அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு இரண்டாவது நாளாக மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (23) இடம்பெற்றது.
மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி, புதிய சுயதொழில்களை எவ்வாறு உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில், மக்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்காக இது அமைந்திருந்தது.
இந்த நிகழ்வுகளில் அமைச்சரின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி மொஹிடீன், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் ரஹ்மான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.