Breaking
Fri. Nov 22nd, 2024

நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கருத்து கூறியதால், டெல்லியில் வழக்கு, நாடு முழுவதும் கண்டனம் என்று பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவோம் என்று சர்ச்சைகளுக்கு பேர் போன இந்து அமைப்பான சிவ சேனா அறிவித்துள்ளது.

‘‘என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களை சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்து பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது’’ என்று அண்மையில் அமீர் கான் தெரிவித்த கருத்துக்கு இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது. வழக்கம் போல அமீர்கான் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்ற வெறுப்புக் குரல்களும் ஓங்கி ஒலித்தன.

விரைவில், திரைக்கு வரவிருக்கும் டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர் கான், லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஓட்டலில் தங்கியுள்ள நிலையில், நேற்று அந்த ஓட்டலை முற்றுகையிட்ட சிவசேனா அமைப்பினர் அமீர் கானை கொச்சையான வார்த்தைகளில் திட்டி, அவரது புகைப்படத்தைக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன், அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஓட்டலில் (ராடிசன் ப்ளூ) உள்ள ஊழியர்களுக்கும் மேலாளருக்கும் அமீர்கானின் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்களுக்கு அமீர் கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் 1 லட்ச ரூபாய் பரிசு தரப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எனக்கு எதிராக செயல்படுபவர்கள் நான் கூறிய கருத்தையே மெய்ப்பிக்கின்றனர் என்று அமீர் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By

Related Post