சுஐப் எம் காசிம்
அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும்.
-அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
“ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
அமைச்சர் றிஷாத் பதியூதீன் இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார்.
அண்மைக்காலங்களாக நுகர்வுப் பொருட்களின் விலைகள் தொடர்பாக சில விடயங்கள் தலைதூக்கியுள்ளன. மாவட்டத்திற்கு மாவட்டம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேறுபட்டிருந்தன. போக்குவரத்துச் செலவும் பொருட்களின் விநியோகத்தில் பல தரப்பினரும் ஈடுபாடு காட்டியதால் பொருட்களின் விநியோக சங்கிலியில் இவ்வாறான வித்தியாசங்கள் ஏற்பட்டு இந்த நிலை உருவானது. தற்போது அண்மையில் நடந்த வெற் பெறுமதி சேர்க்கையின் அதிகரிப்பும் இந்த விலையேற்றத்திற்கு காரணமென நோக்கப்பட்டது. ஆகவே இதனை கருத்திற்கொண்டு சாதகமான முறையில் இவற்றை பரிசீலனை செய்து வாழ்க்கைச் சுமையை கட்டுப்படுத்தி சீராக்கும் வகையிலும் தரமான பொருட்களை நியாயமான குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு செல்வதற்கான நடவடிக்கை கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சில பண்டங்களுக்கு பெறுமதி சேர்க்கை நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை அத்தியவாசிய உணவுப் பொருட்களுக்கு வெற் பிரயோகிக்கப்படமாட்டாது என்பதை நான் இச்சபையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அதாவது வெள்ளைப் பச்சையரிசி, சீனி, பருப்பு வகைகள் பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சின்ன வெங்காயம் , பால் உணவுப்பொருட்கள்,கோதுமை மா
செத்தல் மிளகாய் பாசிப்பயறு ,தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் வகைகள் நெத்தலிமீன் கோழி இறைச்சி, மருந்து வகைப் பொருட்கள் விசேடமாக சதோச நிலையத்தில் விற்கப்படும் மேற்குறிப்பிட்பட்ட பொருட்களுக்கு வெற் அறவிடப்படமாட்டாது. குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களுக்கும் வெற் அமுல்படுத்தப்படமாட்டாது.
ஆனால் தரமான தாயிலாந்து நெத்தலி சதோச நிலையத்தில் ஒரு கிலோ 530 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இந்த நெத்தலி கருவாடானது பொதுச்சந்தையில் 700 ரூபா தொடக்கம் 850 ரூபா வரை வித்தியாசப்படுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் இதன் விலை 900 ரூபா வரை அதிகரித்து செல்கின்றது. இதற்கான காரணம் பல தரப்பு வியாபாரிகளின் தலையீடாகும்.
ஆனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் வரி பிரயோகிக்கபடமாட்டாது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் அழுத்தமாக வலியூறுத்தி கூறுகின்றேன். ஆகவே நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விலைச் சூத்திரத்தை மீண்டும் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு மாவட்டம் தோறும் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் திடீர் சோதனையில் ஈடுபடுத்துதப்படுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே எனது அமைச்சு அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் தொடர்பில் மீண்டும் வர்த்தமானியில் அறிவித்தல் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பொதுமக்களுக்கு இலத்திரனியல் அச்சு ஊடகங்கள் வாயிலாக உச்ச விலைகள் அறியத்தரப்படும்.
அதுமாத்திரமன்றி தீடீர் சோதனை பொறிமுறை மூலம் வர்த்தக சந்தை பலப்படுத்தப்படும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் கூடி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பாக முடிவெடுப்பதோடு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பாகவும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பர். இதற்கிணங்க இதன்பிறகு வாரத்திற்கு இரண்டு தடவை இந்த பொருட்களின் விலைகள் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படும்.
இந்த உச்ச அளவிலான சில்லறை விலை சந்தையில் பேணப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். பாவனையாளர்களின் வசதி கருதி மாவட்டங்கள் தோறும் முறைப்பாட்டு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி பாவனையாளர்கள் “1977” இலக்கங்களின் மூலம் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.
வரவு செலவு திட்ட உரையில் அறிவிக்கப்பட்டவாறும். அமைச்சரவையின் தீர்மானத்திற்கிணங்கவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் கீழான விசேட வாழ்க்கைச் செலவு குழுவின் கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது
சீனி பருப்பு வகைகள் பெரிய வெங்காயம் நெத்தலி செத்தல் மிளகாய் உருளைக்கிழங்கு டின் மீன்கள் பால்மா ஆகிய அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தேவைப்பட்டால் உடனடியாக மானியங்கள் வழங்கவும் அரசாங்கம் தீர்மாணித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் மேலதிக பட்டதாரிகள் நுறு பேரை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் விலை கட்டுப்பாட்டு பொறிமுறையை மாவட்டங்கள் தோறும்கண்காணிப்பது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் அதனை உறுதிப்படுத்துவர்
அத்துடன் சதோச நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிகரிப்பது தொடர்பிலும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பொருட்களின் விலைக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முடியும் .
தற்போது 319 சதோச நிலையங்கள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இயங்கி வருகின்றது.
இந்த வருட இறுதிக்குள் சதோச நிறுவனங்களை 500 ஆக அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றௌம். இதன் மூலம் அத்தியாவசியப் பண்டங்களின் தொடரான விநியோகத்தை ஒவ்வொரு கிராமப் புறங்களிலும் உறுதிப்படுத்த முடியுமென நம்புகின்றோம்.
அத்துடன் வாழ்க்கைச் செலவுக்குழு பிரதி செவ்வாய்க்கிழமையும் வாராந்த அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான இந்த அரசாங்கம் மக்களின் நன்மை கருதி மேற்சொன்ன முடிவுகளை எடுத்துள்ளதென்று அமைச்சர் றிஷாத் பதியூதீன் மேலும் தெரிவித்தார்.