அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிட, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சுற்றிவளைப்பானது அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என, அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கையடக்கத்தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும், சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த நிறுவனங்கள் தமது நிறுவனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கு மே மாதத்திற்குள் வாய்ப்பு வழங்கப்படுவதற்கு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
இதன்படி, மே மாதம் முதல் நாடு பூராகவுமுள்ள சட்ட விரோத கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.