கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா மாவட்டத்தில் உள்ள பல சிங்கள கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களை, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கூறியதாவது,
இந்த நிகழ்வானது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளின் உண்மை நிலையை இலங்கை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டக்கூடியதாக அமைந்துள்ளது. அதிகமான அரசியல்வாதிகள் அதிகமாக தன்னைச்சார்ந்த சமூகம் மட்டும் அபிவிருத்தியடைய வேண்டும் என்ற கொள்கையில், மற்றைய சமூகங்களுக்கு அநீதிகளை இழைக்கும் சந்தர்ப்பத்தினை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், வன்னி மாவட்டத்தில் இன்று அமைச்சராக இருக்கின்ற ரிஷாட் பதியுதீன், தன்னுடைய சமூகத்திற்கு என்ன சேவைகளை செய்கின்றார்களோ அதேபோன்று, தன் சகோதர சமூகத்திற்கும் சேவைகள் செய்து வருகின்றார்.
நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் தொலைவிலிருந்து வரும் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் வறுமையில் இருக்கின்ற சிங்கள, முஸ்லீம் மற்றும் தமிழ் மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி, குடிநீர் பிரச்சனை கொண்ட சிங்கள குடியேற்றங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தான் ஒரு முஸ்லீம் அமைச்சராக இருந்தும் ஏன் இவ்வாறான சேவைகளை மற்றைய சமூகங்களுக்கு செய்ய வேண்டும் என்று சில காழ்ப்புணர்ச்சிகொண்டவர்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால், ரிஷாட் பதியுதீன் இந்த சமூகத்தின் ஒற்றுமையை, இந்த இலங்கையை அபிவிருத்தி அடைய வைக்கும் நோக்குடன், வரிய மக்கள், தேவையுடைய மக்கள் என்ற ஒரு எண்ணத்திலேயே அனைத்து சமூகங்களுக்குமான சேவைகளை செய்து வருகிறார்
கடந்த காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலும் சிங்கள மற்றும் முஸ்லீம்களுக்கிடையிலான இனமுறுகல் இடம்பெற்று கலவரமாக மாற்றம் பெற்று எமது நாட்டிற்கு பல கோடிகளில் நஷ்டத்தை உண்டாக்கிய சம்பவம் யாராலும் மறக்க முடியாது. இதற்கு காரணம் அந்த மாவட்ட அரசியல் வாதிகள் சமூகங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்தி இருக்கின்றார்களே தவிர, இன நல்லுறவை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று எமது வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், இதுவரை சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையில் எந்தவொரு இனக்கலவரம் இடம்பெறவில்லை. காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இனம், மதம், மொழி கடந்த சேவைகள்தான்.
நேற்று வவுனியா பயணத்தில் நாங்கள் சென்ற அதிகமான வீடுகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புகைப்படத்தினை வைத்திருக்கின்றார்கள். அமைச்சரைப் பற்றி கேள்வி எழுப்பிய பொழுது, “வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இந்த ரிஷாட் பதியுதீன் என்றும் அவருடைய இனம் கடந்த சேவையாற்றும் நல்லுள்ளம், ஏழ்மைத்தனம் மக்களோடு பழகும் விதம் அனைத்தும் ஒன்றுசேர்ந்துதான், அவரை 18 வருடம் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றுள்ளது. அதுமாத்திரமல்லாமல் நாங்கள் சிங்கள மக்களாக இருந்த பொழுதும் முஸ்லீம் மக்களோடு ஒரு தாய் பிள்ளைகளாக பழகுவதற்கு காரணம் அமைச்சர் அவர்கள்தான்” என குறிப்பிட்டார்கள்
எமது சமூகத்தை சேர்ந்தவர்களே அமைச்சரை இல்லாமலாக்க துடிக்கும் பொழுது, சகோதர சமூகம் அவரை பாதுகாக்க நினைப்பதும் அதற்கு காரணமாக இருக்கின்ற அமைச்சரின் இனம் கடந்த சேவைகளும் என்றும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார்.