எந்தவிதமான காரணங்களுமின்றி முறைகேடான வகையில், தாங்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையிட்டனர்.
அம்பாறை கச்சேரியில் இன்று காலை (01/09/2016) அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த அவர்கள், இந்த திடீர் இடமாற்றத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், மனக்குறைகளையும் எடுத்துரைத்தனர்.
முஸ்லிம் கட்சி ஒன்று, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, இந்த தான்தோன்றித்தனமான இடமாற்றத்தை வழங்கியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.
“எங்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு எந்தவிதமான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. தாபனக்கோவையின் விதிமுறைக்கு மாற்றமாக வருட இறுதியில் இவ்வாறான, எழுந்தமானமான ஓர் இடமாற்றத்தை வழங்கி எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
இடமாற்றம் பெற்றவர்களில் அநேகர் வயது முதிர்ந்தவர்கள். அத்துடன் சிலர் இருதய நோயாளிகள். நாங்கள் ஏற்கனவே பொத்துவில் பிரதேசத்தில் பலவருட காலாமாக பணி புரிந்தவர்கள். எனவே இடமாற்றத்தில் பல்வேறு அரசியல் பின்னணிகள் காணப்படுகின்றன. முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த, அக்கறைப்பற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர் ஒருவர், “முடிந்தால் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்துக் காட்டுங்கள்” என சவால் விடுத்துமுள்ளார். அத்துடன் பத்திரிகைகளுக்குப் பகிரங்க அறிக்கை ஒன்றையும் விடுத்திருப்பது, அரசியல் குரோத மனப்பாங்கை வெளிக்காட்டி நிற்கின்றது. எங்களை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென அவர் துடியாய்த் துடிக்கின்றார்.
மேலும், பொத்துவில் பிரதேசத்தில் முதல் நியமனம் பெற்று, பத்து வருடமாக பணியாற்ற வேண்டிய பல ஆசிரியர்கள், தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஒரு கிழமைக்குள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்துக்கு இடமாற்றம் பெற்று வருவதற்கும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை உடந்தையாக இருந்துள்ளது” என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் கவலை வெளியிட்டனர்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் உறுதியளித்தார்.