அதிபர், ஆசிரியர் இடமாற்றத்திலும் பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகளிலும் தலையிடாதிருக்கும் அமைச்சர் றிசாட்டின் முன்மாதிரியை ஏனைய அரசியல்வாதிகள் முன்னுதாரணமாகக் கொண்டால் பணிகளை இலகுபடுத்த முடியுமென வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் அமைச்சர் றிஷாடிற்குமிடையிலான கலந்துரையாடல் சாளம்பைக்குளம் அல்-அக்ஸா மகா வித்யாலயத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட கல்விப் பணிப்பாளர் மேலும் கூறியதாவது, வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு பல்வேறு குறைபாடுகளும் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திப்பதற்கு அமைச்சர் றிஷாட்டும் எமக்கு உதவி வருகின்றார்.
கல்வி நிர்வாகத்தை சீராக முன்னெடுக்க அதிபர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பே இன்றியமையாதது. அதிபர்கள் சிறந்த முறையில் செயற்பட்டால் கல்வியை மேம்படுத்த முடியும். பாடசாலை ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் நாம் தீர்த்து வைக்க முடியாவிடினும் அவர்களின் பிரச்சினைகளை பொறுமையுடன் செவிமடுத்தாலேயே அந்தப் பிரச்சினைகளில் அரைவாசி தீர்ந்து விட்டதென்ற ஒரு மனநிலை உருவாகும். கல்வி அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கும் அதிபர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகின்றது. சில பாடசாலைகளில் அதிபர்களையும் ஆசிரியர்களையும் இடம் மாற்றுங்கள் என பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் கையொப்பங்களைப் பெற்றுக்கொண்டு எம்மிடம் மகஜர்களைக் கையளிக்கின்றனர். அதே பாடசாலையிலுள்ள அதே அதிபரையோ அதே ஆசிரியரையோ இடம்மாற்ற வேண்டாமென்று அந்தப்பாடசாலை மாணவர்களின் இன்னும் பல பெற்றோர்கள் அதே அளவு கையொப்பத்துடன் கல்வித்திணைக்களத்துக்கு வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு மகஜர்களிலும் அங்கேயும் இங்கேயும் மாறி மாறி பெற்றோர்கள் கையொப்பமிடுகின்றனர். இவ்வாறான நிலையில் முடிவெடுக்க முடியாது நாங்கள் தடுமாறுகின்றோம்.
வவுனியா மாவட்ட பாடசாலைகளிற் சில பொதுப்பரீட்சைகளிலும் போட்டிப் பரீட்சைகளிலும் பெறுபேறுகள் வீழ்ச்சியடைவதற்கு பல்வேறு காரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வு கூட வசதியின்மை ஆகியவையே அவற்றில் சில. எனினும் சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதிப்கபடியான பயிற்சியினால் அவர்களுக்கு விடுப்புணர்வு இல்லாது போய் பாடங்களில் கோட்டை விடுகின்றனர் என்றும் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் ஒவ்வொருவரும் தமது பாடசாலையின் அடைவு மட்டம் மற்றும் குறைபாடுகளை விளக்கியதுடன். அமைச்சரிடம் தேவைகள் அடங்கிய அறிக்கையொன்றையும் கையளித்தனர். இங்கு விசேட பாடங்களுக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புக்கள் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு அமைச்சரின் பங்களிப்புடன் சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
தளபாடப் பற்றாக்குறை, கட்டிட வசதி, சுற்று மதில் அமைத்தல் மற்றும் இன்னோரன்ன குறைபாடுகளை நிவர்த்திப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.