மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறுகின்றார் என்பதற்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக முடியாது. நான் அமைச்சராக இருக்கவேண்டுமா இல்லையா என்பதனை ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்கவேண்டும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப் போன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை எமது அரசாங்கம் கைதுசெய்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், சட்டத்துக்கு முரணாக நாங்கள் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவன்ட் கார்ட் விவகாரத்தில் திலக் மாரப்பன அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தது மட்டும்போதாது. மாறாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அமைச்சர் விஜேதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
நான் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கவேண்டுமா இல்லையா என்பதனை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தீர்மானிக்க முடியாது. மாறாக நான் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கவேண்டுமா இல்லையா என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே தீர்மானிக்கவேண்டும்.
அந்தவகையில் அனுர குமார திசாநாயக்க கூறுகின்றார் என்பதற்காக நாங்கள் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய முடியாது. மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப்போன்று நாங்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை எமது அரசாங்கம் கைதுசெய்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால் சட்டத்துக்கு முரணாக நாங்கள் எதனையும் செய்ய முடியாது.
எமது அரசாங்கம் அனைத்து விடயங்களையும் சட்டத்துக்கு உட்பட்டே முன்னெடுத்துவருகின்றது. நானும் சட்ட திட்டங்களுக்கு அமையவே வேலைத்திடடங்களை முன்னெடுத்துவருகின்றேன். அவ்வாறான நிலையில் யாரோ ஒருவர் கூறுகின்றார் என்பதற்காக அமைச்சுப் பதவியிலிருந்து விலக முடியாது.
மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு காலத்தில் 60 ஆயிரம் பேரின் உயிர்களுடன் விளையாடியதை மறந்துவிட்டனர்போல் தெரிகின்றது. அவர்கள் செய்தபோது ஒன்றுமில்லை. தற்போது பெரிதாக குரல் கொடுக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப்போன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளரை சட்டத்துக்கு முரணாக கைது செய்திருந்தால் இன்று அவர்கள் ஒரு பிரச்சினையையும் எழுப்பியிருக்கமாட்டார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு சட்டத்தை மதிக்காது எதனையும் செய்ய முடியாது என்றார்.
எவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாரம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.