எம்.ஏ.றமீஸ்
யுத்தத்தின் பின்னர் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக இன மத வாதங்களைத் தூண்டி மீண்டும் ஒரு யுத்தத்தைத் தோற்றுவிக்க மஹிந்த ராஜபக்ஷ முற்படுகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தின்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் வாழும் அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்க மைத்திரிபால சிறிசேன ஜாதிக ஹெல உறுமய சரத் பொன்சேகா போன்ற சக்திகள் கைகோர்த்துள்ளன. யாருக்கும் யாராலும் இனிமேல் பலவந்தம் ஏற்படுத்த முடியாது. பள்ளிவாசல்கள், கோயில்கள், பன்சலைகள் போன்றவற்றை யார் தாக்கினாலும் அவர்களுக்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். எம்மதத்தையேனும் யாராவது தாக்கிப் பேசினாலும் அவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் இந்நாட்டில் இனிமேல் இனவாதம் தலைதூக்க இடமில்லை. நாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும் விரும்பிய மொழியைப் பேசவும் விரும்பிய கலாசாரங்களைப் பின்பற்றவும் மக்களுக்கு உரிமை உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்துவரும் அட்டூழியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பக்கம் இருந்த பலர் எம்பக்கம் இணைந்துள்ளனர். மல்வத்த மகா நாயக்க தேரர் இந்நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று படுத்தி வழிப்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷவை வேண்டியும் அதனை அவர் கணக்கிலெடுக்காமல் செயற்பட்டு வருகின்றார். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு எதிர்வரும் எட்டாந்திகதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.