Breaking
Wed. Jan 8th, 2025

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் ஜோர்ஜ் W. புஷ் இன் நிர்வாகத்தின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறையான சிஐஏ தாம் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்திருந்த பலரிடம் இருந்து தகவல்களைப் பெற மனிதாபிமானம் அற்ற பல கொடூர சித்திரவதை முறைகளைக் கையாண்டிருந்தது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.

மேலும் இது தொடர்பில் செனட் சபையில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க செனட் சபையில் புலனாய்வு கமிட்டி அமெரிக்க அரசு கையாண்ட இந்த சித்திரவதை நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் இந்த அறிக்கையை அப்படியே பொது மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது தொடர்பில் ஒபாமா தலைமையிலான வெள்ளை மாளிகை நிர்வாகத்துக்கும் அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் ஏற்பட்ட அச்சம் காரணமாக சந்தேகத்துக்குரிய நபர்களிடம் இருந்து விபரங்களைப் பெற சிஐஏ கையாண்ட சித்திரவதை நடவடிக்கைகள் ஆழ்ந்த குறைபாடு உடையவை எனவும் இதன் மூலம் ஜோடிக்கப் பட்ட தகவல்களை மாத்திரமே பெற முடிந்தது என்றும் அதில் கூறப்பட்டிருப்பதனால் ஆகும்.

இந்நிலையில் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு சிஐஏ கைதிகளிடம் இருந்து விபரங்களைப் பெறக் கையாண்ட சித்திரவதைகள் அமெரிக்காவின் ஒழுக்க நியதிகளுக்கு முரணானவை என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பிய அதேவேளை புஷ் நிர்வாகத்தில் இருந்த மூத்த உறுப்பினர்கள் செப்டம்பர் 11 தாக்குதல் போன்று அமெரிக்காவில் இன்னொரு தாக்குதல் நடக்காமல் இருக்க இவ்வழிமுறைகள் அவசியமாகப் பட்டன என்று பதில் உரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை செனட் சபையில் சித்திரவதை தொடர்பான இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குள் சிஐஏ வெளியிட்ட அறிக்கையில் தாம் கையாண்ட வழிமுறைகள் மிகுந்த பயனுடையதாக இருந்ததாகவும் இது உடனே அல்கொய்தாவின் அடுத்த ஆப்பரேஷன்கள் மற்றும் இலக்குகள் எதுவாக இருக்கும் என்பதை ஊகிக்க உதவியதாகவும் தெரிவித்துள்ளது.

அதிபர் ஒபாமா இந்த அறிக்கை முடிவு குறித்து தகவல் அளிக்கையில், ‘மனிதாபிமானமற்ற இந்த விசாரணை வழிமுறைகள் ஓர் தேசம் என்ற அடிப்படையில் எமது கலாச்சாரத்துடன் பொருந்தவில்லை என்பது போக தீவிரவாதத்தை இல்லாதொழிக்கும் எமது முயற்சிகளுக்கோ அல்லது தேசிய பாதுகாப்புக்கோ கூட குறிப்பிட்டளவு பங்களிக்கவில்லை!’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று அமெரிக்க செனட் சபையில் வெளியிடப் பட்ட 500 பக்கமுடைய சித்திரவதை அறிக்கை அமெரிக்க அரசின் மீது படிந்த கறையை நீக்க உதவப் போவதில்லை என்ற போதும் இது அமெரிக்க மக்களுக்கும் உலகுக்கும் நாம் எங்கே பிழை விடுகின்றோம் என்பதை உணர்த்தவும் எமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கவும் கூடும் என செனட் புலனாய்வு கமிட்டியின் பொறுப்பாளரான டியான்னே ஃபெயின்ஸ்டெயின் என்ற பெண்மணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post