Breaking
Tue. Dec 24th, 2024

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மொத்தம் 1500 குடும்பங்களுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தினை ஜனாதிபதி அங்குரார்ப்பணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற விழாவின்போது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தல், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் சிறுநீரக நோய்க்கு ஆளான 100 குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை (Filter) வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இவ் விழாவில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் சகல பிரதேசங்களிலும் வியாபித்துள்ள சிறுநீரக நோய்த்தடுப்புக்காக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள விரிவான வேலைத்திட்டத்தை மேலும் வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டார். அவ்வாறே வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு பாடுபடுவதாக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் தற்போதைய அரசின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கை காரணமாக உலக நாடுகள் பலவற்றின் உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இங்கு குறி்ப்பிட்டார். போகஸ்வெவ மகா வித்தியாலயத்திற்கு வருகை தரும் 40 கி.மி. தூரம் கொண்ட பாதையை புனரமைத்து தருமாறு கோரிய மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி, தனிப்பட்ட ரீதியில் இதுபற்றிக் கண்டறிந்து துரிதமாக வீதியை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். அவ்வாறே போகஸ்வெவ பாடசாலையின் குறைபாடுகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ஏற்புடைய பிரிவுகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரிஷாட் பதுர்தீன், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட படைத் தளபதிகள், சிறுநீரகநோய்த் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

By

Related Post