மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன.
குறித்த மோசுல் அணையை அமெரிக்கா உலகின் மிக ஆபத்தான் அணை என விவரித்துள்ளது. ISIS வசமுள்ள நகரங்களை மீட்பதில் சமீப காலமாக குர்து இனப் படைகள் அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் கடுமையாகப் போராடி வருகின்றன.
ISIS குர்து இனத் தலைநகரான மோசுலைக் கைப்பற்ற முன்னர் ஈராக் துருப்புக்களிடம் இருந்து தாம் கைப்பற்றிய அமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசுல் அணையை முன்னர் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குர்துப் படைகள் இந்த அணையை முற்றாகக் கைப்பற்றி விட்டதாக ஈராக் இராணுவப் பேச்சாளர் கஸ்ஸிம் அட்டா ஈராக தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் ஈராக்கிலுள்ள இராணுவ அதிகாரிகளைக் காப்பதற்கும் ஈராக் சிறுபான்மையினத்தவருக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலைப் போக்குவதற்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா ஈராக்கில் ISIS போராளிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விமானத் தாக்குதல்கள் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மோசுல் அணையை மீட்கும் நடவடிக்கையில் ISIS போராளிகளின் பல ஆயுத கவச வாகனங்கள் மற்றும் அருகே இருந்த பாசறைகள் என்பன அழிக்கப் பட்டுள்ளன. எனினும் மேற்கு ஈராக்கிலும் கிழக்கு சிரியாவிலும் ISIS அல்லது ISIL போராளிகள் பல எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களைத் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது கைப்பற்றப் பட்ட மோசுல் அணை முறையாகப் பராமரிக்கப் படாமல் விட்டால் இன்னும் 3 மாதங்களுக்குல் மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.