அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரின் உதவியினால் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான அபிவிருத்திகளை புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்குவதற்க்கான திட்ட வரைவு செயற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவியின் அழைப்பின் பேரில், புத்தளம் தள வைத்தியசாலைக்கான திட்ட வரைவு வேலைகளை முன்னெடுக்கும், CECB நிறுவனத்தின் அதிகாரிகள், அந்நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் திருமதி தம்மிக்கவின் தலைமையில் (06) புத்தளம் வைத்திசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
வைத்தியசாலை உயரதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் ஆகியோரும் தள வைத்தியசாலையின் எதிர்கால வரைபு திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நேரடி தலையீட்டால் புத்தளம் தளவைத்தியசாலைக்கு 44 தாதிமார் நியமனம் பெற்று வந்துள்ளதுடன், மேலும் 18 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
அத்துடன், தாதிமார் விடுதி, மருந்தகம் ஆகியவற்றிற்காக இவ்வருடம் 70 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க மேலும், அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.