Breaking
Mon. Dec 23rd, 2024
இன்று முஸ்லிம்கள் ஞானசார தேரரை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தின் விரோதியாக பார்க்கின்றார்களோ அதுபோலவே சிங்கள சமூகம் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிங்கள சமூகத்தின் ஓரே விரோதியாகவும் எதிரியாகவும் பார்க்கின்றார்கள்.
இவருக்கு மட்டும் இந்நிலை ஏன்?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமையோ அல்லது வேறு முஸ்லிம் தலைவர்களையோ அமைச்சர்களையோ இவர்கள் இவ்வாறு எதிரியாக நோக்குவதில்லை. இது ஏன்?
காரணம், அமைச்சர் ரிசாத் பதியுதீன் நமது சமூகத்தின் மீது வைத்திருக்கின்ற உண்மையான அக்கறையும் பற்றுதலுமே.
அவ்வப்போது பேரினவாதிகளால் அரங்கேற்றப்படும் அத்துமீறல்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் எதிராக வெளிப்படையாகவே இவர் உரத்துக்குரல் கொடுக்கின்றார்.
அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக  இருந்துகொண்டே அரசு நமது மக்களுக்கு எதிராக செயற்படும் வேளைகளில் அரசுக்கெதிராகவே குரல் கொடுக்கின்றார். தான் அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியில் இருந்தபோதும் தனது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு அவர் தயங்கியதில்லை. இதனை அவர் அரசியலில் நுழைந்ததிலிருந்து இதுகாலவரை முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற ஒவ்வொரு விடயத்திலும் நாம் கண்டிருக்கிறோம்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் அரசியல் வரலாறுகளை புரட்டிப்பார்க்கும்போது அவரையும் அப்போதைய சூழ்நிலையில் சிங்கள பேரினவாதிகள் தமது சமூகத்தின் எதிரியாகவே பார்த்தார்கள், விமர்சித்தார்கள். அவருக்கெதிராகவும் அவருடைய அரசியல் நகர்வுகளுக்கு எதிராகவும் சூழ்ச்சி செய்தார்கள். மோசடி குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். இவை எல்லாவற்றையுமே அவர் நெஞ்சுறுதியுடன் எதிர்கொண்டார். எதிரிகளின் சவால்களை தனித்து நின்று முறியடித்தார். இறுதியிலே தொலைக்காட்சியிலே பகிரங்க விவாதத்திற்கு ஒரு பேரினவாத தேரர் சவால் விட்டார், அதில் நேரடியாக கலந்துகொண்டு அவரையும் தோற்கடித்தார்.
அதுபோலவே மிக இளம் வயதிலே ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற அதேவேளை பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருந்துகொண்டு எந்த குற்றங்குறைகளும் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு தனது பொறுப்புக்களை மிக நேர்த்தியாக செய்துவரும் தலைவர் ரிசாத் பதியுதீன். வயதுக்கு மீறிய பக்குவமும் அரசியல் சாணக்கியமும் நிறைந்த தனது செயற்பாடுகளால் இலகுவில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றார். இதனால் மானசீகமாக இவரின் பின்னால் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமூகத்தவர்களும் அணி திரள தொடங்கியுள்ளனர்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள பேரினவாதிகள் இவரை தங்களது எதிரிகளாகவே பார்க்கத்தொடங்கி விட்டார்கள். இவருடைய வளர்ச்சியும் எழுச்சியும் தங்களுக்கு மிகப்பெரும் சவால் என்பதால் இவரை அழித்தொழிப்பதற்கான முயற்சியில் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ளார்கள்.
