கெட்ட குணமுள்ள, ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக்கூட உறங்கமாட்டேன் என அன்று அநகரிக தர்மபால தெரிவித்தார். ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளே இவ்வாறான கருத்தை வெளியிடும் நிலைமையை ஏற்படுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று சில அடிப்படைவாத தேசப்பற்றாளர்கள் அநகாரிக தர்மபாலவை இனவாதியாக சித்தரிக்க முயல்கின்றனர். இதனை எதிர்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,
சிங்களவர்கள் தமது இனத்தை கட்டியெழுப்பிக்கொண்டு எவ்வாறு முன்னோக்கிப் பயணிப்பது என்பதை அநகாரிக தர்மபால தெளிவுபடுத்தினார்.
பௌத்த சிந்தனைக்குள் தேசியத்தை மதித்து ஒருபக்கம் தேசிய தொழிற்றுறையை தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவதோடு மறுபுறம் சர்வதேசத்தை வெற்றிகொள்வதற்கும் தேசிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாட்டில் அனைத்து பிள்ளைகளும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெறுவதைப் போன்று ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் தேர்ச்சி பெறவேண்டுமென்றார்.
ஆனால் அன்றைய காலகட்டத்தின் சில அடிப்படைவாதிகள் அவரை சிங்கள இனத்துக்காக குரல் கொடுத்த வீரர் என வெளிப்படுத்த முயற்சித்தனர்.
இதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இன்று சில தேசப்பற்றாளர்கள் அடிப்படைவாதிகள் பிழையான அர்த்தத்தை கற்பிக்கின்றனர்.
அநகாரிக தர்மபால இனவாதியல்ல. நாட்டை, தேசியத்தை, மக்களை நேசித்தவர். அனைவரும் ஒற்றுமையாக நாட்டை எப்படி முன்னேற்றுவது என்ற சிந்தனை கொண்டவர்.
ஆனால் அவரது தேசிய சிந்தனைகளை நிறைவேற்ற அவரால் முடியாது போனது. அதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. எனவே மனம் நொந்து போன அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தியாவுக்கு சென்றார்.
அப்போது இவ்வாறானதொரு
கருத்தை வெளியிட்டார்.
கெட்ட குணமுள்ள ஒழுக்கமற்ற சிங்கள
மக்கள் வாழும் பக்கமாக தலை வைத்துக் கூட உறங்கமாட்டேன் எனக் கூறினார்.
இதற்குக் காரணம் அவர் எதிர் பார்த்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தான் மனம் நொந்து இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்றும் ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.