வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சி நேற்று 27.10.2016 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்:- “கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை தொடர்பாக கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் செயலாளர் திருமதி ரேணுகா ஏக்கநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து, இந்த இடமாற்ற முயற்சி உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பிரதேச செயலங்களில் இந்த அமைச்சினூடாக மேலதிகமாகக் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குப் பொருத்தமான அல்லது தாம் விரும்பும் துறைகளுக்கு மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும்” என கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியைமச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.
எனவே, கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவரும் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் எனவும் பிரதியமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.