Breaking
Tue. Nov 19th, 2024

-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு-

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் இராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று (23) இராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 33000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டேன். சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்திலேயே எம் பி பதவியை இழந்தேன்.

எனினும், தேர்தல் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் வாக்களித்ததற்கு அமையவும், புத்தளம் மண்ணைக் கௌரவிக்கும் வகையிலும், புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இழக்கப்பட்டு வந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்யும் வகையிலேயும் கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் எம்.பி பதவியை எனக்கு வழங்கி புத்தளம் மண்ணை கௌரவித்தார்.

அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் முதற்கண் இறைவனுக்கும், கட்சியின் தலைமைக்கும், கட்சியின் உயர்பீடத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்றரை வருட காலத்திற்கே எனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. எனினும், அதற்கு மேலதிகமாக நான் சுமார் இரண்டரை வருட காலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க இறைவன் அருள் புரிந்துள்ளான்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி, சொற்ப வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வேறு சில மாவட்டங்களிலும் இழந்திருந்தது. அம்மாவட்டங்களுக்கு பிரதிநித்துவத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும், தலைமைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான் இராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது இந்தப் பதவிக் காலத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், புத்தளம் மாவட்டத்திற்கு அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன பணிகளைச் செய்துள்ளேன் என்பதில் மனத்திருப்திக் கொள்கின்றேன்.

நான் எம்.பி பதவியை காலத்தின் தேவை கருதி இராஜினாமாச் செய்துள்ள போதிலும், தொடர்ந்தும் கட்சியின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உழைப்பேன். அத்துடன், எங்கள் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன் எனவும், இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் உறுதியளிக்கின்றேன்.

Related Post