அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) நல்லெண்ண அடிப்படையில் நேற்று முந்தினம் (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இதேவேளை, இக்கப்பலின் சிரேஷ்ட அதிகாரி, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் அவுகொயின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
மேலும், இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இக்கப்பலில் வருகை தந்த குழுவினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவரிசை நிகழச்சிகளில் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் இலங்கை கடற்படையினர் மற்றும் அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் வாத்திய குழுவினர் ஆகியோர் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பொதுமக்களுக்கான வாத்திய நிகழ்ச்சிகளையும் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரு நாட்டு கடற்படை வீரர்களும் வெளிசர கடற்படை தளத்தில் வைத்து உதைபந்தாட்டம், கூடை பந்தாட்டம் மற்றும் பேஸ்போல் ஆகிய போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளதுடன் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) கப்பலில் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோருக்கு விசேட பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை கப்பலுடன் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுப்பட்டதன் பின் இக்கப்பல் மார்ச் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து செல்லவுள்ளது.