அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் டுவிட்டர் மற்றும் CentCom எனப்படும் பிரிவின் யூடீயூப் கணக்கு ஆகியவற்றை நேற்று திங்கட்கிழமை ISIS ஆதரவாளர்கள் தற்காலிகமாக முடக்கியிருந்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
சுமார் 110 000 பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் டுவிட்டரை ஹேக் செய்த ISIS ஆதரவாளர்கள் அதில்,
‘அமெரிக்க வீரர்களே நாங்கள் வருகின்றோம்! பின்னால் திரும்பிப் பாருங்கள் என்ற டுவீட்டை இடம்பெறச் செய்ததுடன் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அமெரிக்க இராணுவ ஜெனரல்களில் முகவரியையும் பிரசுரித்து அவ்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிரட்டலும் விடுத்திருந்தனர். மேலும் Centcom இனது யூடியூப்பையும் ஹேக் செய்த இக்குழு அதில் தமதும் ISIS இயக்கத்தின் பிரச்சார வீடியோக்களை இடம்பெறச் செய்திருந்தனர். இந்த ஹேக்கிங்கால் சுமார் 40 நிமிடங்கள் ஸ்தம்பித்த இரு இணையத்தளங்களும் உடனடியாக ஆஃப் லைனுக்குக் கொண்டு செல்லப் பட்டு பழைய நிலைக்கு மீளத் திரும்பியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த ஹேக்கிங் தொடர்பான விசாரணைக்காகவும் குறித்த இணையத் தளங்கள் ஆஃப்லைனில் வைக்கப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBI இது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ISIS இனது இந்தப் புதியவகைத் தாக்குதல் யுத்தி சைபர் கலிஃபாத்களால் தொடுக்கப் படும் சைபர் ஜிஹாத் என டுவிட்டரை ஹேக் செய்த போது அவர்கள் குறிப்பிட்டதில் இருந்து தெரிய வந்துள்ளது. இதை அவர்கள் இனிமேலும் தொடர்வோம் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த வலைத் தளங்கள் முடக்கப் பட்ட போது அமெரிக்க அதிபர் ஒபாமா சைபர் தாக்குதல்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.