அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகின்றனர்.
இந்த நிலையில், ராய்டர்ஸ் மற்றும் இப்சோஸ் நிறுவனங்கள் பொது மக்களிடம் 50 மாகாணங்களில் ஆன்லைனில் வாக்கெடுப்பு மூலம் கருத்து கணிப்பு சர்வே நடத்தின. இது கடந்த 14 முதல் 18-ந்தேதி வரை நடத்தப்பட்டது.
இதில் ஹிலாரி கிளிண்டன் 42 சதவீதம் வாக்குகளும், டொனல்டு டிரம்ப் 34 சதவீதம் வாக்குகளும் பெற்றனர். 23 சதவீதம் பேர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஹிலாரி கிளிண்டன் 8 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் 41 முதல் 44 சதவீதம் பேர் ஹிலாரியை ஆதரித்தனர். டிரம்புக்கு 33 முதல் 39 சதவீதம் மட்டுமே ஆதரவு கிடைத்தது.
ஹிலாரியும், டிரம்பும் அமெரிக்க வாக்காளர்களை கவர தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர். ஏனெனில் மூன்றில் 2 பங்கு இளைஞர்கள் நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கருதுவதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.