Breaking
Sun. Nov 17th, 2024

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

குடும்பங்களின் வருமானங்களை உயர்த்தவும்,  தலைமைத்துவ பண்புடைய வருமானம் பெறக்கூடிய பெண் சமூகத்தை உருவாக்குவதாற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல், காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் இந்த தையல் பயிர்சி நிலையங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன்,  தையல் பயிற்சியை வழங்கும் ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கூறியதாவது,

“உண்மையாகவே இந்த தையல் பயிற்சித் திட்டமானது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. அமைச்சரின் அரசியல் பிரவேசம் ஆரம்பமான முதல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.  ஆனால் இன்று பாரிய நிதியில் யுவதிகளுக்காக தற்பொழுது மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியானது ஒவ்வொரு பெண்களும் சாதாரணமாக ரூபாய் 50000 மாத வருமானம் பெறக்கூடிய வகையில் ஒரு சுய தொழிலை உருவாக்கக் கூடிய பயிற்சி என்று முதலில் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அமைச்சர் இவ்வாறு உங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் ஒவ்வொரு ரூபாவிலும் நீங்கள் பயனடைய வேண்டும்.  இது இலவசமாக நடாத்தப்படும் பயிற்சியென்று அசமந்தப் போக்கில் பயிற்சியில் ஈடுபடாமல், முழு முயற்சியுடன் நாளை நீங்கள் ஒரு ஆசிரியராகவோ, அல்லது சொந்தமாக ஒரு தையல் தொழில்சாலையினை உருவாக்கக்கூடிய வகையில், இந்த பயிற்சிகளை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமின்றி இப்பயிற்ச்சி வகுப்பில் தமிழ் மற்றும் முஸ்லீம் பெண்கள் ஒன்றிணைந்து செயற்பட இருக்கின்ரீர்கள். உங்கள் ஒற்றுமை நாளை சமூகத்தில் பேசப்பட வேண்டும். அதேபோன்று, அமைச்சர் உங்களிடம் இந்தப் பயிற்சி மூலமாக எதிர்பார்ப்பது என்னவெனில்,  உங்கள் வறுமையை போக்கக்கூடிய வழியை நீங்கள் உருவாக்கி உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதேயாகும். எனவே நேரத்தை கடைபிடியுங்கள். ஆசிரியருக்கு மரியாதை செலுத்துங்கள். ஒழுக்கமான ஒரு பயிற்சியை பெற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாணப் பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவகர், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பயிற் சி பெரும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(ன)

Related Post