பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பின் இணைய தொடர்புகளையும், கணக்குகளையும் தகர்த்தெறிவதே தங்களது முதல் நடவடிக்கை என சில தினங்களுக்கு முன் ‘அனானிமஸ்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
முதல்கட்ட நடவடிக்கையாக கடந்த செவ்வாய்கிழமை ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 900 பயனாளர்களை டுவிட்டரிலிருந்து துரத்தியடித்தனர்.
அனானிமஸ் அமைப்பினரின் இந்தத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், இணைய உலகை எங்கள் வசமாக்குவோம் என்றும் ஐ.எஸ். அமைப்பினர் சவால் விட்டனர். இதைத்தொடர்ந்து ‘அனானிமஸ்’ போராளிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை முற்றிலுமாக முடக்கினர்.
ஐ.எஸ். அமைப்பினர் தமது ஆதரவாளர்களிடம் ‘பிரான்ஸ் நாட்டுக் கொடியின் மீது ஷூ வைத்திருக்கும் படத்தை உங்களது சமூக வலைதளங்களில் புரொஃபைல் பிக்சராக மாற்றுங்கள்’ என டெலிகிராம் செயலி மூலம் மறைமுக செய்தியாக அனுப்பியிருந்தனர். அத்துடன் சைபர் தாக்குதல்களிலிருந்து தம்மை காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அனானிமஸ் அமைப்பைச் சேர்ந்த பலரது டுவிட்டர் பக்கங்கள் ஐ.எஸ். களால் ஹேக் செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஒரு ஆரம்பப் பள்ளியின் இணையதளத்தையும் ஐ.எஸ். கள் ஹேக் செய்துள்ளனர்.