Breaking
Sun. Dec 22nd, 2024

அமெரிக்காவின் (Millennium Challenge Corporation) நிறுவனம் தன்னுடைய ஆரம்ப நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது. MCC நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று (Loews Regency) ஹோட்டலில் சந்தித்தார். 2016 டிசம்பரில் இடம்பெறவுள்ள MCC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ள செயலாக்க அறிக்கையினை தயாரிப்பதற்காக தம்முடைய குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்திட்டங்கள் எவை என்பது தொடர்பில் பணிப்பாளர் சபை அறிக்கை சமர்ப்பிர்க்கப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்ட ஹைடி, புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக முன்னெடுக்கும் பல செயற்திட்டங்களுக்கு தமது நிறுவனம் உதவியளிக்கும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவானது பல தசாப்தகாலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல செயற்திட்டங்களுக்கு உதவியளித்து வருவதையும், அதிலும் குறிப்பாக இன்று பல்வேறு பரிமாணங்களில் செயற்படுத்தப்படும் மிகப்பெரிய செயற்திட்டமான மகாவலி Hydro Electric செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 1950களின் முற்பகுதியில் அமெரிக்கா உதவி அளித்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, MCC நிறுவனமானது தன்னுடைய ஆரம்ப நிகழ்சித்திட்டத்தின் கீழ் உதவியளிப்பதற்கு இலங்கையினை தெரிவு செய்தமைக்காக தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு உலகம் அடையாளம் கண்டுகொண்ட மிகப்பிரமாண்டமான சாதனைகளுக்காக ஜனாதிபதிக்கு ஹைடி தனது பாராட்டுக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக, அர்ஜுன ரணதுங்க, பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதுவர் ரொஹான் பெரேரா, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

By

Related Post