இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னால் பிரதித் தலைவரான அஷ்டொன் கார்ட்டெர் என்பவரைத் தமது புதிய பாதுகாப்புச் செயலாளராக அறிவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்செய்தி உறுதியாகும் பட்சத்தில் கடந்த மாதம் பதவி விலகியிருந்த சக் ஹாகெலின் இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
அஷ்டொன் கார்ட்டெர் ஏற்கனவே ஆக்டோபர் 2011 முதல் டிசம்பர் 2013 வரை லெயொன் பனெட்டாவின் கீழ் பிரதிப் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிபர் ஒபாமா இந்த அறிவிப்பை இன்று வெள்ளி மாலை கார்ட்டெர் மற்றும் ஹாகெலுடன் இணைந்து அறிவிப்பார் என பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 60 வயதாகும் கார்ட்டெர் அதி நவீன ஆயுதங்களைக் (hi-tech weapons) கையாள்வதிலும் இராணுவத்துக்கு ஒதுக்கப் படும் பட்ஜெட்டுக்களை சிக்கனமாகப் பாவிப்பதிலும் நிபுணர் என்பதுடன் பென்டகனின் அதிகாரத்துவத்தை உறுதியான வழியில் பிரயோகிக்கக் கூடியவரும் ஆவார்.
ஆயினும் போர் மூலோபாயங்களை மேற் பார்வையிடுவதில் அனுபவம் மிகக் குறைந்தவர் என்றும் சீருடையில் இவர் வேலை பார்த்ததே இல்லை என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை முன்னால் பாதுகாப்புச் செயலாளரான ஹாகெல் வியட்நாம் போரில் பங்கேற்ற நேரடி அனுபவம் மிக்கவர் என்பதுடன் அப்போரில் அவர் காயம் அடைந்தும் இருந்தார். எனினும் சமீபத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் ISIS மீதான விமானத் தாக்குதலை அமெரிக்கா ஆரம்பித்த கட்டத்தில் ஹாகெலுக்கும் ஒபாமா நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகையின் நம்பிக்கையை ஹாகெல் இழந்து பதவி இறக்கப் படும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.