இது வெளிப்படையாகவே எல்லோருக்கும் புரியும். அன்று தலைவர் அஸ்ரபிற்கெதிராக பகிரங்க தொலைக்காட்சி விவாதத்தில் பேரினவாதிகளின் சார்பாக ஒரு தேரர் விவாதித்ததைப்போல இன்றும் தலைவர் ரிசாட்டுக்கெதிராக ஆனந்த சாகர தேரர் பகிரங்கமாக தொலைக்காட்சியில் விவாதித்து அதில் தோற்றுப்போய் மூக்குடைந்து போனதையும் கண்டோம். இதில் நாம் அவதானிக்கவேண்டிய விடயம் தலைவர் அஸ்ரபிற்கு பிறகு சிங்கள பேரினவாதிகளால் பகிரங்க விவாதங்களுக்கு அழைக்கப்பட்டு அதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் எனும் வரலாறை தன்னகத்தே கொண்ட ஒரேயொரு தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மட்டுமே.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபிற்கு பிறகு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தை கையேற்றுக்கொண்ட தலைவர் றஊப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கையேற்று பதினைந்து வருடங்களை தாண்டிவிட்ட போதிலும் இவ்வாறான பெரினவாதிகளுடனோ அல்லது வேறு எந்த பகிரங்க நிகழ்ச்சிகளிலோ முஸ்லிம்கள் சார்பான பகிரங்க விவாதத்தில் ஒருபோதுமே கலந்துகொண்டதில்லை. ஏன்? நாம் அறிந்தவரை தமது மக்களின் உரிமைக்காக எந்த முஸ்லிம் அமைச்சர்களும் இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்கவில்லை.
இது ஒன்றுமே போதும் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்திற்கு பொருத்தமான ஒரு தலைவர் ரிசாத் பதியுதீன் மட்டும்தான் என்பதை கட்டியங்கூறுவதரற்கு. இது இவ்வாறு இருக்கும் போது நமது இளைஞர்கள் ஏன் இன்னும் இன்னும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் பின்னால் அலைய வேண்டும், உணர்ச்சியூட்டும் பாசாங்கு அரசியலுக்கு அடி பணிய வேண்டும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் எதிரிகளால் ஒருபோதுமே வீழ்த்த முடியாத ஒரு தலைவராக இருந்த காரணத்தால் எப்போதும் அவரைச்சுற்றி பேரினவாதிகளின் உயிர் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் அந்த தலைவனின் உயிர் நினைத்துப்பார்க்க முடியாத வகையிலே எதிரிகளால் பறிக்கப்பட்டது.
அந்த தலைவனின் ஆளுமையுடனும் அடையாளங்களுடனும் ஓரளவுக்காவது எம்மால் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு  தலைவராக தற்போது அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் இருக்கின்றார் என்பதே மக்கள் கருத்து. மறைந்த தலைவருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தலை விட பல மடங்கு உயிர் அச்சுறுத்தலை ரிசாத் பதியுதீன் தற்போது எதிர்கொண்டுள்ளார். இறைவன் இந்த சகோதரனின் உயிரை பாதுகாக்க வேண்டும்.
மறைந்த தலைவர் உயிரோடு இருக்கும்போது அவரின் பின்னால் நமது சமூகம் ஒட்டுமொத்தமாக அணிதிரளவில்லை. அவர் உயிரோடு இருக்கும்போது அவரின் அருமையும் பெருமையும் நமது மக்களுக்கு தெரிந்திருந்த போதிலும் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. நமது சமூகத்தின் முஸ்லிம் தலைமைகள் அவரை கருவறுப்பதிலேயே இருந்தார்கள்.
ஆனால் அவர் மரணித்த பிறகு அவருடைய ஆளுமையையும் திறமையையும் மெச்சிக்கொண்டு சிலாகித்து பேசுகின்றனர்.
அதுபோலவே தற்கால சூழலில் முஸ்லிம் சமூக அரசியலிலே தனது மக்களின் இருப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்தி சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகத்திறமையாக செயற்படும் சகோதரர் ரிசாத் பதியுதீன் அவர்களை முழு மனதோடு ஏற்று, அவர் பின்னால் அனைவரும் அணிதிரள்வோம். அவருடைய ஜீவிய காலத்திலேயே அவர் பின்னால் அணிதிரண்டு நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்போம்.

By

Related Post