மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.
அப்துல் கலாம் டெல்லியில் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து உள்ள உள்துறை அமைச்சகம், தலைநகர் டில்லியில் இதுவரை எந்த தலைவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை என்றும், அதனால் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. மேலும் வரும் அக்.31 ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்துல் கலாமின் குடும்பத்தினர், கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், உடைகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ராமேஸ்வரம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.