எமது வாக்குகள் மிகப் பெறுமதியானவை. எமது வாக்குகளை நாம் சரியான முறையில் பயன்படுத்த தவறினால், மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடும். இத்தனை நாளும் எப்படி வாக்களித்தோம் என்பது பற்றி சிந்தித்து பயனில்லை. இனி யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பது சிந்தித்தேயாக வேண்டும். எமது சமூகம் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் உள்ளது.
அட்டாளைச்சேனையில் மு.காவில் நஸீரும், தே.காவில் பழீல் பீ.ஏயும், அ.இ.ம.காவின் சட்டக் கலாநிதி கபூரும் போட்டியிடுகிறார்கள். நான் அட்டாளைச்சேனை வேட்பாளர்களை இங்கே விழித்துள்ள முறையே, அவர்களது ஆற்றலை அறிந்துகொள்ள போதுமானதாகும். இம் மூவரில் சட்டக் கலாநிதி கபூரின் ஆற்றல் சமூகத்திற்கு அவசியமானது. அவரது அறிவை எமது சமூகம் பயன்படுத்த வேண்டும். இதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது.
இவர் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து கொண்டு, எமது சமூகம் எதிர்கொண்ட சட்ட ரீதியான பிரச்சினைகள் பலவற்றிற்கு தனது பங்களிப்பை நல்கியவர். இவர் பாராளுமன்றத்தினுள் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். இவரைப் போன்றவர்கள் பாராளுமன்றம் செல்கின்ற போது, பாராளுமன்றமே இவர்களால் அலங்கரிப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எமது சமூகம் அரசியலமைப்பு மாற்றம் போன்ற சட்ட ரீதியான விடயங்கள் பலவற்றை அமையவுள்ள பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள நேரிடும். இதற்கு இவ்விடயத்தில் தேர்ச்சியுள்ள சட்டக் கலாநிதியான கபூர் போன்றவர்கள் சமூகம் சார்பாக இருக்க வேண்டும். நான் சொல்கின்ற இந்த விடயத்தை நன்கு சிந்தித்து பாருங்கள். நீங்களே சரி என ஏற்றுக்கொள்வீர்கள். இவரைப் போன்றவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள். இவர் பாராளுமன்றம் சென்றால், அது எமக்கு வரமாக அமையும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இவரை எதிர்த்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தகுதி என்ன. இவரிடம் ஏதாவது ஆலோசனை கேட்டு செல்கின்ற போது, இவரால் எமக்கு அவரிடமுள்ள கல்வியறிவைக் கொண்டு நேரிய வழிகாட்டலை வழங்க முடியும். ஏனையவர்களிடம் அப்படி வழங்க முடியுமா? ஏனையவர்கள் வழங்கக் கூடிய வழிகாட்டல் எதுவாக இருக்கும். அவர்களோடு எமது பிள்ளைகளை சென்றால், ஒழுக்க சீலர்களாக வருவார்களா? வருவதைத்தான் எதிர்பார்க்க முடியுமா?
தற்போது அம்பாறை மாவட்டத்தில் போதை பொருள் பாவனை மிக அதிகமாக உள்ளது. அதன் பின்னால் இத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர் ஒருவருக்கும் பெரும் பங்குள்ளதாக கூறப்படுகிறது. நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை உங்கள் மனச்சாட்சியை கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். அண்மையில் அட்டாளைச்சேனையில் போதைப் பொருள் பாவனையால் ஒரு இளம் சகோதரன் மரணமடைந்துமிருந்தான். இன்னும் இப் போதைப் பொருள் பாவனையால் எத்தனையோ இழி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இவற்றை நான் இங்கு சுட்டிக்காட்டியே நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந் நிலை தொடர வேண்டுமா..? எம் சந்ததிக்கு ஒழுக்கமான பிரதிநிதியை அடையாளம் காட்டுவது எமக்கு கடமையல்லவா? நாம் செய்யும் பிழையால் எமது சந்ததிகள் உருத்தெரியாது அழிக்கப்பட்டுவிடுவார்கள்.
ஒரு ஒழுக்கமான தந்தை, தனது பிள்ளையை போதைப் பொருள் பாவனையாளர்களின் பின்னால் நிச்சயம் எதற்காகவும் அனுப்ப மாட்டான். கலிமா சொன்ன முஸ்லிம் சமூகத்தை ஊர் பற்றுக்காக, கட்சி பற்றுக்காக வாக்களித்து, போதைப் பொருள் முகவர்களின் கையில் ஒப்படைப்பது எவ்வளவு ஆபத்தானது. அது அம்பாறை மாவட்ட முழு சமூகத்துக்கும் சாபமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
சட்ட கலாநிதி கபூரிடம் மக்கள் தொடர்பு குறைவாக உள்ளதான குற்றச்சாட்டு உள்ளதை அவதானிக்க முடிகிறது. அது தவிர்ந்து எக் குற்றச் சாட்டுமில்லை. அவர் நீதிபதியாக இருந்தவர். அதனால் மக்கள் தொடர்பு குறைவாக காணப்பட வாய்ப்புள்ளது. அவர் எம்மிடம் வர வேண்டும் என எதிர்பார்க்காது, நாம் எவ்வித தயக்கமுமின்றி அவரை நாடிச் செல்லத் தகுதியானவர்.
இம் முறை அட்டாளைச்சேனை மக்களது வாக்கு வரமாக அமையுமா, சாபமாக அமையுமா என்பதை எதிர்வரும் தேர்தலில் அறிந்துகொள்ளலாம். அட்டாளைச்சேனை மக்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது. எம் சந்ததிக்கு ஒழுக்கமான, தகுதியான பிரதிநிதிகளை பெற்றுக்கொடுப்போம்.
துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்.