Breaking
Mon. Dec 23rd, 2024

பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் சென்று தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இணைந்து மாவட்ட மட்டத்தில் “அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” ஒன்றினை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவ்வகையில், “அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையின் ஆரம்ப நிகழ்வு பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை வார இறுதி நாள் உட்பட வாரத்தில் தெரிவு செய்யப்பட்ட வாரநாட்களில் பிரதேச செயலாக மட்டத்தில் இடம்பெறவுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் வாழும் மக்கள் மத்தியில் காணி பிரச்சினைகள் வியாபித்து இருப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளதால், இந்நடமாடும் சேவையின் மூலம் காணி அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்கள் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் ஊடாக மக்களுக்கு தமது காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்கு அவகாசம் கிடைக்கின்றது. அதே போன்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் போன்ற திணைக்களங்கள் உட்பட அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை ஒரு தினத்தில் இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

பொலன்னறுவை மாவட்டத்தில் பொதுமக்கள் முகங்கொடுக்கும் யானை, மனித மோதல்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன விலங்கு அமைச்சு மற்றும் அவற்றுடன் தொடர்பான வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளை சந்தித்து தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு இந்நடமாடும் சேவையினால் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்காக தொழில் வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சி நெறிகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்காக திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், தொழில் கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறவுள்ள இந்நடமாடும் சேவை ஜுலை மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மெதிரிகிரிய பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அத்துடன் ஜுலை மாதம் 07 ஆம் திகதி எலஹெர பிரதேச செயலக வளாகத்திலும், ஜுலை 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களிலும் ஹிங்குரங்கொட பிரதேச செயலக வளாகத்திலும் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. வெலிகந்தை மக்களுக்கு இச்சேவையினை ஜுலை மாதம் 12 ஆம் திகதி வெலிகந்தை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறும் நடமாடும் சேவையினூடாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், திபுலாகல பிரதேச செயலக வாழ் மக்களுக்காக ஜுலை மாதம் 16 ஆம் திகதி அரலங்வில விலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதோடு, ஜுலை 17 ஆம் திகதி லங்காபுர பிரதேச செயலக வளாகத்திலும், ஜுலை மாதம் 22 மற்றும் 23 எனும் இரு தினங்களில் தமன்கடுவ பிரதேச செயலக காரியாலயத்திலும் நடைபெறுவுள்ளது.

பொலன்னறுவை மாவட்டம் முழுவதுமாக நடைபெறும் இந்நடமாடும் சேவையின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்குபற்றலுடன் ஜுலை மாதம் 30 ஆம் திகதி பொலன்னறுவை றோயல் கல்லூரி வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

By

Related Post