Breaking
Wed. Nov 13th, 2024

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

முன்னதாக, இன்று காலை ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி வந்த அவரது உடலுக்கு அசாம் மாநில முதல் மந்திரி தருண் கோகாய், மூத்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் அப்துல் கலாமின் உடல் கவுகாத்தியில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக கர்நாடக மாநில சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லி விரைந்துள்ளார்.

இன்று நண்பகல் சுமார் 12.30 மணியளவில் புதுடெல்லியில் உள்ள பாலம் விமான நிலையம் வந்துசேரும் அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

முப்படை தளபதிகளின் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையுடன் அங்கிருந்து துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ வாகனத்தில் புறப்படும் அப்துல் கலாமின் உடல் புதுடெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்துக்கு முழு அரசு மரியாதையுடன் கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பிற்பகல் 3 மணியில் இருந்து 10- ராஜாஜி மார்க் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் வைக்கப்பட்டிருக்கும்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் ராமேஸ்வரத்தில் அவரது பூர்வீக இல்லம் அமைந்துள்ள இடத்தின் அருகாமையில் இருக்கும் ‘மையவாடி’யில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது இறுதி ஊர்வலத்தில் முக்கிய மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கவுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

Related Post