Breaking
Mon. Dec 23rd, 2024
Myanmar democracy leader Aung San Suu Kyi meets with Secretary of State Hillary Clinton at the State Department on Tuesday, Sept. 18, 2012 in Washington. (AP Photo/ Evan Vucci)

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும்கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.

பல்வேறு காரணங்களால் முழுமையான தேர்தல் முடிவு அறிவிப்பதில் கடந்த நான்கு நாட்களாக தாமதம் ஏற்பட்டது. ஆங் சான் சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும் பாலான இடங்களில் வெற்றி பெற்றது.

முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 348 தொகுதிகளில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் இன்று முறைப்படி அறிவித்துள்ளது. அந்த கட்சி வெற்றிபெற்ற இடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற கீழ்சபையில் 21 இடங்களை தேர்தல் கமிஷன் இக்கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

எனவே, முழு மெஜாரிட்டியுடன் ஆங் சான் சூகி-யின் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி அதிபராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மியான்மரில் வெளிநாட்டவரை மணந்தவர்கள் அதிபர் பதவி வகிக்க முடியாது என்ற ராணுவ ஆட்சியின்போது தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் ஆங்கிலேயரான மைக்கேல் ஆரிசை மணந்த ஆங் சான் சூகியால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்ட போது, ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் அரசின் முடிவுகளை தானே எடுக்க இருப்பதாகவும், அதிபருக்கும் மேலான தலைமை பொறுப்பை வகிக்க இருப்பதாகவும் ஆங் சான் சூகி சமீபத்தில் தெரிவித்திருந்தது, நினைவிருக்கலாம்.

By

Related Post