Breaking
Sun. Jan 12th, 2025

அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வடகொரியா நாட்டு ஆளுங்கட்சியின் செயற்குழு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்து கொண்டுள்ளன.

இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

தற்போது, வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் 36 ஆண்டுகளில் முதல் முறையாக ஆளும் தொழிலாளர் கட்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், சமீபத்தில் நடத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெகுவாக பாராட்டினார்.

இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து 5-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகி வருவதாக செயற்கைக்கோள் படம் ஒன்றை மேற்கோள்காட்டி அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வு கல்லூரியின் ‘தி 38 நார்த் வெப்சைட்’, வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவில் அணுகுண்டு சோதனை நடத்துகிற இடத்தில் அத்தகைய சோதனை நடக்கிறபோது மட்டுமே காணப்படுகிற வாகன போக்குவரத்து நடைபெறுவதை காட்டும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.

இது அடிக்கடி காண முடியாத காட்சி. தற்போது நடைபெற்று வருகிற ஆளுங்கட்சி மாநாட்டின் இடையேகூட அணுகுண்டு சோதனை நடைபெறலாம். மே 5-ந் தேதி எடுக்கப்பட்டுள்ள புங்க்யேரி சோதனை தளத்தின் படங்கள், வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தப்போவதை காட்டுகிறது” என கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எங்கள் நாட்டு இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறினார்.

ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அந்நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், ‘அணு ஆயுதங்களை கைவசம் வைத்துள்ள, பொறுப்புகள் மிகுந்த நாடு என்ற வகையில், எங்கள் நாட்டின்மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தி மூர்க்கத்தனமாக பிறநாடுகள் தாக்குதல் நடத்த வந்தால், அதன்மூலம் எங்கள் நாட்டு இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தாலன்றி, நாங்களாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்’ என குறிப்பிட்டார்.

மேலும், அணு ஆயுத குறைப்பு தொடர்பான சர்வதேச நிர்பந்தங்கள் விவகாரம் தொடர்பாக நேர்மையான வகையில் ஒத்துழைப்பு வழங்கவும் உலகளாவிய அளவில் அணு ஆயுத பரவலை அமல்படுத்தவும் வட கொரியா தயாராக இருப்பதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

மாநாட்டின் மூன்றாம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீர்படுத்தும் அதேவேளையில், தற்காப்புக்காக தரத்திலும், எண்ணிக்கையிலும் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் அதிகாரத்தை அதிபர் கிம் ஜான் உன்-னுக்கு அளிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானத்தை ஆளும்கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான செயற்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

ஆனால், வடகொரியாவின்மீது தாக்குதல் நடத்துவது என்று தென்கொரியா தீர்மானித்தால் அணு ஆயுதங்களை கொண்டு ஈவிரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தி, அந்நாட்டை தரைமட்டமாக்குவோம் எனவும் அந்த தீர்மானம் எச்சரித்துள்ளது.

By

Related Post