வில்பத்து சரணாலயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சட்டவிரோதமாக குடியேற்றங்களை ஆரம்பித்திருப்பதனால் வேறு சில அமைச்சுகள் இதுபற்றி முரண்பட்டிருக்கிறது என்றும் இதனால் பிரச்சினை பெரிதாவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்ட போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வில்பத்து பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வீடமைப்புத்திட்டம் வில்பத்து சரணாலயத்திற்கு உள்ளேயா, அல்லது வெளியிலா ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் முதலில் விசாரணை செய்து பார்க்க வேண்டும். அரசாங்கம் வில்பத்து சரணாலயத்திற்குள் வீடமைப்புத் திட்டத்தை ஏற்படுத்த இடமளிக்காது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த குடியேற்றங்கள் வில்பத்து சரணாலயத்திற்குள் ஏற்படுத்தப்பட்டவை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தாம் அந்த குடியேற்றங்களை வில்பத்து சரணாலயத்திற்கு வெளியில் ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். இவ்விதம் நாம் பிரச்சினைகளுக்கு இடமளிக்காமல் விசாரணைகளை செய்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்று ஜனாதிபதி கூறினார்.
வில்பத்து சரணாலயத்திற்குள் இருக்கும் பாதைக்கு கார்பட் போடும் யோசனையை நாம் நிராகரித்துவிட்டோம். அவ்விதம் செய்தால் அது சரணாலயத்தின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துவிடும் என்று நாம் கருதுகிறோம். மத ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி செய்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.