அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான தற்காலிக வியாபார கொட்டகைக்கு (Sale Centre) நேற்று முன்தினம் அதிகாலை இனந் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
“லாஸ்ட் சான்ஸ் ” (Last Chance )என்று பெயரிடப்பட்ட இந்த வியாபார நிலையத்தில் பெறுமதி வாய்ந்த வர்ண விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ள இவ் வியாபார நிலையத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி ரூபா என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த வியாபார நிலையத்தை அவ்விடத்தில் நடத்துவதை விரும்பாத சக்திகளே இதற்கு தீ வைத்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் அருகிலுள்ள வியாபார நிலையங்களின் சி.சி.ரி.வி. கமெராக்களை பரிசோதித்து குற்றவாளிகளை கண்டறிய பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த தற்காலிக வியாபார நிலையத்தை (Sale Centre) அவ்விடத்தில் நடத்திச் செல்ல மூன்று மாத காலத்திற்கு அனுமதி பெறப்பட்டிருந்ததாகவும் இரு மாத காலமாக இந் நிலையம் இயங்கி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொர்பில் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்படி களுத்துறை பிரதேச வர்த்தகருக்குச் சொந்தமான அதே பெயரில் பெப்பிலியான பிரதேசத்தில் இயங்கும் வியாபார நிலையம் ஒன்றுக்கும் சில வருடங்களுக்கு இனவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.