுமத்தி விடுகின்றார்கள். உதாரணமாக தங்களுடைய செயற்பாடுகளை  சகல பௌத்த பிக்குகளும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கு எதிராக பேசுவார்கள். என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை அவர்கள் சாட ஆரம்பித்தபொழுதே பௌத்த பிக்குகளை பிரிக்கின்றார்கள். என்ற ஒரு குற்றச்சாட்டையும் சுமத்திவிட்டார்கள். அதன் பின் சில பௌத்த பிக்குகள் இவற்றுக்கு எதிராகப் பேசியபொழுது ‘பௌத்த பிக்குகளை பிரித்தே விட்டார்கள்’ என்று கூறினார்.
அடுத்தவர்கள் தம்மை அநியாயக்காரர்கள் என்று கூறுவார்கள் என்பது இந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியும். எனவேதான் முன் கூட்டியே அதற்கு ஏற்றாற்போல் கூற்றுக்களை தெரிவித்து விடுகிறார்கள்.
அதேபோன்றுதான் 12 ஆயிரம் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானில் பயிற்சிபெற்று  வந்திருக்கின்றார்கள். என்று ஒரு கட்டுக்கதையை சிறிதும் கூட தயக்கமில்லாமல் சொன்னார்கள். ஏனெனில் தங்களுடைய செயற்பாடுகள் முஸ்லிம் இளைஞர்களை விரக்தியின் விழிம்பிற்குத்தள்ளும். அவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் தீவிரவாதம் தலைதுாக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் இதை நாம் முன்பே கூறினோம். என்று சொல்வதற்காக அந்த கற்பனைக்கதையைக் கட்டி விட்டார்கள்.
பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம். அதேபோல்தான் நாட்டின் உளவுப்பிரிவினருக்கத் தெரியாமல் 12 ஆயிரம் பேர் பயிற்சிபெற்று வந்ததை  குறித்த  தேரர் மாத்திரம் அறிந்திருக்கின்றார். அவ்வாறாயின் அத்தேரர் அவ்வாறு பயிற்சி பெற்றவர்களின் பெயர்களை ஏன்  இன்றுவரை பொலிசாருக்கு வழங்கவில்லை. அல்லது பகிரங்கப்படுத்தவில்லை என்று கூறுவாரா ?
இவ்வாறானவர்கள் தேச விரோத சக்திகள் என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டில் சமூகங்களுக்கிடையில் பொய்யையும் கற்பனைகளையும் கூறி  கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய முற்படுகின்றார்கள்.
நாம் இவர்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வெறுப்பு திடீரென ஏன், எங்கிருந்து, எவ்வாறு வந்தது ? குர்ஆனை வைத்து முஸ்லிம்களை தோற்கடித்ததாக மார் தட்டியிருக்கிறீர்கள். பௌத்தத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாத நீங்கள் பௌத்தம் அன்பையும் பொறுமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க அதற்கு எதிராகச் செயற்படுகின்ற நீங்கள் அடுத்த சமயத்தவர்களின் நுால்களையா புரிந்துகொள்ளப்போகின்றீர்கள்.
தோல்வியே தழுவமாட்டோம். இதுவரை அடைந்ததெல்லாம் வெற்றி. இனிமேல் அடையப்போவதும் வெற்றி என்று இறுமாப்பு எய்துகிறீர்கள். இவ்வாறு முரசொலி கொட்டியவர்கள் வரலாற்றில் நிறையப்பேர் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசுகின்றார்கள். வெற்றியும் தோல்வியும் இறைவனிடத்தில் இருந்தே வருகின்றன என்று நம்புகின்றவர்கள் நாங்கள்.
 முஸ்லிம்களும் சர்வதேச ரீதியாக இந்த நாட்டிற்கும் அரசுக்கும் எதிராக இராஜ தந்திரப்போரை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் சில சர்வதேச சக்திகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாட்டை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சியை வலுப்படுத்த வேண்டும். என்பது தான் உங்கள் திட்டமும் உங்களது சர்வதேச எஜமானர்களின் கட்டளையும் என்றால் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை அரசுதான் எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரசு பாராமுகமாக இருந்தால் முஸ்லிம்களாலும் ஒரு சர்வதேச ரீதியான சாத்வீக பேராட்டத்தை முன்னெடுக்க முடியும். என்பதை நாம் நிரூபிக்க வேண்டிவரும். 120 கோடி முஸ்லிம்கள் வாழுகின்ற இந்த உலகில் நாம் தனித்தவர்களல்ல என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜெனீவா தொடரில் நாம் விரும்பியிருந்தால் நம்மாலும் தாக்கத்தை செலுத்தியிருக்க முடியும். ஆயினும் முஸ்லிம்கள் தாய்நாட்டை நேசிப்பவர்கள் என்ற அடிப்படையில் நாம் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டோம். எனவே அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இந்நாட்டின் முஸ்லிம்களும் நிம்மதியாக அமைதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆகவே அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா இல்லையா என்பது அரசின் கைகளிலேயே  தங்கியுள்ளது. என்றுமுள்ளது.

Related Post