அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் ரிஷாட் படுகொலை தொடர்பான செய்தியானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில், இன்னும் மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படும் நிலையில், மற்றொரு சிறுபான்மை முஸ்லிம் அரசியல் தலைமை மீது வைக்கப்பட்ட இலக்கு தொடர்பில், சர்வதேச மற்றும் முஸ்லிம் நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தின் குரலை அடக்குவதற்கு கையாளப்படுகின்ற மிகவும் மிலேச்சத்தனமான ஒரு செயலாக இந்த படுகொலை திட்டத்தை நாம் பார்க்கின்றோம். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது மேற்கொள்ளப்படும் காட்டுமிரண்டித்தனமான சம்பவங்கள் வரலாற்றுப் பதிவாக காணப்படுகின்றது. இந்த ஒரு பின்னணியில் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன், செய்யாத விடயங்களை அவர் மீது திணித்து, அதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பிழையானதொரு விதைப்பை செய்ய சிலர் முற்பட்டனர்.
அதேபோல் அளுத்கம முதல் கண்டி வரை, முஸ்லிம்களின் வர்த்தகம் மற்றும் சொத்துக்கள் என்பனவற்றை இலக்காகக் கொண்டு, அவற்றை துவம்சம் செய்தனர். அப்போதெல்லாம் இரவு, பகல் என பாராது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அப்பிரதேசங்களுக்குச் சென்று, அந்த மக்களை ஆசுவாசப்படுத்தி, தேவையான உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இதேபோல் தற்போது அமைச்சருக்கு எதிராக, ஆயுதத்தின் மூலம் அவரது குரலை நசுக்க எடுக்கப்பட்ட இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்பதை தாம் சுட்டிக்காட்டுவதாகவும் இது தொடர்பில், துரித கவனத்தை செலுத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இந்தப் படுகொலை சதித்திட்டம் தொடர்பில், உரிய விசாரணையினை மேற்கொள்வதுடன், அவரது பாதுகாப்பினை பலப்படுத்த அரசாங்கத்தை கோரும் தீர்மானங்களை எடுக்குமாறும் தாம் வேண்டுவதாகவும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்துள்ளார்.
-ஊடகப்பிரிவு-