பாடசாலை அனுமதி கிடைக்காமல் உள்ள டாக்டர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதிப்படுத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய சங்கத்தினர் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே இந்த உறுதிமொழி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதென சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் நளின்த ஹேரத் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள டாக்டர்களின் பிள்ளைகள் சிலருக்கு தற்போது வரை பிரபல்யமான பாடசாலைகளில் அனுமதி கிடைக்கவில்லை.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். ஜனாதிபதியுடனான சந்திப்பில் எமது பிரதிநிதிகள் —பலர் கலந்து கொண்டனர்.
நாம் தெரிவித்த விடயங்களுக்கு செவிமடுத்த ஜனாதிபதி இதுவரையில் பாடசாலைகளில் அனுமதி கிடைக்காத டாக்டர்களின் பிள்ளைகளின் பெயர்கள் பட்டியலை கையளிக்குமாறு சங்கத்திற்கு அறிவித்தார்.
இச் சந்திப்பின் போது டாக்டர்களின் இடமாற்றங்கள் 4 வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதால் தமது பிள்ளைகளுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை பாடசாலை மாற்றப்பட வேண்டியுள்ளது என்ற விடயத்தையும் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியதாக சங்கம் தெரிவித்துள்ளது.