Breaking
Mon. Dec 23rd, 2024
அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீத் அவர்களின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மருதூர் ஏ. மஜீத் அவர்கள் கல்வித்துறையில் இலக்கியத் துறையில், கலைத்துறையில் என்று பல்கலை விற்பன்னராகத் திகழ்ந்தவர். எனக்கு மிகவும் பிரியமான ஒரு பேச்சாளர். அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் எவ்வளவு நேரம் அவருடன் உரையாடினாலும் அலுப்பு ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு திறமை மிக்க பெரியவரை நாம் இழந்தது பெருந்துயராகும்.
பெரும்பாலும் எல்லோருடனும் நல்லுறவு பேணிய ஒரு நல்ல மனிதர் அவர். நபர்களின் தகுதி, தராதரம் நோக்காமல் சகலருடனும் அவர் பழகி வந்தார். நல்ல ஆலோசனைகளை வழங்கும் பண்புள்ளவர். சந்திக்கச் செல்லும் யாராக இருந்தாலும் நேரத்தைக் கேட்டு அனுமதி பெற்று வருவது அவரது வழக்கமாக இருந்தது.
கல்வித் துறையில் மட்டுமன்றி இலக்கியத் துறையில் அவர் நீண்ட காலமாக இயங்கி வந்தார். நிறைய நூல்களை எழுதினார். இலக்கியக் கூட்டங்களில் அவரது உரையைக் கேட்பது வெகு சுவாரஸ்யமானது. அவரது எழுத்து அவருக்கு மிகப் பெரும் பிரபல்யத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
இவ்வாறான ஒரு நல்ல பண்புகள் உள்ள மரியாதைக்குரிய மனிதரை ஒரு நல்ல நட்புள்ளத்தை இழந்தது மிகவும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் என்னைப் போன்ற அன்னாரின் நட்புக்களுக்கும் இறைவன் மன அமைதியை வழங்கவும் இறைவன் அன்னாரைப் பொருந்திக் கொள்ளவும் பிரார்த்திக்கிறேன்.

Related Post