-அமைச்சரின் ஊடகப்பிரிவு –
தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதித் தவிசாளர் அண்ணன் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், தனக்கு அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
அண்ணன் அன்டனி ஜெகநாதன் 1972 ஆம் ஆண்டளவில் ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டார். அதன் பின்னர் அதிபராகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி, மாணவர்களின் கல்விக்கு உத்வேகம் அளித்தவராவார்.
சமூக சேவையாளரான அவர், முல்லைத்தீவு மாவட்ட மக்கள், யுத்தத்தின் பாதிப்புக்களுக்கு உள்ளான போது, அந்த மக்களுக்கு அயராது பணியாற்றியவர். கடந்த மாகாணசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு, வெற்றிபெற்று பிரதி அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு கிடைக்கப்பெற்ற இந்தப் பதவியை அவர் மிகவும் நேரிய முறையில், நடுநிலை நின்று மேற்கொண்டார்.
தமிழ் – முஸ்லிம் உறவை என்றுமே விரும்பிய அவர், முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்தார். 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் அந்தப் பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு, நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.
கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகங்களில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்து, அவர் சபையை வழிநடத்திய விதமும், அவரது ஆழமான கருத்துக்களும் இன்றும் என் மனதிலிருந்து நீங்கவில்லை.
“முஸ்லிம்களை முல்லைத்தீவில் குடியேற்ற ஒத்துழைப்பைத் தாருங்கள். அவர்களுக்கு உதவுங்கள்” என அந்த மக்களின் பிரதிநிதிகளும், அமைப்புக்களும் கூட்டத்தில் குரலெழுப்பிய போது, அந்தக் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, அவர்களுக்காகப் பரிந்து பேசியதை நான் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு, ஹிஜ்ரா நகரில் இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் கௌரவ அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு, அவர் உரையாற்றிய விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது ஒவ்வொரு வார்த்தைகளிலும் காணப்பட்ட ஆழமான கருத்துக்களை, நான் இந்த சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். விழா முடிவின் பின்னர் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, எனக்கருகே அமர்ந்துகொண்டு உணவருந்திய வேளை என்னுடன் அவர் உரையாடிய பாங்கை, என்னால் மறக்க முடியாதுள்ளது. இவ்வளவு சொற்பநாட்களில் அவர் அகால மரணமாகிவிட்டமை எனக்கு தாங்க முடியாத வேதனையைத் தருகின்றது.
காலஞ்சென்ற அண்ணன் ஜெகநாதன் பண்புள்ளம் படைத்தவர். இனிய சுபாவம் கொண்டவர். முல்லைத்தீவு மக்களின் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர் அரசியல் பேதங்களுக்கு அப்பால் உழைத்தவர் என்பதை நான் நன்கறிவேன். என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய ஒரு பண்பாளர். எப்போது என்னைக் கண்டாலும் சிரித்த முகத்துடன் சுகம் விசாரிப்பார்.
வாழ்க்கையில் அவர் பல்வேறு வலிகளைச் சுமந்து வாழ்ந்த போதும், மக்கள் பணிக்கு முன்னுரிமை வழங்கியவர். அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு, நான் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.