-ஊடகப் பிரிவு-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட தளபாடப் பொருட்களில் ஒரு பகுதி, மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் (14) ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில், காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலினால், அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கடந்தவாரம் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட உறுப்பினர் ஜலீல், பாடசாலையின் தேவைப்பாடுகள், குறைகளைப் பற்றி அதிபரிடம் கேட்டறிந்தார். இதில் முக்கிய குறைபாடாக காணப்பட்ட பாடசாலை நூலகம், அதிபர் காரியாலயம் போன்றவற்றுக்கு தளபாடங்கள் குறைபாடாக காணப்படுவதனால், நூலகங்களில் உள்ள புத்தகங்கள் தளபாடமின்மையால் மேசைகளில் குவிந்து கிடப்பதாகவும் தெரிவித்தார். இதனைக் கருத்திற் கொண்ட உறுப்பினர் ஜலீல், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் மூலம், அமைச்சரின் பணிப்பின் பேரில், அமைச்சரின் சொந்த நிதியின் மூலம் வழங்கப்பட்ட தளபாடங்களில் ஒரு பகுதி, இன்று ஜலீல் அவர்களினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய அதிபர்,
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தற்போது நாட்டின் பலபாகத்திலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மக்களுக்காக செய்துவருகின்றார். குறிப்பாக தனது சொந்த நிதியின் மூலம் எமது பாடசாலைக்கு தளபாடங்களைக் கொள்வனது செய்து தந்த அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் சார்பாகவும் கூறிக் கொள்வதுடன், இன்னும் பல அபிவிருத்திகளை எமது பாடசாலைக்கும், எமது மண்ணிற்கும் வழங்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
அதே போன்று இப் பாடசாலையின் பழைய மாணவரான பிரதேச சபை உறுப்பினர் ஜலீல், தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பின்னும் பலமுறை என்னைத் தொடர்பு கொண்டு பாடசாலையின் குறைபாடுகளைக் கேட்டறிந்து, பாடசாலையின் அபிவிருத்தியில் கரிசனை செலுத்தியது மாத்திரமின்றி, கடந்தவாரம் இருள் மயமாகக் காணப்பட்ட பாடசாலை வாளகத்தை மின்குமிழ் பொருத்தி ஒளிமயமாகவும் ஆக்கியுள்ளார். தற்போது தளபாடக் குறைபாட்டைக் கருத்திற் கொண்டு அமைச்சர் மூலமாக நிறைவேற்றி தந்த காரைதீவுப் பிரதேச சபையின் உறுப்பினர் ஜலீல் அவர்களுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி மத்திய குழுவிற்கும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஜலீல்,
இத் தளபாடங்கள் எங்களது அமைச்சரது சொந்த நிதியின் மூலம் கிடைத்தது. இத்தோடு நின்றுவிடவில்லை. இன்னும் பல அபிவிருத்திப் பணிகளை எமதூருக்கு அமைச்சர் மூலமாகவும், பிரதேச சபை மூலமாகவும், நானும், எங்களது மத்திய குழுவும் இணைந்து செய்யவிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில முக்கிய அபிவிருத்திப் பணிகளை இப் பாடசாலைக்கு செய்ய வேண்டியுள்ளது. இவைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைச்சரின் ஆலோசனையோடு செய்யவுள்ளோம். அது மாத்திரமின்றி நமது ஊருக்கான பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கட்சி மூலமாகவும், பிரதேச சபை மூலமாகவும் நிறைவேற்றவுள்ளோம், இன்னும் பல அபிவிருத்திப் பணிகள் அமைச்சரின் வருகையோடு மாவடிப்பள்ளி மண்ணில் கோலாகலமாக ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.